உலகினரிடம் திருத்தந்தை: மியான்மார் மக்களை மறக்காதீர்கள்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்
2021ம் ஆண்டு பிப்ரவரி முதல் தேதி இடம்பெற்ற இராணுவ ஆட்சிக்கவிழ்ப்புக்குப்பின், வன்முறை, மற்றும், புலம்பெயர்வு ஆகியவற்றை தொடர்ந்து எதிர்கொண்டுவரும் மியான்மாரில், துன்புறும் மக்களுக்கு உதவுமாறு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூன் 19, இஞ்ஞாயிறு மூவேளை செப உரைக்குப்பின்னர் உலக சமுதாயத்திடம் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து துன்பங்களைச் சந்தித்துவருகின்ற மியான்மார் மக்களையும், அவர்களின் மனித மாண்பு, மற்றும், வாழ்வதற்கான அவர்களின் உரிமைகளை மறக்கவேண்டாம் எனவும், வழிபாட்டுத்தலங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள் போன்றவை காக்கப்படவும்,
உலக சமுதாயத்திற்கு விண்ணப்பித்துள்ள அந்நாட்டு கத்தோலிக்க ஆயர்களோடு தானும் இணைந்து அழைப்புவிடுப்பதாகத் தெரிவித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.
இஞ்ஞாயிறு நண்பகலில் வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த இத்தாலி வாழ் மியான்மார் மக்களுக்கு தன் சிறப்பு ஆசிரை வழங்குவதாகவும் திருத்தந்தை தெரிவித்தார்.
மியான்மார் ஆயர்கள்
இதற்கிடையே, மியான்மாரில் அடிப்படை மனிதாபிமான உதவிகளின்றி உள்ளவர்கள், தங்களின் வீடுகள் எரிக்கப்பட்டுள்ளதால், கட்டாயமாகப் புலம்பெயர்ந்துள்ளவர்கள் மற்றும், வன்முறைக்கு அஞ்சி தப்பித்துச் செல்லும் பலரின் அழுகுரலோடு நாங்களும் இணைகின்றோம் என்று, அந்நாட்டு ஆயர்கள் கூறியுள்ளனர்.
இவ்வாரத்தில் தங்களின் ஆண்டு நிறையமர்வு கூட்டத்தை நிறைவுசெய்து வெளியிட்டுள்ள அறிக்கையில், குடிமக்கள் எதிர்கொள்கின்ற துயரங்களைக் குறிப்பிட்டு, அவர்களுக்காக உலக சமுதாயத்தின் உதவிக்கு அழைப்புவிடுத்துள்ளனர் ஆயர்கள்.
ஐ.நா. புலம்பெயர்ந்தோர் அமைப்பின் அறிக்கையின்படி, மியான்மாரில் 8 இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் நாட்டுக்குள்ளேயே புலம்பெயர்ந்துள்ளனர்.
1,900த்திற்கும் மேற்பட்ட குடிமக்கள் கொல்லப்பட்டுள்ளனர், மற்றும், இராணுவ ஆட்சிக்கவிழ்ப்புக்குப்பின் 11 ஆயிரம் பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று அரசு-சாரா அமைப்பு ஒன்று கூறியுள்ளது.
இதற்கிடையே, மியான்மார் இராணுவமும், ஆலயங்கள் மற்றும், கிறிஸ்தவ நிறுவனங்களைக் குறிவைத்து தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றது
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்