திருத்தந்தை: இயேசுவுக்கு செவிமடுக்க முன்னுரிமை கொடுக்கவேண்டும்

நற்செய்தி நூலின் பக்கங்கள் முன்வைக்கும் சவால்களை எதிர்கொள்ள நம்மை அனுமதிப்போம் – திருத்தந்தை பிரான்சிஸ்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்

இயேசுவின் வார்த்தைகளுக்குச் செவிசாய்ப்பதற்கு எப்போதும் நாம் முன்னுரிமை கொடுக்கும்போது, அது நம்மை மற்றவை நோக்கி வழிநடத்தும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இஞ்ஞாயிறு மூவேளை செப உரையில் கூறியுள்ளார்.

ஜூலை 17, இஞ்ஞாயிறு நண்பகலில் வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு மூவேளை செப உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மார்த்தா, மரியா ஆகிய இரு சகோதரிகள் தங்கள் வீட்டில் இயேசுவை வரவேற்று விருந்தளித்தது குறித்த இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகத்தை (லூக்.10:38-42) மையப்படுத்தி தன் சிந்தனைகளை எடுத்துரைத்தார்.

தம் வீட்டிற்கு வந்த விருந்தாளியான இயேசுவை உபசரிப்பதில் பரபரப்பாகியிருந்த  மார்த்தா, தன் சகோதரி தனக்கு உதவிசெய்யாமல் இயேசுவின் காலடி அருகில் அமர்ந்து அவர் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தது குறித்து அவரிடம் புகார் கூறினார், அப்போது இயேசு மார்த்தாவிடம், நீ பலவற்றைப் பற்றிக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய், ஆனால், மரியாவோ நல்ல பங்கைத் தேர்ந்தெடுத்துக்கொண்டாள், அது அவளிடமிருந்து எடுக்கப்படாது என்று கூறினார் என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இயேசுவின் இப்பதில், வியப்பூட்டுவதாய் இருந்தாலும், அவர் பலநேரங்களில் நம் சிந்தனைமுறையைப் புரட்டிப்போடுகிறார் என்றுரைத்த திருத்தந்தை, மார்த்தாவின் தாராளமிக்கப் பராமரிப்பை பாராட்டிய அதேவேளை, மரியாவின் மனநிலைக்கு இயேசு முன்னுரிமை கொடுக்கிறார் என்று கூறியுள்ளார்.

முன்னுரிமைகளின் வரிசை

மார்த்தாவின் கருத்தியல்படி, முதலில் கடமை, பின்னர் மனமகிழ்வாக இருக்கின்றது எனவும், விருந்தோம்பல் என்பது நேர்த்தியான சொற்களாலானது அல்ல, மாறாக,  அவ்வீட்டில் நடைபெறும் அனைத்தும், தான் வரவேற்படுகின்றோம் என்பதை விருந்தினர் உணரவைப்பதாக இருக்கவேண்டும்  என்பதை நன்கு உணர்ந்த இயேசு, மார்த்தாவின் முயற்சிகளை அங்கீகரித்த அதேவேளை, முன்னுரிமைகளில் புதிய வரிசை இருக்கின்றது என்பதை உணரவைக்கின்றார் என திருத்தந்தை கூறியுள்ளார்.

முதலில் உற்றுக்கேட்கவேண்டும்

முதலில் முன்னுரிமை கொடுக்கப்படவேண்டியது, இயேசுவின் திருச்சொற்களுக்குச் செவிமடுக்கவேண்டும் என்பதாகும், இந்த சிறந்த பகுதியை மரியா உணர்ந்துகொண்டார் என்றுரைத்த திருத்தந்தை, இயேசுவின் வார்த்தைகள், நம் வாழ்வைத் தொடுகின்றன, வடிவமைக்கின்றன, தீமையிலிருந்து விடுதலையளிக்கின்றன, மற்றும், அவை, நம்மில் மகிழ்வை ஏற்படுத்துகின்றன என்று எடுத்தியம்பினார்.

இதனாலேயே மரியா இயேசுவின் வார்த்தைகளைக் கேட்பதற்கு முன்னுரிமை அளித்தார் என்றும், அவ்வாறு கேட்கும்போது, அதன் பயன் பின்னால் நமக்குக் கிடைக்கும் என்றும் விளக்கிய திருத்தந்தை, இயேசுவின் திருச்சொற்களுக்குச் செவிமடுக்க இவ்விடுமுறை நாள்களைப் பயன்படுத்துமாறு கிறிஸ்தவர்களைக் கேட்டுக்கொண்டார்.   

இக்காலத்தில் தினசரி வாழ்வில் தியானம் செய்வதற்கு நேரங்களைக் கண்டுபிடிப்பது கடினமாக இருக்கின்றது, எனவே, கோடை விடுமுறை நாள்களில் நற்செய்தி நூலை, அவசரமின்றி வாசிப்பதற்கு நல்லதொரு காலம் என்றும், நற்செய்தி நூலின் பக்கங்கள் முன்வைக்கும் சவால்களை எதிர்கொள்ள நம்மை அனுமதிப்போம் என்றும் கூறியுள்ள திருத்தந்தை, இயேசு சொல்வதுபடி நடக்கின்றேனா என நம்மையே நாம் கேட்டுக்கொள்வோம் என்றும் கூறியுள்ளார்.

ஒரு நாளைத் தொடங்குகையில், அந்நாளின் வேலைகளில் பரபரப்பாக இருக்கின்றேனா அல்லது, இறைவார்த்தையில் உள்தூண்டுதல் பெறுவதை முதலில் தேடுகிறேனா என்று நம்மையே நாம் கேட்டுக்கொள்வோம் என்றும் கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம் வாழ்வில் சிறந்த பகுதியைத் தேர்ந்துகொள்ள அன்னை மரியாவின் உதவியை நாடுவோம் என்றுரைத்து மூவேளை செப உரையை நிறைவுசெய்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 July 2022, 12:30