தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்  

திருத்தந்தை: ஒரு திருஅவையாக நாம் கனவு காணவேண்டும்

பங்களாதேஷின் Barishal மறைமாவட்டத்தின் புதிய ஆயராக, Rajshahi மறைமாவட்டத்தின் அருள்பணி Emmanuel Rozario அவர்களை நியமித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான்

கடவுளுக்குச் சான்றுகளாய் விளங்குவதற்கு, ஒரு திருஅவையாக நாம் கனவு காணவேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூன் 21, இச்செவ்வாயன்று தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள குறுஞ்செய்தியில் கூறியுள்ளார்.

ஒரு திருஅவையாக நாம் கனவு காணவேண்டிய தேவை உள்ளது, எப்போதும் இளமையாக இருக்கின்ற கடவுளுக்குச் சாட்சிகளாய் வாழ்வதற்கு, ஆர்வமும், இளமையின் பேரார்வமும் நமக்குத் தேவைப்படுகின்றன என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.

Barishal மறைமாவட்டத்திற்கு புதிய ஆயர்

மேலும், பங்களாதேஷின் Barishal மறைமாவட்டத்தின் புதிய ஆயராக, இதுவரை அந்நாட்டின் Rajshahi மறைமாவட்டத்தில் முதன்மைக் குருவாகப் பணியாற்றிய அருள்பணி Emmanuel Kanon Rozario அவர்களை, ஜூன் 21, இத்திங்களன்று நியமித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

1963ம் ஆண்டில் பங்களாதேஷின் Rajshahi மறைமாவட்டத்தில் Pabna என்ற ஊரில் பிறந்த புதிய ஆயர் Emmanuel Kanon Rozario அவர்கள், டாக்கா தூய ஆவி இறையியல் கல்லூரியில் குருத்துவக் கல்வியை முடித்து 1993ம் ஆண்டில் அருள்பணியாளராகத் திருநிலைப்படுத்தப்பட்டார்.

உரோம் உர்பான் பாப்பிறை பல்கலைக்கழகத்தில் விவிலிய இறையியல் கல்வியை (1997-2002) முடித்த இவர், டாக்கா தூய ஆவி இறையியல் கல்லூரியின் தலைவராகப் பணியாற்றியுள்ளார். இவர், 2021ம் ஆண்டிலிருந்து Rajshahi மறைமாவட்டத்தின் முதன்மைக் குருவாகவும், ஆசிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின் (FABC) இளையோர் பணிக்குழு, மற்றும், பங்களாதேஷ் ஆயர் பேரவையின் கோட்பாட்டுப் பணிக்குழுவின் செயலராகவும் பணியாற்றியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 June 2022, 13:01