காங்கோ திருப்பலி நூலின் பிரெஞ்சு மொழி பெயர்ப்புக்கு வரவேற்பு
மேரி தெரேசா: வத்திக்கான்
“திருத்தந்தை பிரான்சிஸ் மற்றும், சயீரிலுள்ள மறைமாவட்டங்களுக்கு உரோமைத் திருப்பலி நூல்” என்ற நூலின் பிரெஞ்சு மொழி பெயர்ப்பை (Le Pape François et le Missel Roman pour les dioceses du Zaïre) வரவேற்று, அதற்கு முன்னுரை எழுதியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
காங்கோ சனநாயக குடியரசு என தற்போது அழைக்கப்படும் சயீர் (Zaïre) நாட்டின் பயன்பாட்டிற்கென இருந்த உரோமைத் திருப்பலி நூலை, அருள்சகோதரி Rita Mboshu Kongo அவர்கள் பிரெஞ்சு மொழியில் மொழி பெயர்த்து, வத்திக்கான் பதிப்பகம், ஜூன் 20 இத்திங்களன்று அந்நூலை வெளியிட்டுள்ளது.
இந்நூல், திருவழிபாட்டின் மதிப்பிடப்பட முடியாத பங்கை அழுத்திக் கூறியிருக்கிறது என்றுரைத்த திருத்தந்தை, காங்கோ மக்கள், தங்களின் மூதாதையரிடமிருந்து பெற்ற கிறிஸ்தவ நம்பிக்கையை அளிக்கும் திருஅவையின் செயல்பாடுகளுக்கு இந்நூல், பெரிய அளவில் வளமை சேர்ப்பதாக உள்ளது என்று எழுதியுள்ளார்.
“திருத்தந்தை பிரான்சிஸ் மற்றும், சயீரிலுள்ள மறைமாவட்டங்களுக்கு உரோமைத் திருப்பலி நூல்”, இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் திருவழிபாட்டில் கொண்டுவந்த சீர்திருத்தத்தின் அடிப்படையில் பிறந்த பண்பாட்டுமயமாக்கப்பட்ட ஒரே உரோமைத் திருப்பலி நூல் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பாராட்டியுள்ளார்.
இந்த பிரெஞ்சு மொழி திருப்பலி நூல், நீண்டகால ஆய்வு, மற்றும், திருப்பீடத்திற்கும், காங்கோ திருஅவைக்கும் இடையே நிலவும் ஒத்துழைப்பின் ஆகியவற்றின் கனி என்று எழுதியுள்ள திருத்தந்தை, இந்நூல் காங்கோ மக்கள், முழுமையாக ஒன்றித்து தங்களின் மொழியில் செபிக்கவும், தங்களுக்குப் பழக்கப்பட்ட அடையாளங்களைப் பயன்படுத்தவும் அனுமதிக்கப்படுன்றார் என்றார் திருத்தந்தை.
இம்மொழி பெயர்ப்பு, நற்செய்தியை பண்பாட்டுமயமாக்குவதற்கு மற்ற தலத்திருஅவைகளுக்கும் முன்மாதிரிகையாய் உள்ளது எனவும், காங்கோ திருஅவை அருளடையாளங்கள் வழிபாட்டுமுறையை இதேபோல் மொழிபெயர்ப்பதற்கு அர்ப்பணிக்க வேண்டும் என்று கேட்டுகொண்டுள்ளார்.
இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள திருவழிபாடு பற்றிய “Sacrosanctum Concilium” (1963) கொள்கைத்திரட்டின்படி., இலத்தீன் வழிபாட்டுமுறை திருப்பலி நூலை, காங்கோ மொழி மற்றும், கலாச்சாரத்திற்கு ஏற்ற முறையில் அமைத்து அந்நாட்டில் பயன்பாட்டில் இருந்தது.
காங்கோ கிறிஸ்தவ நாடு
வருகிற ஜூலை மாத தொடக்கத்தில் திட்டமிடப்பட்டிருந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் காங்கோ சனநாயக குடியரசு மற்றும், தென் சூடான் நாடுகளுக்கான திருத்தூதுப் பயணம், அவருக்கு ஏற்பட்டுள்ள முழங்கால் மூட்டுவலி காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இச்சூழலில் இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, வருகிற ஜூலை 3ம் தேதி காங்கோ மக்களுக்கு வத்திக்கானில் திருத்தந்தை திருப்பலி நிறைவேற்றுவதாய் அறிவித்திருக்கிறார்.
15ம் நூற்றாண்டில் போர்த்துக்கீசிய மறைப்பணியாளர்களால், காங்கோ அரசர் Kongo Nzinga Nkuwu அவர்கள் மனம் மாறியதைத் தொடர்ந்து அந்நாட்டில் கிறிஸ்தவம் பரவியது. தற்போது காங்கோவில் 90 விழுக்காட்டினர் கிறிஸ்தவர்கள்.
1985ம் ஆண்டில் திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்கள், சயீர் நாட்டுக்குத் திருத்துப்பயணம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்