தேடுதல்

Granatieri di Sardegna படைவீரர்கள் Granatieri di Sardegna படைவீரர்கள் 

திருத்தந்தை: மக்கள், நல்ல குடிமக்களாக வாழ உதவுங்கள்

ஒவ்வோர் ஆண்டும் வத்திக்கானில் நடைபெறும் நிகழ்வுகள் சுமுகமாக இடம்பெறுவதற்கு, Granatieri di Sardegna படை வீரர்களின் பணிகள் மிகவும் உதவியாக உள்ளன – திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான்

சாலை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள இராணுவத் துறையினர், தங்களின் பணியிலும், தனிப்பட்ட மற்றும், சமூக வாழ்விலும், தோழமையுணர்வை ஊக்குவிப்பவர்களாகவும், மக்கள், நல்ல குடிமக்களாக வாழ்வதற்கு உதவுமாறும் செயல்படுங்கள் என திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இச்சனிக்கிழமையன்று கேட்டுக்கொண்டுள்ளார்.

நாடு மற்றும், சமுதாய நலன் என்ற உணர்வில், இப்பணியை இவர்கள் ஆற்றுகையில்,  ஒவ்வொரு மனிதரும் கடவுளால் அன்புகூரப்படுகின்ற அவரது படைப்பு, எனவே அவர்கள் மதிக்கப்படவேண்டியவர்கள் என்பதை மனதில் இருத்துமாறும் கேட்டுக்கொண்ட திருத்தந்தை, மிகுந்த அக்கறை மற்றும், அர்ப்பணிப்பு உணர்வோடு தினமும் இவர்கள் இப்பணியை ஆற்ற ஆண்டவர் அருள்புரிவாராக என்றும் கூறியுள்ளார்.

"Granatieri di Sardegna" எனப்படும், இத்தாலிய இராணுவப் பிரிவில் “சாலை பாதுகாப்புப் பணியாற்றும் ஏறத்தாழ 500 பேரை, ஜூன் 11, இச்சனிக்கிழமை நண்பகலில், திருத்தந்தை புனித 6ம் பவுல் அரங்கத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரோம் நகரில், குறிப்பாக, வத்திக்கான் நாட்டைச் சுற்றிலும் இவர்கள் ஆற்றிவருகின்ற பாதுகாப்புப் பணிகளுக்கு நன்றி தெரிவித்தார்.

ஒவ்வோர் ஆண்டும் உலகெங்கிலுமிருந்து உரோம் நகருக்கு வருகின்ற ஏராளமான திருப்பயணிகள் மற்றும், சுற்றுலாப் பயணிகளை, வத்திக்கானில் நடைபெறும் நிகழ்வுகள் கவர்ந்துள்ளவேளை, அந்நிகழ்வுகள் சுமுகமாக நடைபெறுவதற்கு, இப்படை வீரர்களின் பணிகள் மிகவும் உதவியாக உள்ளன எனவும் திருத்தந்தை கூறியுள்ளார்.

இப்படை வீரர்களின் பணிகள் சில நேரங்களில் சற்று சோர்வடையச் செய்யும், ஆயினும் இவை, சமுதாயத்திற்கு மிகவும் பயனுள்ளவை, மற்றும், பாராட்டப்படுபவை என்றுரைத்த திருத்தந்தை, மக்களும் இவர்களிடம் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர் என்று கூறியுள்ளார்.

Granatieri di Sardegna படை வீரர்கள்
Granatieri di Sardegna படை வீரர்கள்

ஒவ்வொரு முறையும் திருத்தூதுப் பயணங்கள், மற்றும், பங்குத்தள மேய்ப்புப்பணிகளை ஆற்றுவதற்குச் செல்லும்போதும், அவற்றை நிறைவுசெய்து திரும்பும்போதும், இப்படைவீரர்களின் பணி அர்ப்பணத்தைக் காண முடிகின்றது என்றும் பாராட்டிய திருத்தந்தை, அவர்களையும், அவர்களின் குடும்பத்தினரையும் அன்னை மரியாவின் பாதுகாவலில் வைப்பதாகத் தெரிவித்தார்.

அண்மை ஆண்டுகளில் இத்தாலிய இராணுவத்தினர், உரோம் நகரில், மக்களுக்கு அருகாமையிலிருப்பது, குற்றங்களைத் தடுக்கும் நடவடிக்கைகளில் ஒத்துழைப்பது, அவசரகாலச் சூழல்கள் தொடர்புடைய செயல்பாடுகளுக்கு ஆதரவளிப்பது போன்ற பணிகளை ஆற்றி வருகின்றனர் என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரோம் நகரில் இவர்கள் ஆற்றுகின்ற பணிகள், மனித மற்றும், தொழில் ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் வளர்வதற்கு உதவும் என்ற நம்பிக்கையையும் தெரிவித்துள்ளார்.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 June 2022, 14:22