முதுமை, வலுவின்மையில் வல்லமையைக் காண்கின்ற காலம்

வயது முதிர்ந்தோர், கிறிஸ்துவுக்குச் சாட்சி பகரும்வண்ணம், தங்களின் பலவீனத்தையும், ஆற்றாமையையும் ஏற்கவேண்டும் என, புதன் பொது மறைக்கல்வியுரையில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்

மேரி தெரேசா: வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூன் 22, இப்புதன் உள்ளூர் நேரம் காலை 8.30 மணிக்கு வத்திக்கானின் திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அரங்கத்திலுள்ள சிறிய அறையில், Simon Wiesenthal யூத மையத்தின் பிரதிநிதிகளைச் சந்தித்து உரையாடினார். பின்னர், திருத்தந்தை, வத்திக்கானின் புனித பேதுரு வளாகம் சென்று அவ்வளாகத்தில் அமர்ந்திருந்த ஆயிரக்கணக்கான பல நாடுகளின் திருப்பயணிகளுக்கு, முதுமை பற்றிய தன் 15வது பொது மறைக்கல்விப் பகுதியில், திருத்தூதர்கள் பேதுரு மற்றும், யோவான் பற்றி எடுத்துரைத்தார். யோவான் நற்செய்தி, இயல் 21ல், 17ம்,18ம் இறைவசனங்கள் முதலில் வாசிக்கப்பட்டன. அதற்குப்பின்னர், அன்புச் சகோதரர், சகோதரிகளே, உங்கள் எல்லாருக்கும் காலை வணக்கம் என்று, தன் மறைக்கல்வியுரையைத் துவக்கினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மூன்றாம் முறையாக இயேசு அவரிடம், “யோவானின் மகன் சீமோனே, உனக்கு என்னிடம் அன்பு உண்டா?” என்று கேட்டார். ‘உனக்கு என்னிடம் அன்பு உண்டா?’ என்று இயேசு மூன்றாம் முறை கேட்டதால் பேதுரு துயருற்று, அவரிடம், “ஆண்டவரே உமக்கு எல்லாம் தெரியுமே! எனக்கு உம்மீது அன்பு உண்டு என்பது நீர் அறியாத ஒன்றா?” என்றார். இயேசு அவரிடம், “என் ஆடுகளைப் பேணிவளர்” என்றார். “நீ இளைஞனாக இருந்தபோது நீயே இடையைக் கட்டிக்கொண்டு உனக்கு விருப்பமான இடத்தில் நடமாடிவந்தாய். உனக்கு முதிர்ந்த வயது ஆகும்போது நீ கைகளை விரித்துக் கொடுப்பாய். வேறொருவர் உன்னைக் கட்டி, உனக்கு விருப்பம் இல்லாத இடத்திற்குக் கூட்டிச்செல்வார் என உறுதியாக உனக்குச் சொல்கிறேன்” என்றார். (யோவா. 21,17-18)

புதன் மறைக்கல்வியுரை

முதுமை பற்றிய இன்றைய நம் பொது மறைக்கல்வியுரையில், யோவான் நற்செய்தியின் இறுதியில் பதிவுசெய்யப்பட்டுள்ள உயிர்த்த இயேசுவுக்கும், பேதுருவுக்கும் இடையே நடந்த உரையாடல் குறித்து சிந்திப்போம் (21:15-23). திபேரியக் கடல் அருகே இடம்பெற்ற உள்ளத்தை உருக்கும் இந்த உரையாடல், இயேசு தம் சீடர்களை எவ்வளவுதூரம் அன்புகூர்ந்திருந்தார் என்பதையும், அவர், தம் சீடர்களோடு, குறிப்பாக, பேதுருவோடு கொண்டிருந்த மிக உன்னத மனிதம்நிறைந்த உறவையும் பளிச்சென காட்டுகிறது. அந்த உரையாடலில் இயேசு, “யோவானின் மகன் சீமோனே, உனக்கு என்னிடம் அன்பு உண்டா?” என்று மூன்று முறை கேட்டார். அப்போது பேதுரு, கிறிஸ்துவிடம் தான் வைத்திருக்கும் அன்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறார். ஆண்டவரின் ஆடுகளைப் பேணிவளர்க்கும் கட்டளையையும் அவரிடமிருந்து பேதுரு பெறுகிறார். நீ இளைஞனாக இருந்தபோது நீயே இடையைக் கட்டிக்கொண்டு உனக்கு விருப்பமான இடத்தில் நடமாடிவந்தாய். உனக்கு முதிர்ந்த வயது ஆகும்போது நீ கைகளை விரித்துக் கொடுப்பாய் என்று இயேசு கூறி, பேதுரு முதுமையில் எதிர்கொள்ளவிருக்கும் மறைசாட்சிய வாழ்வு பற்றியும் சுட்டிக்காட்டுகிறார். இயேசுவின் இவ்வார்த்தைகள், வயதுமுதிர்ந்தோருக்கு ஒரு குறிப்பிட்ட அர்த்தத்தைக் கொண்டிருக்கின்றன. ஏனெனில், வாழ்நாளில் ஆண்டுகள் கடந்துசெல்கையில், அந்நிலை, இயல்பாகவே உடலளவில் தளர்ச்சியை ஏற்படுத்துகிறது, மற்றும், அடுத்தவரைச் சார்ந்திருக்கவேண்டிய நிலைக்கும் உள்ளாக்குகின்றது. அதேநேரம், முதுமை, ஆண்டவர் மீதுள்ள அன்பு, அவரது வாக்குறுதிகள் மீதுள்ள நம்பிக்கை, மற்றும், ஆன்மீக ஞானத்தில் வளர்ச்சி ஆகியவற்றை புதுப்பிக்கும் காலமாகவும் இருக்கமுடியும். மேலும், அந்த உரையாடலின் இறுதியில், பேதுரு, யோவானைச் சுட்டிக்காட்டி, “ஆண்டவரே இவருக்கு என்ன ஆகும்?” என்று இயேசுவிடம், கேட்டார். அதற்கு இயேசு, பேதுருவிடம், “நான் வரும்வரை இவன் இருக்க வேண்டும் என நான் விரும்பினால் உனக்கு என்ன? நீ என்னைப் பின்தொடர்ந்து வா” என்றார். இயேசு இவ்வாறு கூறியதன் வழியாக, திருத்தூதர்களில் இளையவராக இருந்த யோவான் குறித்து பேதுரு கவலைப்படவேண்டாம், மாறாக, பேதுரு, தன் சொந்த அழைப்புக்கும், பணிக்கும் விசுவாசமாக இருக்கவேண்டும் என்றும் சொல்கிறார். இயேசுவின் இச்சொற்கள், நம் வாழ்வின் இறுதி ஆண்டுகளில் இளைய தலைமுறைகளுக்கு இடம் ஒதுக்கவும், அனைவருக்கும் திறந்துவைக்கப்பட்டுள்ள ஆண்டவரின் மீட்பளிக்கும் திட்டத்தில் அவர்களுக்குரிய இடத்தை மதிக்கவும் வேண்டும் என்று நமக்கு நினைவுபடுத்துகின்றன. ஆதலால் கிறிஸ்துவின் சீடர்களுக்கு முதுமை என்பது, தியானம், நன்றியுணர்வு, நம் வாழ்விலும், நம்மைச் சுற்றியுள்ள உலகிலும் கடவுளின் அருள் தொடர்ந்து செயல்படுவதற்குச் சான்றுபகர்தல் ஆகியவற்றின் பலனுள்ள காலமாக இருக்க முடியும்.

புதன் மறைக்கல்வியுரை 220622
புதன் மறைக்கல்வியுரை 220622

இவ்வாறு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதன் காலையில், முதுமை குறித்த தன் 15வது பொது மறைக்கல்விப் பகுதியை வழங்கினார். பின்னர், ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் மற்றும், காயமடைந்தோர் பற்றிக் குறிப்பிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் கிடைக்குமாறு திருத்தந்தை விண்ணப்பித்தார். மேலும், மெக்சிகோ நாட்டில் தனது இயேசு சபையைச் சார்ந்த இரு அருள்பணியாளர்கள் மற்றும், பொதுநிலையினர்  ஒருவர் கொல்லப்பட்டுள்ளது குறித்த தன் ஆழ்ந்த வேதனையையும் திருத்தந்தை வெளியிட்டார். இறுதியில், இம்மறைக்கல்வியுரையில் பங்குபெற்ற அனைவர் மீதும், அவர்களின் குடும்பங்கள் மீதும் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மகிழ்வும் அமைதியும் பொழியப்படச் செபித்து, எல்லாருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசிரை அளித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 June 2022, 14:56