உலக புகையிலை எதிர்ப்பு நாள், சென்னை உலக புகையிலை எதிர்ப்பு நாள், சென்னை 

திருத்தந்தை: உயிரைக் காப்பாற்ற வேண்டியது முக்கியம்

உடல் ஆரோக்கியம் என்பது, இறைவன் நமக்கு அளித்துள்ள உயரிய கொடை என்பதைப் பலர் அறிந்துகொள்ள புகையிலை எதிர்ப்புத் தினம் உதவுகிறது: திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

உடல் ஆரோக்கியம் என்பது, கடவுள் கொடுத்த வரம் என்றும், ஆண், பெண் இருபாலரும் அதனைப் பொறுப்புடன் கவனித்துக் கொள்ளுமாறும், உலக புகையிலை எதிர்ப்பு தினத்தன்று அழைப்புவிடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மே 31, இச்செவ்வாயன்று,  உலக புகையிலை எதிர்ப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்ட நிலையில், இவ்வாறு அழைப்புவிடுத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வாழ்க்கை கலாச்சாரம் என்பது, கிறிஸ்தவர்களாகிய நாம் அனைவருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டிய ஒரு பாரம்பரியம்" என்று கூறி, இப்புகையிலை எதிர்ப்புப் பிரச்சாரத்தில் தனது குரலையும் இணைத்துள்ளார்.

மே 25, புதனன்று,  திருச்சிலுவை பாப்பிறைப் பல்கலைக்கழகத்தில் "புகைப்பிடித்தல் பிரச்சனையை நோக்கிய தீங்கு குறைப்பில் கத்தோலிக்கத் திருஅவை" என்ற தலைப்பில் நடைபெற்ற அனைத்துலகக் கருத்தரங்கின் பரப்புரையாளர்களில் ஒருவரான அர்ஜென்டினா ஆயர் Ariel Edgardo Torrado Mosconi அவர்களுக்கு அனுப்பிய செய்தி ஒன்றில் இது குறித்து தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஒவ்வொரு மனிதரின் வாழ்க்கையும், தனித்துவமான மற்றும், மீண்டும் மீண்டும் கட்டியெழுப்பிட முடியாத அளவிற்கு உயர்மதிப்பீடுகளைக் கொண்டுள்ளது என்பது எப்போதும் தைரியமாக அறிவிக்கப்பட வேண்டும் என்றும், தான் அனுப்பிய அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அனைவரின் உடல்நலனைக் கருத்தில்கொண்டு, கடந்த 2018ம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து வத்திக்கானுக்குள் புகைப் பூஞ்சுருள்களின் விற்பனைக்குத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தடை விதித்து உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 June 2022, 13:49