தேடுதல்

திருத்தந்தை: நல்ல சமாரியர் போல பரிவன்பைக் கொண்டிருங்கள்

கிறிஸ்துவின் பாதச்சுவடுகளைப் பின்பற்றுவதன் வழியாக கிறிஸ்தவர்கள், "பயணிகளாக" மாறுகின்றனர் – திருத்தந்தை பிரான்சிஸ்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்

பரிவன்பு, மற்றும், அக்கறை ஆகிய பண்புகள் கொண்ட நல்ல சமாரியரைப் பின்பற்றுவதன் வழியாக, இயேசு சுட்டிக்காட்டிய பாதையின் சீடர்களாகத் திகழமுடியும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இஞ்ஞாயிறு மூவேளை செப உரையில் கூறியுள்ளார்.

ஜூலை 10, இஞ்ஞாயிறு நண்பகலில் வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு, இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகமான நல்ல சமாரியர் உவமையை (லூக்.10: 25-37) மையப்படுத்தி மூவேளை செப உரையாற்றிய திருத்தந்தை, இந்த உவமை,  தேவையில் இருப்போருக்கு உதவவேண்டிய நம் கடமையை வலியுறுத்துகிறது என்று கூறியுள்ளார்.  

இயேசு என்ற வழியின் சீடர்கள்

பயணம் மேற்கொண்டிருந்த நல்ல சமாரியர், தான் செல்லவேண்டிய இடம், மற்றும், பயணத் திட்டங்களைக் கைவிட்டு, தான் சென்ற பாதையில் நிகழ்வது குறித்து கவனம் செலுத்தினார், இதனையே நம் ஆண்டவர், தம் சீடர்களாக இருக்கின்ற கிறிஸ்தவர்களுக்குப் போதிக்கிறார் என்று திருத்தந்தை எடுத்துரைத்தார்.

நாம் செல்லும் பாதையில் இறுதி இலக்கு நோக்கி முன்னோக்கிச் செல்லவேண்டும், அதேநேரம், அப்பாதையில் நாம் எடுத்துவைக்கும் அடிகளில் அங்குமிங்கும் மிகுந்த கவனம் செலுத்தவேண்டும் என்று உரைத்த திருத்தந்தை, நல்ல சமாரியர் போன்று, கிறிஸ்தவர்கள், இயேசுவைப் பின்பற்றி நடக்கவேண்டும், இவ்வாறு அவர்கள், அவரின் ‘வழியின் சீடர்களாக’ மாறுவார்கள் என்று எடுத்தியம்பினார்.

ஆண்டவர் ஒரே இடத்தில் அமர்ந்திருந்தவர் அல்ல, மாறாக அவர் மக்களைச் சந்திக்கவும், நோயுற்றோரைக் குணமாக்கவும், கிராமங்கள் மற்றும், நகரங்களைப் பார்வையிடவும் அவர் எப்போதும் சாலையில் சென்று கொண்டிருந்தார் என்று விளக்கிய திருத்தந்தை, இந்த உவமை, கடவுளின் பரிவன்போடு மற்றவரைப் பார்த்து, அவர்களிடம் அவ்வன்போடு நடந்துகொள்ள திருவருளை இறைஞ்சவேண்டும் என்பதை உணர்த்துகிறது என்றார்.

பரிவன்பைக் கொண்டிருங்கள்

கிறிஸ்துவின் பாதச்சுவடுகளைப் பின்பற்றுவதன் வழியாக கிறிஸ்தவர்கள், "பயணிகளாக" மாறுகின்றனர் என்றும், எதார்த்தத்தைச் சரியாகப் புரிந்துகொள்ள கற்றுக்கொள்கிறார்கள் என்றும், இவ்வுவமையில் வருகின்ற குரு மற்றும், லேவியர் போலல்லாமல், முற்சார்பு எண்ணங்களைத் தவிர்த்து, பரிவன்பைக் கொண்டிருக்கக் கற்றுக்கொள்கிறார்கள் என்றும் திருத்தந்தை கூறியுள்ளார்.  

தன்னலத்தோடு மற்றவரைப் புறக்கணிக்கும் நடத்தையிலிருந்து விடுபட்டு, ஆண்டவரின் பாதையில் நடப்பதற்கும், நம் பாதையில் சந்திப்பவர்கள் மீது, குறிப்பாக, துன்புறுவோர் மற்றும், தேவையில் இருப்போர் மீது பரிவு காட்டவும், அவர்களை நேருக்குநேர் பார்த்து அவர்களுக்கு அருகில் சென்று அவர்களின் தேவைகளை நிறைவேற்றவும் நமக்கு நல்மனதை அருளுமாறு கடவுளிடம் மன்றாடுவோம் என்று திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.

இயேசு சுட்டிக்காட்டும் இந்தப் பயணத்தில் நாம் வளரவும், உணமையான வழியாகிய இயேசுவை நமக்குக் காட்டவும் அன்னை மரியாவின் பரிந்துரையை நாடுவோம் எனவும் உரைத்து, மூவேளை செப உரையை நிறைவுசெய்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 July 2022, 13:28

மூவேளை செபம் என்பது, கடவுள் மனுவுரு எடுத்த பேருண்மையை நினைவுகூர்ந்து ஒரு நாளில் மூன்றுமுறை : மூவேளை செபத்திற்கென மணி ஒலிக்கும் காலை 6 மணி, நண்பகல் மற்றும் மாலை 6 மணியளவில் செபிக்கும் செபமாகும். ஆண்டவருடைய தூதர் மரியாளுக்குத் தூதுரைத்தார் எனத் தொடங்கும் மூவேளை செபத்தின் முதல் வரியிலிருந்து, மூவேளை என்ற பெயர் வந்துள்ளது. இந்த முதல்வரியானது, இயேசு கிறிஸ்து மனுஉரு எடுத்தது மற்றும் மூன்று முறை அருள் நிறைந்த மரியே எனச் சொல்லும் எளிய பகுதியை உள்ளடக்கியது. இந்தச் செபம்,  புனித பேதுரு வளாகத்தில், ஞாயிறு மற்றும் பெருவிழா நாள்களின் நண்பகலில்  திருத்தந்தையால் சொல்லப்படுகின்றது. மூவேளை செபத்தைச் சொல்வதற்கு முன்னர், திருத்தந்தை,  அந்நாளைய வாசகங்களிலிருந்து தூண்டுதல்பெற்ற சிறு உரையும் நிகழ்த்துவார். அதைத் தொடர்ந்து திருப்பயணிகளை வாழ்த்துவார். கிறிஸ்துவின் உயிர்ப்பு முதல், தூய ஆவியார் பெருவிழா வரை,  மூவேளை செபத்திற்குப் பதிலாக அல்லேலூயா வாழ்த்தொலி செபம் செபிக்கப்படுகிறது. இச்செபம், இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் நினைவாகச் செக்கப்படுகிறது. இச்செபத்தின் இறுதியில், தந்தைக்கும் மகனுக்கும், தூய ஆவியாருக்கும்... மூன்று முறை சொல்லப்படுகின்றது.

அண்மை மூவேளை செபம் / அல்லேலூயா வாழ்த்தொலி

அனைத்தையும் படிக்கவும் >