திருத்தந்தை: உலகை அழிவு நோக்கி இட்டுச் செல்லாதீர்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்
அனைவருக்கும் அச்சுறுத்தலையும் அழிவையும் தந்துகொண்டிருக்கும் உக்ரைன் போரை அமைதிப் பேச்சுவார்த்தைகளின் வழி முடிவுக்குக்கொண்டுவர, உலகில் அதிகாரத்திலிருப்போர் தங்களால் இயன்ற வழிகளில் முயலவேண்டும் என அழைப்பு விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஜூன் 5ம் தேதி ஞாயிற்றுக்கிழமை சிறப்பிக்கப்பட்ட பெந்தக்கோஸ்து பெருவிழாவை மையப்படுத்தி நண்பகல் அல்லேலூயா வாழ்த்தொலி உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதன் இறுதியில், உக்ரைனில், இரஷ்யாவின் ஆக்ரமிப்பு நூறு நாள்களாக தொடர்ந்துகொண்டிருக்கும் இவ்வேளையில், அரசியல் தலைவர்கள் இதனை முடிவுக்குக் கொண்டுவர முயல்வதோடு, நல்மனம் படைத்தோரின் அயராத இறைவேண்டல் தேவைப்படுகின்றது என்றார்.
மனித குலத்தை அழிவை நோக்கி இட்டுச் செல்லாதீர்கள் என்ற உருக்கமான வேண்டுகோளை உலகத் தலைவர்களுக்கு விடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மனிதகுல மீட்புக்கான அழைப்பை புதுப்பிக்கும் இவ்வேளையில், மரணம் மற்றும் அழிவின் செயல்கள் அனைவருக்கும் ஆபத்தைத் தரும்வகையில் தொடர்ந்துகொண்டிருக்கின்றன என்ற கவலையையும் வெளியிட்டார்.
ஏமன் நாட்டில் போர் நிறுத்த ஒப்பந்தம்
மேலும், ஏமன் நாட்டில் போர் நிறுத்த ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டிருப்பது குறித்து, தன் மகிழ்ச்சியையும் வெளியிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ். ஏமன் நாட்டில் இரண்டு மாத போர் நிறுத்த ஒப்பந்தம் மேலும் நீட்டிக்கப்பட்டிருப்பது குறித்து மகிழ்ச்சியை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம் காலத்தின் மிகப்பெரும் மனித குல நெருக்கடிக்கு காரணமான ஏமன் மோதல்கள், இந்த போர் நிறுத்தத்தின் வழி ஒரு முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கையைத் தந்துள்ளன எனவும் எடுத்துரைத்தார்.
பசியாலும், அழிவுகளாலும், கல்வியின்மையாலும், தேவைகளை நிறைவேற்ற முடியாமலும் துன்புற்றுவரும் ஏமன் நாட்டு குழந்தைகளை நினைவில் கொண்டு அனைவரும் செயல்படுவோம் என்ற அழைப்பையும் முன்வைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நைஜீரியாவில் பலியானவர்களுக்கு திருத்தந்தை செபம்
மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவின் தென்மேற்கு மாநிலமான Ondoவில், கத்தோலிக்கருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் பல சிறார் உட்பட ஐம்பதுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளது குறித்தும் திருத்தந்தை கவலை தெரிவித்தார்.
பிரேசில் நாட்டின் வடமேற்குப் பகுதியில் பெய்யும் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும், நிலச்சரிவுகளால் உயிரிழந்தவர்கள் மற்றும், உறைவிட அழிவுகள் குறித்தும் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நாட்டினருடன் தன் ஒருமைப்பாட்டையும் தெரிவித்தார்.
மேலும், லெபனோனின் பெய்ரூட்டில் ஜூன் 4ம் தேதி, சனிக்கிழமையன்று, இரு கப்புச்சின் துறவியர், இறைஊழியர்கள் Leonardo Melki, மற்றும் Thomas George Sale அருளாளர்களாக அறிவிக்கப்பட்டது குறித்தும் ஏடுத்துரைத்து, அவர்களின் எடுத்துக்காட்டு நம் கிறிஸ்தவ சான்று வாழ்வுக்குப் பலம் சேர்க்கட்டும் என விண்ணப்பித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்