திருத்தந்தை: வயதுமுதிர்ந்தோர் காலத்தின் ஆசிர்வாதம்
மேரி தெரேசா: வத்திக்கான்
வயதுமுதிர்ந்தோர் காலத்தின் ஆசிர்வாதம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூன் 15, இப்புதன் காலையில் ஆற்றிய பொது மறைக்கல்வியுரையை மையப்படுத்தி, டுவிட்டர் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
குணமடைதல், ஆறுதல் ஆகிய ஆண்டவரின் கொடைகளை அனுபவிக்கும் வயதுமுதிர்ந்தோர், தங்களின் சகோதரர் சகோதரிகளுக்கு, விசுவாசத்தோடுகூடிய நன்றியுணர்வின் மிக உயர்ந்த சாட்சிகளாக விளங்கமுடியும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அச்செய்தியில் தெரிவித்துள்ளார்.
முதுமை வாழ்வில் ஏற்பட்ட அனுபவத்தையும், இவ்வாழ்வின் ஞானத்தையும், சிறாருக்கும் இளையோருக்கும் வழங்குமாறு, இப்புதன் மறைக்கல்வியுரையில் வயதுமுதிர்ந்தோர் மற்றும், தாத்தாக்கள் பாட்டிகளிடம் திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.
இளையோரும், வயதுமுதிர்ந்தோரும் எந்த அளவுக்கு ஒருவரோடு ஒருவர் தொடர்புகொண்டிருக்கின்றனரோ அந்த அளவுக்கு, நம் சமுதாயத்தின் வருங்காலம் நம்பிக்கைக்குரியதாய் அமைந்திருக்கும் எனவும், திருத்தந்தை கூறினார்.
மேலும், ஜூன் 15, இப்புதன் காலையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருத்தந்தை புனித 6ம் பவுல் அரங்கத்திலுள்ள சிறிய அறையில், தன்னைச் சந்திக்க காத்திருந்த ஐ.நா.வின் ஆயுதக்களைவு விவகாரத்துறையின் (UNODA) நேரடிப் பொதுச்செயலர் Izumi Nakamitsu அவர்களைச் சந்தித்து உரையாடினார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்