தேடுதல்

திருஅவை, குடும்பங்களுக்கு நல்ல சமாரியராக இருக்கவேண்டும்

முன்னோக்கி ஓர் அடி எடுத்துவைப்பதற்கு திருத்தந்தை பரிந்துரைத்துள்ள சில வழிகள்: திருமணத்திற்குத் திறந்தமனதாய் இருத்தல், சிலுவைகளை ஏற்றல், மன்னிப்பு நோக்கி நடத்தல், மற்றவரை வரவேற்றல், உடன்பிறந்த உணர்வைப் பேணிவளர்த்தல்

மேரி தெரேசா: வத்திக்கான்

உலகத்தை மாற்றும்வண்ணம் ஓர் அடி முன்னோக்கி எடுத்துவையுங்கள் என்றும், அவ்வுலகத்தில், தாங்கள் வரவேற்கப்படவேண்டும், மற்றும், ஏற்கப்படவேண்டும் என உணரும் அனைவருக்கும் அதனை ஓர் இல்லமாக உருவாக்குங்கள் என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூன் 22, இப்புதன் மாலையில் ஆயிரக்கணக்கான குடும்பங்களிடம் கூறினார்.

ஜூன் 22, இப்புதன் உள்ளூர் நேரம் மாலை 6.45 மணிக்கு, வத்திக்கானின் திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அரங்கத்தில், பத்தாவது உலக குடும்பங்கள் மாநாட்டைத் தொடங்கி வைத்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருஅவை, உங்களுக்கு நல்ல சமாரியராக இருக்கவேண்டும் என விரும்புகிறேன் என்று கூறினார்.

இவ்வாண்டு உரோம் நகரில் சிறப்பிக்கப்படும் பத்தாவது உலக குடும்பங்கள் மாநாடு, முந்தைய குடும்பங்கள் மாநாடுகளிலிருந்து சற்று மாறுபட்டு, உலகின் அனைத்து மறைமாவட்டங்கள் மற்றும், பங்குத்தளங்களில் சிறப்பிக்கப்பட்டு வருகின்றது. அதேநேரம், இப்புதன் மாலையில் உரோம் நகரில் தொடங்கியுள்ள உலக குடும்பங்கள் மாநாட்டில், 120 நாடுகளிலிருந்து இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர்.

சுக, துக்கங்கள் மத்தியில் சான்று பகர்தல்

இந்நிகழ்வில், நவீன உலகில் குடும்ப வாழ்வில் தாங்கள் எதிர்கொள்கின்ற இன்ப, துன்பங்கள், நம்பிக்கைகள், எதிர்பார்ப்புகள் போன்றவற்றை, பல்வேறு குடும்பங்கள் திருத்தந்தையிடம் பகிர்ந்துகொண்டன.   

புற்றுநோயால் துன்புற்றபோது விசுவாசத்தைக் காத்து வாழ்வுக்கு ஆதரவாக இருந்த இறைஊழியர் Chiara Corbella Petrilla அவர்களின் பெற்றோர், உக்ரைனிலிருந்து புலம்பெயர்ந்துவந்த ஒரு தாய் மற்றும், அவரின் மகளோடு, அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்துள்ள பெரிய இத்தாலியக் குடும்பம், மனிதாபிமானப் பணிகளில் ஈடுபட்டிருந்தபோது கொல்லப்பட்ட, காங்கோ மக்களாட்சி குடியரசில் இத்தாலிய தூதராகப் பணியாற்றியவரின் முஸ்லிம் கைம்பெண் உட்பட பலர், சுக, துக்கங்களுக்கு மத்தியில் சான்று வாழ்வு வாழ்ந்துவருவது பற்றி, திருத்தந்தையிடம் எடுத்துரைத்தனர்.

ஒன்றிணைந்து பயணம் மேற்கொள்தல்

பத்தாவது உலக குடும்பங்கள் மாநாடு
பத்தாவது உலக குடும்பங்கள் மாநாடு

இவர்களின் சான்றுகளைக் கேட்டதற்குப்பின்னர், தன் சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலகிலுள்ள அனைத்துக் குடும்பங்கள் மற்றும், திருமணமான தம்பதியர் ஆகிய அனைவரது வாழ்வின் எதார்த்தங்களோடு தான் உடனிருப்பதாகத் தெரிவித்தார்.

நீங்கள் இருக்கின்ற இடங்களிலிருந்து, தம்பதியராக, உங்களின் சொந்தக் குடும்பங்களில், ஒன்றிணைந்து பயணம் மேற்கொள்ளுங்கள், அப்பயணத்தை மற்ற குடும்பங்களோடும், திருஅவையோடும் இணைந்து மேற்கொள்ளுங்கள் என்று திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.

நல்ல சமாரியர் உருவத்தை நினைவுக்கு கொணர்ந்த திருத்தந்தை, திருஅவை, சமாரியர் போன்று உங்களுக்கு இருக்குமாறு விரும்புகிறேன் என்றும், திருஅவை ஒரு நல்ல சமாரியராக உங்கள் அருகில் இருந்து, நீங்கள் உங்கள் பயணத்தைத் தொடர உதவுவேண்டும், மற்றும், நீங்கள் அப்பயணத்தில் எடுத்துவைக்கும் அடி எவ்வளவு சிறியதாக இருந்தாலும் அதனை முன்னோக்கி எடுத்துவையுங்கள் என்றும், குடும்பங்களிடம் கேட்டுக்கொண்டார்.

முன்னோக்கி ஓர் அடி எடுத்துவைப்பதற்கு சில வழிகளைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, திருமணத்திற்குத் திறந்தமனதாய் இருத்தல், சிலுவைகளை ஏற்றல், மன்னிப்புநோக்கி நடத்தல், மற்றவரை வரவேற்றல், உடன்பிறந்த உணர்வைப் பேணிவளர்த்தல் ஆகிய வழிமுறைகளைக் குறிப்பிட்டார்.

உலகில் மறைப்பணி

நம் உலகில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் சான்றுபகரும் ஒரு மறைப்பணி உள்ளது எனவும், நாம் சந்திக்கும் அனைவருக்கும் நம் வாழ்வு வழியாக ஆண்டவர் பேச விரும்புவது என்ன? இன்றைய நம் குடும்பம் முன்னோக்கி எடுத்துவைக்கவேண்டிய ஓர் அடி என்ன என ஆண்டவர் கேட்கிறார்? என்று உலக குடும்பங்கள் மாநாட்டுப் பிரதிநிதிகளிடம் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆண்டவரால் மாற்றம் பெற நம்மை அனுமதிப்போம், கிறிஸ்துவைச் சந்திக்கவும், தாங்கள் அன்புகூரப்படுகிறோம் என்பதை அறியவும் விரும்பும் மக்களை வரவேற்போம், மற்றும், ஏற்றுக்கொள்வோம் என தன் பகிர்வை முடித்தார்.

ஜூன் 25, வருகிற சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு, வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நிறைவேற்றும் திருப்பலியோடும், அடுத்த நாள் ஞாயிறு மூவேளை செப உரையில் திருத்தந்தை குடும்பங்களுக்கு வழங்கும்  இறுதிச் செய்தியோடும் உலக குடும்பங்கள் மாநாடு நிறைவுபெறும். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 ஜூன் 2022, 20:30