மருத்துவரின் பரிந்துரைப்படி காங்கோ, தென்சூடான் பயணம் தள்ளிவைப்பு
மேரி தெரேசா: வத்திக்கான்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், முழங்கால் வலிக்குச் சிகிச்சை எடுத்துவரும் காரணத்தினால், காங்கோ சனநாயக குடியரசு மற்றும், தென் சூடான் ஆகிய இரு ஆப்ரிக்க நாடுகளுக்கு மேற்கொள்வதாய் திட்டமிடப்பட்டிருந்த அவரின் திருத்தூதுப் பயணம் மருத்துவரின் ஆலோசனையின்படி தள்ளிவைக்கப்பட்டுள்ளது என, ஜூன் 10, இவ்வெள்ளியன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், முழங்கால் வலிக்குப் பெற்றுவரும் சிகிச்சையின் பலன்களுக்குப் பாதிப்பு ஏற்படாமல் இருக்கும்வண்ணம், அவரது மருத்துவர்கள் கேட்டுக்கொண்டதன்பேரில் இத்திருத்தூதுப் பயணத்தை, கவலையோடு கட்டாயமாகத் தள்ளிவைக்கவேண்டிய சூழல் அவருக்கு ஏற்பட்டுள்ளது என்று திருப்பீட செய்தித் தொடர்பகம் கூறியுள்ளது.
இவ்விரு நாடுகளுக்கு திருத்தந்தை மேற்கொள்ளும் திருத்தூதுப் பயணம் குறித்த விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும், அத்தொடர்பகம் மேலும் கூறியுள்ளது.
காங்கோ சனநாயக குடியரசு மற்றும், தென் சூடான் ஆகிய இரு ஆப்ரிக்க நாடுகளின் திருத்தூதுப் பயணம், இவ்வாண்டு ஜூலை மாதம் 2ம் தேதி முதல் 7ம் தேதி வரை திட்டமிடப்பட்டிருந்தது. இத்திருத்தூப் பயணத்தில் திருத்தந்தை, காங்கோ சனநாயக குடியரசின் தலைநகர் Kinshasa மற்றும் Goma நகரங்களுக்கும், தென் சூடான் தலைநகர் ஜூபாவுக்கும் செல்வதாய் திட்டமிட்டிருந்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்