அணு ஆயுதத் தடை ஒப்பந்தம் குறித்த நாடுகளின் முதல் கூட்டம் அணு ஆயுதத் தடை ஒப்பந்தம் குறித்த நாடுகளின் முதல் கூட்டம் 

அணு ஆயுதங்களற்ற ஓர் உலகம் தேவையானது, இயலக்கூடியது

அணு ஆயுதங்கள் விலையுயர்ந்தவை மற்றும், ஆபத்தை வருவிக்கக்கூடியவை. ஆயுதக்களைவு நடவடிக்கை முழுமையாக இடம்பெறவேண்டும் - திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான்

அணு ஆயுதங்களைப் பயன்படுத்தல், மற்றும் அவற்றைக் கொண்டிருப்பதுகூட அறநெறிக்கு முரணானது என்று, ஆஸ்ட்ரியாவில் நடைபெறும் அணு ஆயுதத் தடை ஒப்பந்தம் குறித்த நாடுகளின் முதல் கூட்டத்திற்கு (TPNW) திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பியுள்ள செய்தியில் கூறியுள்ளார்.

அணு ஆயுதங்கள் இல்லாத ஓர் உலகம் தேவையானது, மற்றும், அது இயலக்கூடியது எனவும், உலகில் இடம்பெறும் போர்களும், அவற்றுக்குரிய காரணிகளும் முடிவுக்குக் கொணரப்படவேண்டும் எனவும், திருத்தந்தை அச்செய்தியில் கேட்டுக்கொண்டுள்ளார்.

பன்னாட்டு உறவுகள் திருப்பீடத்துறையின் செயலர் பேராயர் பால் ரிச்சர்டு காலகர் அவர்கள், இக்கூட்டத்தில் கலந்துகொண்டு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இச்செய்தியை வாசித்தார்.   

அணு ஆயுதத் தடை ஒப்பந்த நடவடிக்கை, துணிச்சலான ஒன்று, மற்றும், இக்காலத்திற்கு மிக அதிகமாகத் தேவைப்படுவது என்று கூறியுள்ள திருத்தந்தை, ஆயுதக்களைவு பற்றி நாம் பேசும்போது அது பலருக்கு முரண்பாடாகத் தெரியலாம், ஆயினும், அதனை தேசிய, மற்றும், உலகளாவியப் பாதுகாப்பு குறித்து குறுகிய கண்ணோட்டத்தோடு அணுகுவதும், ஆயுதப்பரவலும் முன்வைக்கும் ஆபத்துகள் குறித்து நாம் எச்சரிக்கையாய் இருக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.

ஆயுதக்களைவு குறித்த உரையாடல்களைச் சோர்வின்றி மேற்கொள்வதன் வழியாக, அனைத்து ஆயுதங்களின் சப்தத்தை மௌனப்படுத்தவும், போர்களுக்கு காரணமான அனைத்தையும் முடிவுக்குக்கொணரவும் முடியும் என்று திருத்தந்தை அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.   

நீதி, மற்றும், நிலைத்தன்மையை உருவாக்கும்வண்ணம் அமைதியும் பாதுகாப்பும் உலகளாவியத்தன்மை கொண்டதாய் இருக்கவேண்டும் என்றுரைத்துள்ள திருத்தந்தை, நம் சகோதரர், சகோதரிகளின் நல்வாழ்வுக்கு, சமுதாயமாகவும், தனிப்பட்ட முறையிலும் எல்லாருமே பொறுப்பாளிகள் என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆயுதக்களைவு குறித்த எண்ணம் ஒவ்வொரு மனிதரின் இதயத்திலும் பதியவேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் செய்தியில் கேட்டுக்கொண்டுள்ளார்.

2021ம் ஆண்டு சனவரி மாதத்தில் நடைமுறைக்குவந்த அணு ஆயுதத் தடை ஒப்பந்தத்தை, 65 நாடுகள் செயல்படுத்தியுள்ளன அல்லது, இசைவுதெரிவித்துள்ளன. ஆனால், அணு ஆயுதங்களை வைத்திருக்கும் நாடுகள் இதில் இணையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 June 2022, 15:28