திருத்தந்தை: வருங்காலத்தை இன்றே கட்டியெழுப்புவோம்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்
வருங்காலத்தைக் கட்டியெழுப்புவதில் இறைத்தந்தையோடு நாம் ஒத்துழைக்க விரும்பினால், புலம்பெயர்ந்துள்ள நம் சகோதரர் சகோதரிகளோடு இணைந்து அதனை ஆற்றுவோம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திங்களன்று கூறியுள்ளார்.
ஜூன் 20, இத்திங்களன்று ஐ.நா. நிறுவனம் சிறப்பித்த ஏதிலியர் உலக நாளை மையப்படுத்தி, தன் டுவிட்டர் செய்தியை பதிவுசெய்துள்ள திருத்தந்தை, வருங்காலத்தை இன்றே கட்டியெழுப்புவோம், ஏனெனில் வருங்காலம் இன்றே தொடங்குகிறது, மற்றும், அது, நம் ஒவ்வொருவரிடமும் தொடங்குகிறது என்ற சொற்களை வெளியிட்டுள்ளார்.
உலக ஏதிலியர் நாள்
மேலும், உலக ஏதிலியர் நாளுக்கென்று செய்தி வெளியிட்டுள்ள ஐ.நா. தலைமை பொதுச் செயலர் அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள், போர், வன்முறை மற்றும், சித்ரவதைகளுக்கு அஞ்சி புலம்பெயரும் மக்களின் துணிச்சல் குறித்து சிந்திக்கவும், அவர்கள் மீது பரிவன்பு காட்டுகின்றவர்களை அங்கீகரிக்கவும் இந்நாள் அழைப்புவிடுக்கின்றது என்று கூறியுள்ளார்.
உலக அளவில் ஏதிலியரின் எண்ணிக்கை, மிகவும் அதிகரித்துள்ளது, உக்ரைன் போர் இதற்கு ஒரு காரணம் எனவும், இப்போரினால், ஐரோப்பாவில், 2ம் உலகப் போருக்குப்பின் புலம்பெயர்வு மிக அதிகமாகவும், வெகு விரைவாகவும் இடம்பெற்றுள்ளது எனவும் கூட்டேரஸ் அவர்கள் கூறியுள்ளார்.
2021ம் ஆண்டின் இறுதியில் 2 கோடியே 71 இலட்சம் ஏதிலியரும், 5 கோடியே 32 இலட்சம் பேர் நாட்டுக்குள்ளே புலம்பெயர்ந்தோராயும் இருந்தனர். 2022ம் ஆண்டு மே மாத இறுதியில், 10 கோடிப் பேர் கட்டாயமாகப் புலம்பெயர்ந்துள்ளனர். உலக உணவுத் திட்ட அமைப்பு, கடந்த ஆண்டில் ஏறத்தாழ ஒரு கோடிப் பேருக்கு உதவியுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்