திருத்தந்தை:நெருக்கடி, நற்செய்தி அறிவிப்புக்கு நல்லதொரு வாய்ப்பு
மேரி தெரேசா: வத்திக்கான்
தொழில்நுட்பமும், நுகர்வும், பயன்பாட்டாளர்கள் மற்றும், நுகர்வோர் என்ற நிலைக்கு நம்மை உட்படுத்தியுள்ளவேளை, இக்காலக்கட்டத்தில் நாம் எதிர்கொள்கின்ற நெருக்கடி, மனித சமுதாயத்திற்குப் புதியதோர் அர்த்தம் கொடுக்கும் முறையில், நற்செய்தியை புதியவழியில் அறிவிப்பதற்கு ஒரு வாய்ப்பாக மாறியுள்ளது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.
ஜூன் 01, இப்புதன் காலையில், வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் பொது மறைக்கல்வியுரை நிகழ்வுக்குச் செல்வதற்குமுன்னர், 2019ம் ஆண்டில் தான் ஆரம்பித்து வைத்த, உலகளாவிய கல்வி உடன்படிக்கையை வளர்ப்பது குறித்த பன்னாட்டு கருத்தரங்கில் பங்குகொள்வோரைச் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, ஒரு நெருக்கடியானது, புதிய பாதையில் செல்வதற்கு மக்களுக்கு எவ்வாறு தூண்டுதலாக மாறுகிறது என்பது பற்றி எடுத்துரைத்தார்.
Aeneasன் எடுத்துக்காட்டு
கிரேக்க-உரோமானிய புராணக்கதையில் வருகின்ற Aeneas, எரிந்துகொண்டிருந்த நகரத்திலிருந்து தன் தந்தை மற்றும், மகனை காப்பாற்றிய முறை, நெருக்கடியை எவ்வாறு எதிர்கொள்வது என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு என்றும், Aeneas, தன்னை மட்டுமல்ல, அவரது கடந்தகாலத்தைக் குறிக்கும் தந்தை, வருங்காலத்தைக் குறிக்கும் அவரது மகன் ஆகிய இருவரையும் தன்னோடு எடுத்துச்சென்று காப்பாற்றினார் என்றும் திருத்தந்தை கூறியுள்ளார்.
கடந்தகாலத்தைப் பேணிக்காக்கவும், இளையோரின் நடவடிக்கைகளை வருங்காலத்தை நோக்கி வழிநடத்தவும் அழைக்கப்பட்டுள்ள கல்வியாளர்களின் பணியை விளக்குவதற்கும், உலகளாவிய கல்வி உடன்பாட்டின் சில அடிப்படைக் கோட்பாடுகள் குறித்து சிந்திப்பதற்கும், இந்த உருவகம் உதவமுடியும் எனவும் திருத்தந்தை கூறியுள்ளார்.
மனிதரின் மையத்தன்மை
இந்த அடிப்படைக் கோட்பாடுகளில், மனிதர் மையப்படுத்தப்படுவது முதலிடம் பெறுகிறது என்றும், கல்வியின் ஒவ்வொரு நடைமுறையிலும், மனிதர் மையப்படுத்தப்படவேண்டும், மற்றும், இன்றியமையாதது எது என்பதில் கவனம் செலுத்தப்படவேண்டும் என்றும், சிறந்த திறமைகளை, படைப்பாற்றல் மற்றும், கடமையுணர்வோடு சேர்த்துவைக்கவேண்டும் என்றும் திருத்தந்தை கேட்டுக்கொண்டுள்ளார்.
புறக்கணிப்பு கலாச்சாரம்
சேவைசெய்ய கற்றுக்கொடுக்கப்படவேண்டியது, கல்வியில் மற்றுமோர் அடிப்படை கோட்பாடு என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒரு பொருள் இனிமேல் செயல்படாது என்று உணர்ந்தவுடனேயே அது தூக்கியெறியப்படவேண்டும் மற்றும் மாற்றப்படவேண்டும் என்ற நம்பிக்கையை, புறக்கணிப்புக் கலாச்சாரம் நம்மில் வேரூன்றியுள்ளது, நுகர்வுப்பொருள்களிலும் நாம் இதையே செய்கிறோம் என்று எடுத்துரைத்தார்.
இந்த கலாச்சார மனநிலை, மனிதர்களில் நாம் செயல்படும் முறையையும் பாதித்துள்ளது என்றும், எடுத்துக்காட்டாக, ஒரு திருமணம், அல்லது ஒரு நட்பு சரிவரவில்லையென்றால், அதை உடனடியாக மாற்றுகின்ற போக்கு நம்மிடையே உள்ளது என்பதை திருத்தந்தை கவலையோடு குறிப்பிட்டார்.
எனினும், முதியோரும், இளையோரும் உடைந்துபோகக்கூடிய பாத்திரங்கள் போன்றவர்கள், அவர்களைக் கவனத்தோடு பாதுகாக்கவேண்டும் என்றும் திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்