தேடுதல்

வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவிலில் திருப்பலி வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவிலில் திருப்பலி  

ஜூலை 3, வத்திக்கானில், உரோம்வாழ் காங்கோ மக்களுக்கு திருப்பலி

ஜூலை 1-8 வரை தான் மேற்கொள்ளவிருக்கும் இரு ஆப்ரிக்க நாடுகளுக்கான பயணத்தில் அந்நாடுகளில் அதிகாரிகளைச் சந்திப்பது திட்டமிடப்பட்டிருந்தாலும், இப்பயணம், தூதரகம் சார்ந்தது அல்ல, மாறாக, மேய்ப்புப்பணி சார்ந்தது - கர்தினால் பரோலின்

மேரி தெரேசா: வத்திக்கான்

ஜூலை 3, இஞ்ஞாயிறு உரோம் நேரம் காலை 9.30 மணிக்கு, வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவிலில் உரோம் நகரில் வாழ்கின்ற காங்கோ மக்களாட்சி குடியரசின் மக்களுக்கு திருப்பலி நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், காங்கோ மக்களாட்சி குடியரசு மற்றும், தென் சூடான் நாடுகளுக்கு, இந்த ஜூலை மாதத்தில் மேற்கொள்ளவிருந்த திருத்தூதுப் பயணத்தை முழங்கால் மூட்டுவலி காரணமாகத் தள்ளிவைத்துள்ளவேளை, உரோம் நகரில் வாழ்கின்ற காங்கோ மக்களாட்சி குடியரசின் மக்களுக்கு வத்திக்கானில் திருப்பலி நிறைவேற்றப்படுகிறது.

ஆப்ரிக்க நாடுகளில் கர்தினால் பரோலின்

மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நாடுகளின் மக்களோடு தனது உடனிருப்பைத் தெரிவிக்கும்வண்ணம், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களை அந்நாடுகளுக்கு அனுப்பியுள்ளார்.

ஜூலை 1, இவ்வெள்ளியன்று, இந்த இரு ஆப்ரிக்க நாடுகளுக்குப் புறப்பட்டுள்ள கர்தினால் பரோலின் அவர்கள், இந்நாடுகளின் மக்கள் மீது தான் வைத்திருக்கும் பாசத்தை தெரிவிக்கும்வண்ணம், திருத்தந்தை தன்னை அனுப்பியிருப்பது தான் கவுரவிக்கப்படுவதாக உணர்வதாகவும், உடல்நிலை சரியானபின்னர், திருத்தந்தை அந்நாடுகளுக்குச் செல்வார் எனவும் கூறியுள்ளார்.

இம்மாதம் ஒன்றாந்தேதி முதல் எட்டாம் தேதி வரை தான் மேற்கொள்ளவிருக்கும் இப்பயணம் மிகவும் முக்கியமானது என்றும், இந்நாடுகளில் அதிகாரிகளைச் சந்திப்பது திட்டமிடப்பட்டிருந்தாலும், இப்பயணம், தூதரகம் சார்ந்தது அல்ல, மாறாக, மேய்ப்புப்பணி சார்ந்தது என்றும், கர்தினால் பரோலின் அவர்கள் கூறியுள்ளார்.

காங்கோ மக்களாட்சி குடியரசின் தலைநகர் கின்ஷாசாவுக்குச் செல்வதற்காக, பாரிஸ் பன்னாட்டு விமானநிலையத்தில் காத்திருந்தபோது, செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறியுள்ளார், திருப்பீடச் செயலர் கர்தினால் பரோலின். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 ஜூலை 2022, 14:16