ஆப்ரிக்க மறைப்பணியாளர்கள் சபை ஆப்ரிக்க மறைப்பணியாளர்கள் சபை 

ஜூலை 3, காங்கோ குடியரசு மக்களுக்கு திருத்தந்தை திருப்பலி

ஆப்ரிக்க மறைப்பணியாளர் சபையினர், இறைவேண்டல் மற்றும், உடன்பிறந்த உணர்வு வழியாக, கிறிஸ்துவின் திருத்தூதர்களாகவும், சான்றுபகர்பவர்களாகவும் வாழுமாறு திருத்தந்தை கேட்டுக்கொண்டார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்

காங்கோ சனநாயக குடியரசு, மற்றும், தென் சூடான் நாடுகளுக்கு எனது திருத்தூதுப் பயணம் தள்ளிவைக்கப்பட்டுள்ளதற்கு மிகுந்த வருத்தம் தெரிவிக்கிறேன், ஆயினும், உங்களின் இறைவேண்டல் மற்றும், முன்மாதிரிகை, எனக்குத் துணிவைத் தருகின்றது, என் அன்புக்குரிய இந்நாடுகளின் மக்களை விரைவில் சந்திப்பேன் என்பதில் நம்பிக்கையோடு இருக்கின்றேன் என்று, ஆப்ரிக்க மறைப்பணியாளர் சபை ஒன்றிடம் கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

White Fathers எனப்படும் ஆப்ரிக்க மறைப்பணியாளர்கள் சபையின் பொதுப் பேரவையில் பங்குபெறுகின்ற 56 பிரதிநிதிகளை, ஜூன் 13, இத்திங்களன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, இவ்வாறு கூறியுள்ளதோடு, இந்த எனது வயதில் மறைப்பணியை மேற்கொள்வது உண்மையிலேயே எளிதானதல்ல, ஆயினும் உங்களின் செபம் தனக்கு உதவும் என்று அவர்களிடம் எடுத்துரைத்தார்.      

உரோம் நகரில் வாழ்கின்ற காங்கோ சனநாயக குடியரசு மக்களுக்கு, வருகிற ஜூலை 3ம் தேதி திருப்பலி நிறைவேற்றுவதாகவும் திருத்தந்தை அறிவித்தார்.

இச்சபையினர் மூன்று ஆண்டுகளுக்குமுன்னர், 150வது ஆண்டு நிறைவைக் கொண்டாடியதைக் குறிப்பிட்ட திருத்தந்தை, இறைவாக்குச் சான்றோடு மறைப்பணி என்ற தலைப்பில் இப்பேரவையை இவர்கள் நடத்தி வருவதையும் குறிப்பிட்டார்.   

சான்று வாழ்வுக்கு, இறைவேண்டல், மற்றும், உடன்பிறந்த உணர்வு, அதாவது  கடவுளுக்குத் திறந்தமனம், நம் சகோதரர் சகோதரிகளுக்குத் திறந்தமனம் ஆகிய இரண்டும் தேவைப்படுகின்றன என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அண்மையில் புனிதராக அறிவிக்கப்பட்ட Charles de Foucauld அவர்களின் சான்று வாழ்வு பற்றியும் குறிப்பிட்டார். இச்சபையினர், இறைவேண்டல் மற்றும், உடன்பிறந்த உணர்வு வழியாக, கிறிஸ்துவின் திருத்தூதர்களாகவும், சான்றுபகர்பவர்களாகவும் வாழுமாறும் அச்சபையின் தனிவரத்தின் அர்த்தத்தைப் புரிந்துகொள்ளவும், அதனால் வலிமை பெறவும் வேண்டும் என்றும் திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.

நன்றி சொல்லத் தெரிந்திருத்தல்

தங்கள் சபையின் கடந்த காலத்தை நன்றியோடு திரும்பிப் பார்க்கவேண்டியதன் முக்கியத்துவத்தை நினைவுபடுத்திய திருத்தந்தை, இந்நன்றியுணர்வு, நம்பிக்கையின் சுடர் பற்றியெரிய உதவுகின்றது என்றும் கூறினார்.

1868ம் ஆண்டு அல்ஜீரியாவில் ஆப்ரிக்க மறைப்பணியாளர்கள் சபை ஆரம்பிக்கப்பட்டது. 1,400க்கும் மேற்பட்ட இச்சபை உறுப்பினர்கள், 42 நாடுகளில் மறைப்பணியாற்றுகின்றனர். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 June 2022, 15:43