இளையோரே, வருங்காலத்தின் நம்பிக்கை தூதர்களாக இருங்கள்:திருத்தந்தை
மேரி தெரேசா: வத்திக்கான்
இளையோர், வருங்காலத்தின் நம்பிக்கை மற்றும், மறுபிறப்பின் தூதர்களாக இருப்பார்கள் என்று தான் நம்புவதாக, முதல் உலக இளையோர் சுற்றுலா மாநாட்டில் பங்குபெறும் இளையோர் பிரதிநிதிகளிடம், ஜூன் 28, இச்செவ்வாயன்று கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
தென் இத்தாலியின் Sorrento நகரில், ஐ.நா.வின் உலக சுற்றுலா நிறுவனம், ஜூன் 27, இத்திங்கள் முதல் ஜூலை 3, வருகிற திங்கள் வரை நடத்துகின்ற முதல் உலக இளையோர் சுற்றுலா மாநாட்டில் பங்குபெறும் இளையோர் பிரதிநிதிகளிடம் காணொளி வழியாகப் பேசியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வருங்காலத்தின் நம்பிக்கைத் தூதர்களாக இருக்குமாறு, இளையோரை ஊக்கப்படுத்தியுள்ளார்.
இளையோரில், மாணவர்களாக இருப்பவர்களுக்கு, சுற்றுலா, பள்ளி விடுமுறை நாள்களோடு தொடர்புடையதாக உள்ளது எனவும், இக்காலக்கட்டத்தில் கிடைக்கும் அனுபவம், ஒவ்வொருவரின் நினைவில் நிலைத்திருக்கும் எனவும் கூறியுள்ள திருத்தந்தை, விடுமுறை நாள்களில், பொழுதுபோக்கு மற்றும், ஓய்வைத் தவிர, பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் குறித்தும் குறிப்பிட்டார்.
பள்ளி விடுமுறை நாள்களில், சில மாணவர்கள், தோழமையுணர்வை வெளிப்படுத்தும் பணிகளில் தானாக முன்வந்து ஈடுபடுகின்றனர், தங்களின் குடும்பங்களுக்கு, அல்லது, படிப்புக்கு உதவும்வண்ணம் சிலர் சிறிய வேலைகள் செய்கின்றனர், இன்னும் சிலர், கடவுளோடு செபத்திலும் மௌனத்திலும் செலவிட்டு தங்களின் வாழ்வுப் பாதைக்கு ஒளி பெறுகின்றனர் எனவும், திருத்தந்தை அக்காணொளியில் பேசியுள்ளார்.
விடுமுறை நாள்களை எப்படி செலவழித்தாலும், இந்நாள்களை, நல்ல மற்றும், பொறுப்புள்ள முறையில் செலவழிப்பது, ஒருவர் தன் வாழ்வு முன்வைக்கும் சவால்களை எதிர்கொள்வதற்கு தன்னையே தயாரிக்கவும், வாழ்வில் வளரவும் உதவும் என்று திருத்தந்தை கூறியுள்ளார்.
அன்பு இளையோரே, விடுமுறை நாள்களைப் பயனுள்ள முறையில் செலவழிக்குமாறு உங்களை ஊக்கப்படுத்துகிறேன், நீங்கள் வருங்காலத்தின் நம்பிக்கை மற்றும், மறுபிறப்பின் தூதர்கள் என நம்புகிறேன், உங்கள் அனைவருக்கும் என் ஆசிர் என்று, தனது காணொளிச் செய்தியை நிறைவுசெய்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்