தேடுதல்

உக்ரைனில் போரால் ஏற்பட்டுள்ள அழிவுகள் உக்ரைனில் போரால் ஏற்பட்டுள்ள அழிவுகள்  

திருத்தந்தை: உக்ரைனில் போர் நிறுத்தப்பட தொடர்ந்து செபியுங்கள்

எந்த ஒரு குழந்தையின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படக் கூடாது – திருத்தந்தை பிரான்சிஸ்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்

உக்ரைன் நாட்டில் இடம்பெற்றுவரும் போர், வாடிக்கையான ஒன்றாக நோக்கப்பட்டு வருவது குறித்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூன் 12, இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரைக்குப்பின்னர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இஞ்ஞாயிறு பகல் 12 மணிக்கு, கடும் வெயிலில் வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு, மூவொரு கடவுள் பற்றி மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை, அதற்குப்பின்னர் உக்ரைன் போர் குறித்து குறிப்பிட்டு, இந்தக் கடுந்துயரால் துன்புறும் மக்களை நம் செபங்கள் மற்றும், இதயங்களில் நினைவுகூர்வோம் என்று கேட்டுக்கொண்டார்.

போரால் பெருந்துன்பங்களை எதிர்கொள்ளும் உக்ரைன் மக்களின் நினைவு, தனது இதயத்தில் எப்போதும் இருக்கின்றது எனவும் உரைத்த திருத்தந்தை, நாள்கள் செல்லச் செல்ல, போரால் துயருறும் மக்கள் மீது அக்கறையின்றி இருக்கும்நிலை வளர்ந்து வருகின்றது எனவும், அமைதிக்காகத் தொடர்ந்து செபிப்போம் எனவும் கேட்டுக்கொண்டார்.

சிறார் தொழில்முறை எதிர்ப்பு நாள்

மேலும், ஜூன் 12, இஞ்ஞாயிறன்று கடைப்பிடிக்கப்பட்ட சிறார் தொழில்முறை எதிர்ப்பு நாள் பற்றியும் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சிறார் தொழில் என்ற அவமானம் ஒழிக்கப்படுமாறு அழைப்புவிடுத்தார்.

எந்த ஒரு குழந்தையும் கட்டாய வேலைக்கு உட்படுத்தப்படக் கூடாது என்றும், அதன் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படக் கூடாது என்றும், சிறாரை வேலைக்குப் பயன்படுத்துவது, நம் எல்லாரையும் பாதிக்கின்ற பயங்கரமான நிலை என்றும், திருத்தந்தை கூறியுள்ளார்.

"சிறார் தொழில்முறையை நிறுத்துவதற்கு உலகளாவிய சமூகப் பாதுகாப்பு" என்ற தலைப்பில் இஞ்ஞாயிறன்று, சிறார் தொழில்முறை எதிர்ப்பு நாள் கடைப்பிடிக்கப்பட்டது.

2020ம் ஆண்டின் துவக்கத்தில், உலகிலுள்ள ஐந்தும், அதற்கு மேற்பட்ட சிறாரில் பத்தில் ஒருவர், தொழில்முறையில் சிக்கியிருந்தனர் என்று, ஐ.நா. அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 June 2022, 16:09