ROACO அமைப்பினர் சந்திப்பு ROACO அமைப்பினர் சந்திப்பு 

திருத்தந்தை: உக்ரைனில் காயின் ஆபேல் நாடகம் நடந்தேறுகிறது

கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறையை இறைவேண்டல், தெளிவான பிறரன்பு உதவிகள் போன்ற ஆயுதங்கள் வழியாக, கிறிஸ்தவர்கள் முறியடிக்கவேண்டும் – திருத்தந்தை பிரான்சிஸ்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்

போர்கள் நிறைந்த சூழலில் அமைதியின் பாதைகள் கண்டுபிடிக்கப்படும்வண்ணம், இறைவேண்டல், உண்ணாநோன்பு, பிறரன்பு, மற்றும் சேவை ஆகியவற்றை நிறுத்திவிடாமல் தொடர்ந்து செய்யுங்கள் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிழக்குத் திருஅவைகளுக்கு உதவுகின்ற ROACO என்ற திருஅவை அமைப்பினரிடம் இவ்வியாழனன்று கேட்டுக்கொண்டார்.

வத்திக்கானில் தங்களின் ஆண்டு நிறையமர்வு கூட்டத்தை நடத்தியுள்ள ROACO அமைப்பின் எண்பது பிரதிநிதிகளை, ஜூன் 23,  இவ்வியாழனன்று வத்திக்கானின் கொன்சிஸ்தோரோ அறையில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எத்தியோப்பியா, எரிட்ரியா, உக்ரைன் ஆகிய இடங்களின் புலம்பெயர்ந்தோருக்கு இந்த அமைப்பினர் ஆற்றிவரும் உதவிகளுக்கு நன்றி தெரிவித்தார்.

உக்ரைனில் மனித வாழ்வை அழிக்கின்ற வன்முறை, சாத்தான் வன்முறையாக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது, இதனை, இறைவேண்டலின் வல்லமை, தெளிவான பிறரன்பு உதவிகள் போன்ற ஆயுதங்கள் வழியாக, கிறிஸ்தவர்கள் முறியடிக்கவேண்டும் மற்றும், அமைதிக்கான உரையாடலுக்கு அழைப்புவிடுக்க வேண்டும் என திருத்தந்தை கூறியுள்ளார்.

மனிதப் பெருமை, மற்றும், சிலைவழிபாட்டின் உச்சங்கள் தாழ்த்தப்படும், தனிமை மற்றும், கண்ணீரால் நிறைந்த பள்ளத்தாக்குகள் மறையும், அமைதி நிலவும் என்ற எசாயாவின் இறைவாக்கு விரைவில் நிறைவேறும் என்று தான் நம்புவதாகத் தெரிவித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஒரு நாடு அடுத்த நாட்டிற்கு எதிராய் வாளை உயர்த்தாது, வாள்கள் எல்லாம் கலப்பைகளாகவும் ஈட்டிகள் களைக்கொத்துக்களாகவும் மாறும் என்ற இறைவாக்கு நிறைவேறும் என்று நம்புகிறேன் என உரைத்த திருத்தந்தை, ஆனால் உணவுப் பொருள்கள் குறைகின்றன, ஆயுதங்கள் அதிகரிக்கின்றன, இவ்வாறு அனைத்துமே எதிர்த்திசையில் போய்க்கொண்டிருக்கின்றன என்று கவலை தெரிவித்தார்.

உக்ரைனின் ஒடேசா பகுதி
உக்ரைனின் ஒடேசா பகுதி

ROACO அமைப்பு மேற்கொள்ளும் ஒருங்கிணைந்த பயணம் பற்றியும் குறிப்பிட்ட திருத்தந்தை, 12 ஆண்டுகளாக நடந்த போர் உருவாக்கியுள்ள வறுமை மற்றும், மனச்சோர்வை எதிர்கொள்ளும் சிரியா நாட்டு மக்களின் குரல்கள் கேட்கப்படவேண்டும் எனவும் அழைப்புவிடுத்தார்.

கிழக்குத் திருஅவைகளுக்கு உதவுகின்ற நிறுவனங்களின் கூட்டமைப்பான ROACO, மத்தியக் கிழக்கில் வழிபாட்டுத் தலங்கள் அமைப்பதற்கும், சமூகநலப் பணிகளுக்கும், கல்விக்கும் உதவி வருகின்றது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 June 2022, 15:42