தேடுதல்

மறைக்கல்வியுரை: முதியோர், கடவுளின் கனிவன்பை காட்டுகின்றனர்

முதுமையின் மதிப்பு, மற்றும், முதுமைநிலைபற்றிய ஜூன் 08, இப்புதன் மறைக்கல்வியுரையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வயதுமுதிர்ந்தோர், கனிவன்பு, ஞானம், அன்பு ஆகியவற்றின் தூதர்கள் என்று கூறினார்

மேரி தெரேசா: வத்திக்கான்

ஜூன் 08, இப்புதன் காலையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் ஆற்றிய பொது மறைக்கல்வியுரையைக் கேட்டு ஆசிர்பெறுவதற்காக, கோடை வெயிலையும் பொருட்படுத்தாது, பல நாடுகளின் திருப்பயணிகளில் பலர், தங்கள் குழந்தைகளுடன் அமர்ந்திருந்தனர். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இம்மக்களுக்கு, உள்ளூர் நேரம் காலை ஒன்பது மணியளவில், முதுமை பற்றிய தன் 13வது மறைக்கல்விப் பகுதியைத் தொடங்கினார். யூதத் தலைவர்களுள் ஒருவரான நிக்கதேம், இயேசுவிடம் வந்து, ரபி, “வயதானபின் ஒருவர் எப்படிப் பிறக்க முடியும்?” என்று கேட்டதை மையப்படுத்தி, திருத்தந்தை இப்புதன் மறைக்கல்வியுரையை வழங்கினார். இயேசுவும் நிக்கதேமும் என்ற தலைப்பில் யோவான் நற்செய்தி 3ம் பிரிவிலிருந்து நான்கு வசனங்கள் முதலில் வாசிக்கப்பட்டன.  அதற்குப்பின் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மறைக்கல்வியுரையைத் துவக்கினார்.

இயேசு நிக்கதேமைப் பார்த்து, “மறுபடியும்* பிறந்தாலன்றி எவரும் இறையாட்சியைக் காண இயலாது என மிக உறுதியாக உமக்குச் சொல்லுகிறேன்” என்றார். நிக்கதேம் அவரை நோக்கி, “வயதானபின் ஒருவர் எப்படிப் பிறக்க முடியும்? அவர் மீண்டும் தாயின் வயிற்றில் புகுந்து பிறக்க முடியுமா?” என்று கேட்டார். 5இயேசு அவரைப் பார்த்து, “ஒருவர் தண்ணீராலும் தூய ஆவியாலும் பிறந்தாலன்றி இறையாட்சிக்கு உட்பட இயலாது என்று மிக உறுதியாக உமக்குச் சொல்கிறேன். மனிதரால் பிறப்பவர் மனித இயல்பை உடையவர். தூய ஆவியால் பிறப்பவர் தூய ஆவியின் இயல்பை உடையவர். (யோவா.3,3-6)

புதன் மறைக்கல்வியுரை

அன்புச் சகோதரர், சகோதரிகளே, உங்கள் அனைவருக்கும் காலை வணக்கம். யூதத் தலைவர்களுள் ஒருவரான நிக்கதேம், நற்செய்தி நூல்களில் வயதான கதாபாத்திரங்களுக்கு மிகவும் பொருத்தமாக விளங்குபவர்களில் ஒருவர். இவர் இயேசுவைப் பற்றி அறிய விரும்பி, இரவில் அவரிடம் சென்றவர் (காண்க.யோவா.3:1-21).  இயேசுவுக்கும் நிக்கதேமுவுக்கும் இடையே நடந்த உரையாடலில், “தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார்” (வ.16) என இயேசு கூறியபோது, அவரின் மீட்பளிக்கும் மறைப்பணியின் மையம் வெளிப்படுத்தப்படுகிறது. இயேசு நிக்கதேமுவிடம், “ஒருவர் இறையாட்சியைப் பார்ப்பதற்கு, மேலிருந்து மீண்டும் பிறக்கவேண்டும்”. “ஒருவர் தண்ணீராலும் தூய ஆவியாலும் மறுபடியும் பிறந்தாலன்றி எவரும் இறையாட்சியைக் காண இயலாது” (யோவா.3:3) எனக் கூறிய திருச்சொற்கள் குறித்து இன்று சிந்திப்போம். இந்த ஆன்மீக மறுபிறப்பு, நமது இவ்வுலக வாழ்வை மறுக்கவுமில்லை, அதன் மதிப்பைக் குறைக்கவும் இல்லை. மாறாக, அது, நித்திய வாழ்விலும், விண்ணகத்தின் மகிழ்ச்சியிலும் இருக்கின்ற அறுதியான நிறைவைச் சுட்டிக்காட்டுகிறது. என்றென்றும் இளமையாக இருப்பதில் வெறித்தனமாக நாட்டம் கொண்டிருக்கும் இந்த நம் காலம், இந்த உண்மையை மீண்டும் கற்றுக்கொள்ளவும், நாம் படைக்கப்பட்டிருப்பதன் நோக்கமாகிய நித்திய மகிழ்வுக்குத் தயாரிப்பாக, வாழ்க்கையின் ஒவ்வொரு பருவத்தையும் பார்க்கவும் வேண்டியுள்ளது. இயேசு நிக்கதேமுவிடம், “தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார்” (வ.16) என்று கூறுகிறார். வயதானவர்கள், தங்களின் நம்பிக்கை, ஞானம், மற்றும், அனுபவம் ஆகியவை வழியாக, நம் மத்தியில் இறையாட்சியின் பிரசன்னத்திற்கும், உண்மையான “முடிவற்ற இளமை”யின் முன்சுவையாக, நமது இவ்வுலக வாழ்வின் உண்மையான அர்த்தத்திற்கும் உறுதியான சான்றை வழங்க முடியும். இந்த உண்மையான, நித்திய இளமைநிலை, கிறிஸ்து மற்றும், அவரது தூய ஆவியாரால் துவக்கப்பட்ட புதிய படைப்பில் நமக்குக் காத்திருக்கிறது

திருத்தந்தையின்புதன் மறைக்கல்வியுரை 080622
திருத்தந்தையின்புதன் மறைக்கல்வியுரை 080622

இவ்வாறு, முதுமைபற்றிய தன் 13வது புதன் மறைக்கல்வியுரைப் பகுதியை  நிறைவுசெய்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சிலுவையின் அடியில் நின்று ஐரோப்பாவின் அமைதிக்காகச் செபிப்போம் என்று கேட்டுக்கொண்டார். போலந்து நாட்டுத் திருப்பயணிகளை, குறிப்பாக, அந்நாட்டின் Wloclawek மறைமாவட்ட அருள்பணியாளர்களை வாழ்த்தியபோது, ஐரோப்பாவில் அமைதி நிலவச் செபிப்போம் என்று திருத்தந்தை கூறினார். மேலும், இம்மறைக்கல்வி நிகழ்வில் மாணவர்கள் பெருமளவில் கலந்துகொண்டதைக் குறிப்பிட்டு, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மகிழ்வும் அமைதியும், உங்கள் அனைவர் மீதும் பொழியப்படுவதாக என திருத்தந்தை செபித்தார். இறுதியில் அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசிரையும் அளித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

புதன் மறைக்கல்வியுரை 080622
புதன் மறைக்கல்வியுரை 080622

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 June 2022, 13:55