நாம் பாதுகாக்கப்பட வேண்டிய வரலாற்றின் குழந்தைகள்: திருத்தந்தை

“நன்மை, கனிந்த அன்பு மற்றும் ஞானம் ஆகியவை மனிதகுலத்தின் உறுதியான வேர்கள் என்பதை நாம் தாத்தாக்கள் பாட்டிகளிடமிருந்து கற்றுக்கொண்டுள்ளோம்” : திருத்தந்தை பிரான்சிஸ்

 

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

எட்மண்டனில் உள்ள காமென்வெல்த் அரங்கத்தில் நடைபெற்ற புனிதர்களான சுவக்கின் அன்னா திருநாள் திருப்பலியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய மறையுரை.

அன்புச் சகோதரர் சகோதரிகளே இன்று நாம் இயேசுவின் தாத்தா பாட்டியின் விழாவைக் கொண்டாடுகிறோம்.  சுவக்கின் அன்னாவின் வீட்டில்தான் குழந்தை இயேசு தனது மூத்த உறவினர்களை அறிந்து கொண்டார், மேலும் அவரது தாத்தா பாட்டியின் நெருக்கம், கனிந்த அன்பு மற்றும் ஞானத்தை அனுபவித்தார். இந்நேரத்தில் நமது தாத்தாக்கள், பாட்டிகளை நினைவு கூர்ந்து இரண்டு காரியங்கள் குறித்துச் சிந்திப்போம்.

பாதுகாக்கப்பட வேண்டிய வரலாற்றின் குழந்தைகள்

எட்மண்டனில் உள்ள காமென்வெல்த் அரங்கத்தில் திருப்பலி நிறைவேற்றும் திருத்தந்தை
எட்மண்டனில் உள்ள காமென்வெல்த் அரங்கத்தில் திருப்பலி நிறைவேற்றும் திருத்தந்தை

முதலாவதாக, நாம் பாதுகாக்கப்பட வேண்டிய வரலாற்றின் குழந்தைகள் என்பதை உணர்வோம். தீவுகளைப் போன்று, நாம் தனிமைப்படுத்தப்பட்ட தனிநபர்கள் அல்ல. நம்மில் யாருமே தானாக இந்த உலகத்தில் உதித்துவிடவில்லை, மாறாக, நமக்கென்று தனிப்பட்ட பாரம்பரியமும் வரலாறும் உண்டு.

‘தங்களது வழிமரபில் அவர்கள் நிலைத்திருக்கிறார்கள். அவர்களுடைய உரிமைச்சொத்து அவர்களின் வழித்தோன்றல்களுக்கும் கிடைக்கும்’ (சீராக் 44:11) என்று சீராக் புத்தகம் கூறுவதுபோன்று, இந்த வரலாற்றை நாம் தேர்ந்துகொள்ளவில்லை, மாறாக, இது நமக்கு கொடையாகக் கொடுக்கப்பட்ட ஒன்று.

உண்மையில் நாம் யார், நாம் எவ்வளவு விலைமதிப்பற்றவர்கள் என்பதை உணர்ந்துகொள்வதற்கு, நம் பாரம்பரியத்தில் வந்த ஆண்களையும் பெண்களையும் நம்மில் ஒரு பகுதியாக ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர்கள் தங்களைப் பற்றி வெறுமனே சிந்திக்கவில்லை, ஆனால் வாழ்க்கையின் கருவூலத்தை நமக்குக் கொடுத்தார்கள்.

நமக்கு முந்தைய வரலாற்றிலிருந்து நாம் பெற்றுக்கொண்ட உயரிய கொடையான இந்த வாழ்விற்காக நமது தாத்தாக்கள் பாட்டிகளுக்கு நன்றி கூறுவோம். நன்மை, கனிந்த அன்பு மற்றும் ஞானம் ஆகியவை மனிதகுலத்தின் உறுதியான வேர்கள் என்பதை நாம் அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டுள்ளோம். நம்மில் பலர் நற்செய்தியின் நறுமணத்தை நமது தாத்தாக்கள் பாட்டிகளின் வீடுகளில் சுவாசித்தோம். இது நமது நம்பிக்கையின் வலிமை என்பதை நம் இல்லங்களில் உணர வைக்கிறது.

இதுதான் நமது வரலாறு, இதற்கு நாம் வாரிசுகள். நாம் அவர்களின் பேரக் குழந்தைகள் என்பதால் இவ்வரலாற்றுப் பாரம்பரியத்தைப் பாதுகாக்க அழைக்கப்படுகிறோம். அன்பு ஒருபோதும் கட்டாயப்படுத்தப்படுவதில்லை என்பதை நமது தாத்தாக்கள் பாட்டிகளிடமிருந்து நாம் கற்றுக்கொண்டோம். அவ்வன்பு ஒருபோதும் மற்றவர்களின் உள்மனச் சுதந்திரத்தை பறிக்காது என்பதை உணர்வோம்.

சுவக்கினும் அன்னாவும் அன்னை மரியாவை இப்படித்தான் அன்பு செய்தனர். அன்னை மரியா இயேசுவின்மீது இதே அன்பை காட்டியதுடன் அவர்ன் பணிவாழ்வு முழுவதும் அவரை அரவணைத்துக்கொண்டு அவருடன் உடன் பயணித்தார்.

வரலாற்றின் ஆசிரியர்கள்

காமென்வெல்த் அரங்கத்திற்கு வரும் திருத்தந்தைக்கு மக்கள் தரும் உற்சாக வரவேற்பு
காமென்வெல்த் அரங்கத்திற்கு வரும் திருத்தந்தைக்கு மக்கள் தரும் உற்சாக வரவேற்பு

இப்போது இரண்டாவது முக்கிய காரியம் குறித்து சிந்திப்போம். பாதுகாக்கப்பட வேண்டிய வரலாற்றின் குழந்தைகளாக இருப்பதோடு, இன்னும் எழுதப்படாத வரலாற்றின் ஆசிரியர்களும் நாம் என்பதையும் இப்போது உணர்வோம்.

நாம் அனைவரும் ஒருவரின் குழந்தைகள், பிறரால் கருத்தாங்கப்பட்டு வடிவமைக்கப்படுகிறோம், ஆனால் நாம் முதியோர்களாக மாறும்போது, ​​​​இன்னொருவருக்கு தந்தையாக, தாயாக அல்லது தாத்தா பாட்டியாக இருப்பதற்கு நாம் நமது வாழ்வை தியாகம் செய்ய அழைக்கப்படுகிறோம்.

உயிர் கொடுக்கும் நீரானது வேரிலிருந்து கிளைகளுக்கும், இலைகளுக்கும், பூக்களுக்கும், பிறகு மரத்தின் கனிகளுக்கும் பயணிபது போல  உண்மையான பாரம்பரியம் கீழிருந்து மேலாக இந்தச் செங்குத்து பரிமாணத்தில் வெளிப்படுத்தப்படுகிறது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது

நமது  தாத்தாக்கள் பாட்டிகள், மற்றும், முதியோர், மிகவும் நியாயமான, சகோதரத்துவ மற்றும் ஒற்றுமையான உலகத்தைக் காண விரும்பியதுடன்,  நமக்கு நல்லதொரு எதிர்காலத்தை வழங்கவும் போராடினர். இப்போது, ​​​​அவர்களின் இந்த எண்ணங்கள் அழிந்துவிடாமல் பார்த்துக்கொள்ளவேண்டிய பொறுப்பு நம்மிடம்தான் உள்ளது.

சிறந்ததொரு கருவூலமாக

காமென்வெல்த் அரங்கத்தில் ஆயர்களுடன் திருத்தந்தை
காமென்வெல்த் அரங்கத்தில் ஆயர்களுடன் திருத்தந்தை

நான் வாழ்வு தரக்கூடியவனாக இருக்கின்றேனா? முன்பு இல்லாத ஒரு புதிய மற்றும் புதுப்பிக்கப்பட்ட அன்பை வரலாற்றில் நான் அறிமுகம் செய்கின்றேனா? நான் என்னைச் சுற்றியுள்ளவர்களுக்கு நற்செய்தியை அறிவிக்கின்றேனா? எனக்கு முன்பிருந்தவர்கள் எனக்காகச் செய்ததைப் போல நான் மற்றவர்களுக்குச் சுதந்திரமாகப் பணியாற்றுகின்றேனா? எனது திருஅவைக்கும், நான் வாழும் எனது நகரத்திற்கும், எனது சமுதாயத்திற்கும் நான் என்ன செய்து கொண்டிருக்கின்றேன்? ஆகிய கேள்விகளை எழுப்பி அதற்கான விடைகளைத் தேடுவோம்.

ஒரு புதிய வரலாற்றின் கைவினைஞர்களாகவும், நம்பிக்கையின் நெசவாளர்களாகவும், எதிர்காலத்தை உருவாக்குபவர்களாகவும், அமைதியை உருவாக்குபவர்களாகவும் நாம் இருக்க வேண்டும் என்று கடவுள் விரும்புகிறார்.

ஆகவே, நமக்கு உயிர் கொடுத்த வரலாற்றைப் போற்றவும், நம் பங்கிற்கு, வாழ்வு தரும் வரலாற்றை உருவாக்கவும் புனிதர்களான சுவக்கின் அன்னா நமக்காக இறைவனிடம் பரிந்துரைக்கட்டும். நமது தாத்தாக்கள், பாட்டிகள் மற்றும் முதியவர்களை மதிப்பது, சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்காக நம்மிடையே அவர்களின் இருப்பை சிறந்ததொரு கருவூலமாகப் பாதுகாப்பது போன்ற நமது ஆன்மிகக் கடமைகளை அவர்கள் நமக்கு நினைவூட்டட்டும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 July 2022, 14:04