கிறிஸ்தவர்களின் நெருக்கடிநிலைகள் ஒருபோதும் மறக்கப்படக்கூடாது
கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்
மத்திய கிழக்கில் கிறிஸ்தவர்கள் ஒன்றிணைந்து வாழும் வழிகளைத் தேடவேண்டும், மற்றும், அழிவைக்கொணரும் பயனற்ற பேச்சுகள் குறித்து எச்சரிக்கையாய் இருக்கவேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிரேக்க கத்தோலிக்கத் திருஅவை ஆயர்களிடம் கேட்டுக்கொண்டார்.
கிரேக்க மெல்கித்தே கத்தோலிக்கத் திருஅவையின் ஆண்டு நிறையமர்வு கூட்டத்தில் பங்குபெறும் ஆயர்களை, ஜூன் 20 இத்திங்கள் காலையில் திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சிரியாவிலும், மத்திய கிழக்கிலும் கிறிஸ்தவர்கள் எதிர்கொள்கின்ற நெருக்கடிநிலைகள் ஒருபோதும் மறக்கப்படக்கூடாது என்று கூறினார்.
திருத்தூதர்கள் பேதுரு, பவுல் ஆகியோரின் கல்லறைகள் அமைந்துள்ள உரோம் நகரில் இக்கூட்டத்தை நடத்துவதற்கு அத்திருஅவையின் ஆயர்கள் விரும்பியதைக் குறிப்பிட்ட திருத்தந்தை, இவ்விரு புனிதர்களின் பரிந்துரை நமக்கு அவசியம் எனவும், அதன்வழியாக கிறிஸ்தவ சமுதாயம், இந்த நம் காலத்தில், நம் நம்பிக்கையின் ஊற்றாகிய கிறிஸ்துவின் பெயருக்குச் சான்றுபகர துணிச்சலைப் பெறுவார்கள் எனவும் எடுத்துரைத்தார்.
சிரியா மீது கவனம் செலுத்த....
பேதுருவின் வழிவந்தவர்களில் சிலர் சிரியாவில் பிறந்திருப்பதைச் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, இது ஒருபுறம், உரோம் திருஅவையின் கத்தோலிக்க மூச்சு, பிறரன்பில் தலைமை வகிக்கவும், உலகளாவியத் திருஅவை மீது அக்கறை கொண்டிருக்கவும் செய்கிறது, மறுபுறம், சிதைக்கப்பட்டுள்ள அன்புக்குரிய சிரியாவுக்குத் திருப்பயணிகளாக, பயணம் மேற்கொள்ள மனங்களைத் தூண்டுகிறது என்று தெரிவித்தார்.
அந்தியோக்கியாவின் முதுபெரும்தந்தை Youssef Absi அவர்கள் தொடங்கி உங்களில் சிலர் சிரியாவில் ஆயர்களாகப் பணியாற்றுகின்றீர்கள் என, கிரேக்க மெல்கித்தே திருஅவையின் ஆயர்களிடம் கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அண்மை மாதங்களில் நம் கவனமெல்லாம் ஐரோப்பாவின் கிழக்குப் பக்கம் திரும்பியிருக்கின்றது, ஆயினும் இது, உங்கள் பூமியில் பன்னிரண்டு ஆண்டுகளாக நடைபெற்ற போரை மறக்கச்செய்யவில்லை என்று கூறினார்.
தான் திருத்தந்தையாகப் பணியேற்ற முதல் ஆண்டில், வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் சிரியாவுக்காக நடத்திய இரவு செபம் பற்றியும், அதில் பல முஸ்லிம்கள் பங்குபெற்றது பற்றியும் குறிப்பிட்ட திருத்தந்தை, கடுமையான இடர்களைச் சந்தித்துள்ள சிரியாவில் நியாயமான, மற்றும், நீதியான தீர்வு கிடைப்பதற்கு உழைக்குமாறு, அந்நாட்டின் மற்றும், உலக சமுதாயத்தின் தலைவர்களுக்கு மீண்டும் அழைப்புவிடுப்பதாகத் தெரிவித்தார்.
திருஅவையாக, சான்று வாழ்வு
திருஅவையாக, எவ்வாறு சான்று வாழ்வு வாழலாம் என்பது குறித்து சிந்தித்துப் பார்ப்பதற்கு, கிரேக்க மெல்கித்தே திருஅவையின் ஆயர்கள் அழைப்புப்பெறுகின்றனர் என்பதை வலியுறுத்திக் கூறிய திருத்தந்தை, மத்திய கிழக்குப் பகுதியில் வாழ்கின்ற கிறிஸ்தவர்கள் மீதுள்ள அக்கறையை வெளிப்படுத்தினார்.
மத்திய கிழக்குப் பகுதியில் கிறிஸ்தவர்கள் வாழ்வதற்கு உரிமையைக் கொண்டிருக்கின்றனர் எனவும், அக்கிறிஸ்தவர்கள் எதிர்கொள்கின்ற நெருக்கடிகள் சவால்நிறைந்தவை எனவும், அந்நெருக்கடிகள் மறக்கப்படக்கூடாது எனவும் திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்