தேடுதல்

"சீரோ-மலபார் வழிபாட்டுமுறையின் இளையோர் தலைவர்கள்" கருத்தரங்கின் பிரதிநிதிகள் "சீரோ-மலபார் வழிபாட்டுமுறையின் இளையோர் தலைவர்கள்" கருத்தரங்கின் பிரதிநிதிகள் 

திருத்தந்தை: இளையோரே, இயேசுவின் அன்பின் பாதையில் நடங்கள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்தியாவிற்கு வெளியே வாழ்கின்ற சீரோ-மலபார் வழிபாட்டுமுறை திருஅவையின் இளையோரிடம், அன்னை மரியாவின் முன்மாதிரிகையால் உந்துதல் பெற்று, இயேசுவைப் பின்பற்றி நடங்கள் என்று கேட்டுக்கொண்டார்

மேரி தெரேசா: வத்திக்கான்

இறைவார்த்தையை நன்கு அறிந்து, அதை ஒவ்வொரு நாளும் வாசித்து, வாழ்வில் அதைச் செயல்படுத்துங்கள் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்தியாவிற்கு வெளியே வாழ்கின்ற சீரோ-மலபார் வழிபாட்டுமுறை திருஅவையின் இளையோரிடம் கூறினார்.

ஜூன் 18, இச்சனிக்கிழமையன்று, "சீரோ-மலபார் வழிபாட்டுமுறையின் இளையோர் தலைவர்கள்" கருத்தரங்கில் பங்குகொண்ட 75 பேரை வத்திக்கானின் கிளமெந்தினா அறையில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வாழ்வில் இயேசுவுக்கு இடம் ஒதுக்கி, இன்ப துன்பங்களை அவரோடு பகிர்ந்துகொண்டால், கடவுள் மட்டுமே அளிக்கவல்ல அமைதியை அனுபவிக்க முடியும் என எடுத்துரைத்தார்.

திருத்தூதர் தோமையார் இந்தியாவின் மேற்குக் கரையோரத்தில் நற்செய்தி அறிவித்தார் மற்றும், முதல் கிறிஸ்தவ சமுதாயம் அங்கே வளர்ந்தது என்றும், மரபுப்படி, திருத்தூதர் தோமையார் மறைசாட்சியாக கொல்லப்பட்டதன் 1950ம் ஆண்டு நிறைவு, இவ்வாண்டில் நினைவுகூரப்படுகின்றது என்றுரைத்த திருத்தந்தை, திருஅவை மதமாற்றத்தால் அல்ல, மாறாக, சான்றுவாழ்வில் வளருகின்றது என்று கூறினார்.

திருஅவை, திருத்தூதுப் பண்பைக்கொண்டது, ஏனெனில் அது திருத்தூதர்களின் சான்றுவாழ்வின்மீது அடித்தளத்தைக் கொண்டிருக்கிறது என்றும், சீரோ-மலபார் வழிபாட்டுமுறையின் சமகாலத்து இளையோர், மற்ற குழுமங்களின் இளையோர் மற்றும், கிறிஸ்துவை அறியாதவர்களுக்கு, இவர்கள் சான்றுகளாக விளங்கவேண்டும் என்றும் திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.

உண்மையான, அழகான மற்றும், ஆழமான அன்புக்காக, அனைத்து இளையோருமே ஆவல் கொண்டிருக்கின்றனர், அத்தகைய அன்பு செலுத்த அஞ்சவேண்டாம், ஏனெனில் அந்த அன்பையே இயேசு நமக்கு வெளிப்படுத்துகிறார் என்று கூறியத் திருத்தந்தை, அன்பை, ஏதோ அற்பமானதாக குறைத்து மதிப்பிட்டு, அதற்குப் பிரமாணிக்கமாக இருக்கின்ற போக்கு குறைவுபடுகின்றது, இந்த நிலைக்கு எதிராகப் புரட்சி செய்வதற்கு அஞ்சவேண்டாம் என்று, சீரோ-மலபார் இளையோரிடம் கூறினார்.

சீரோ-மலபார் வழிபாட்டுமுறையின் இளையோர் தலைவர்கள்
சீரோ-மலபார் வழிபாட்டுமுறையின் இளையோர் தலைவர்கள்

உலக இளையோர் நாள்

தன்னலத்திற்காக அடுத்தவரை பொருள்களாகப் பயன்படுத்தும் போதெல்லாம், இதயங்கள் இறுதியில் வெறுமையையே உணரும் என்று எச்சரிக்கை விடுத்த திருத்தந்தை, அடுத்த உலக இளையோர் நாள் லிஸ்பனில், “மரியா புறப்பட்டு ஊருக்கு விரைந்து சென்றார்” (லூக்.1:39) என்ற தலைப்புடன் சிறப்பிக்கப்படுவது குறித்தும் எடுத்துரைத்தார்.

கடந்தகாலத் தலைமுறைகளின் மரபுகள்

வானதூதரிடமிருந்து செய்தியைப் பெற்றபின், மீட்பருக்குத் தாயாக மாறுகின்ற தனது அழைப்பிற்கு ஆகட்டும் என்று கூறிய மரியா, முதிர்ந்த வயதில் கருத்தரித்திருந்த தன் உறவினர் எலிசபெத்தைச் சந்திக்க உடனடியாகச் சென்று அவர் வீட்டில் தங்கி அவருக்கு உதவினார், இளையோரும், தங்களின் வயதுமுதிர்ந்த உறவினர்களைச் சந்திக்கவேண்டும் என்று திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.

இயேசுவின் இளம் தாயான மரியா, தன் பெற்றோர் மற்றும், தாத்தா பாட்டியிடமிருந்து செபங்களைக் கற்றுக்கொண்டார், நம் வயதுமுதிர்ந்தோரின் செபங்களில் கருவூலங்கள் மறைந்துகிடக்கின்றன, இளையோரே, உங்கள் வாழ்வை, மரியாவின் புகழ்ப் பண்ணாக ஆக்க விரும்பினால் அது, மனிதசமுதாயத்திற்கு நீங்கள் வழங்கும் ஒரு கொடையாக இருக்கும், உங்களின் கடந்தகாலத் தலைமுறைகளின் மரபு மற்றும், செபத்தில் வேரூன்றப்படுவது முக்கியம், இதனை உங்கள் ஆயர்கள் மற்றும், அருள்பணியாளர்களின் உதவியோடு கற்றுக்கொள்ளுங்கள் என்று ஊக்கப்படுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருவழிபாடுகள் மற்றும், ஒப்புரவு அருளடையாளத்தில் பங்குகொள்வது உங்கள் வாழ்வை தினமும் புதியனவாக மாற்றும் என்று கூறினார். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 June 2022, 14:41