திருஅவையில், திருஅவையோடு எப்போதும் நற்செய்தியை அறிவியுங்கள்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்
திருமுழுக்கு அருளடையாளத்தால் உருவாகும் குழுமம், சுதந்திரமான, ஒரு புதிய திருஅவையாக உள்ளது, அது, தன் சொந்த கலாச்சாரத்தில், தனது வழியில் வளருவதற்கு அனுமதிக்கப்படவேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் Neocatechumenal Way என்ற குழுமத்தினரிடம் கூறியுள்ளார்.
ஜூன் 27, இத்திங்களன்று, வத்திக்கானின் திருத்தந்தை புனித 6ம் பவுல் அரங்கத்தில் இக்குழுமத்தின் ஏறத்தாழ 5,500 பேரைச் சந்தித்து, அந்நேரத்தில் தன் மனதில் எழுந்த எண்ணங்களைப் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலகெங்கும் சென்று நற்செய்தியை அறிவியுங்கள், அதற்குச் சான்று பகருங்கள் என்ற இயேசுவின் கட்டளையைக் கேட்டுள்ளோம் என்று கூறியுள்ளார்.
திருத்தூதர்களும் சீடர்களும், இயேசுவின் கட்டளையைக் கேட்ட நாள் முதல், அவரிடமிருந்து பெற்ற வல்லமையோடு நற்செய்தி அறிவித்து திருமுழுக்கு கொடுத்துவந்தனர் என்றும், அவ்வல்லமையை அவர்கள் தூய ஆவியாரிடமிருந்து பெற்றனர் என்றும் திருத்தந்தை எடுத்துரைத்தார்.
நற்செய்திப்பணி, பன்மைக் கலாச்சார வளமையைக் கொண்டிருக்கிறது, பல கலாச்சாரங்கள், ஆனால் ஒரே திருஅவை, பல மக்கள், ஆனால் அதே இயேசு கிறிஸ்துவே, பல நன்மனத்தோர், ஆனால் அதே ஆவியார் என்பதால், ஆவியாரின் வல்லமையோடு நம் இதயங்கள் மற்றும், கரங்களில் நற்செய்தியைக் கொண்டிருக்க அழைக்கப்பட்டுள்ளோம் என்று திருத்தந்தை தெரிவித்துள்ளார்.
திருமுழுக்குப் பெறுவதற்குத் தங்களைத் தயாரிப்பவர்களுக்கு உதவுகின்ற Neocatechumenal Way குழுமத்தினரின் தாராளமிக்க பணிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளதோடு, தலத்திருஅவையின் தலைவரான ஆயரோடு சேர்ந்து பணியாற்றுங்கள் என ஊக்கப்படுத்தினார், திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்