தேடுதல்

 டெக்சசில் கைவிடப்பட்ட கனரக  வாகனத்தில் துன்புறும் புலம்பெயர்ந்தோர் டெக்சசில் கைவிடப்பட்ட கனரக வாகனத்தில் துன்புறும் புலம்பெயர்ந்தோர் 

Texas,Melillaவில் புலம்பெயர்ந்தோரின் இறப்பு குறித்து திருத்தந்தை

சான் அந்தோனியோவின் புறநகரில் கைவிடப்பட்ட கனரக வாகனத்தில், கடும் வெப்பம் காரணமாகத் துன்புற்று குறைந்தது 46 பேர் உயிரிழந்துள்ளனர்

மேரி தெரேசா: வத்திக்கான்

அமெரிக்க ஐக்கிய நாடு, மற்றும், மெக்சிகோ நாட்டிற்கு இடையேயுள்ள எல்லைப் பகுதியிலும், இஸ்பெயின் மற்றும், மொரோக்கோ நாடுகளுக்கு இடையேயுள்ள எல்லைப் பகுதியிலும் இடம்பெற்றுள்ள கடுந்துயரில் பல புலம்பெயர்ந்தோர் உயிரிழந்துள்ளது குறித்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூன் 28, இச்செவ்வாயன்று தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளார்.

டெக்சஸ் மற்றும், மெலில்லாவில் புலம்பெயர்ந்தோருக்கு நிகழ்ந்துள்ள கடுந்துயர் குறித்த செய்திகள் மிகுந்த வேதனையளிக்கின்றன என்றும், இப்பெருந்துயரில் இறந்தோர் நல்லதொரு வாழ்வு கிடைக்கும் என்பதில் நம்பிக்கை வைத்திருந்தவர்கள், இச்சகோதரர் சகோதரிகளுக்காக நாம் எல்லாரும் இறைவேண்டல் செய்வோம் என்றும், இத்தகைய துயர நிகழ்வுகள் ஒருபோதும் இடம்பெறாதிருக்க, ஆண்டவர் நம் இதயங்களைத் திறப்பாராக என்றும், தன் டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

டெக்சஸ் மாநிலத்தின் சான் அந்தோனியோவின் புறநகரில் கைவிடப்பட்ட கனரக வாகனத்தில், கடும் வெப்பம் காரணமாகத் துன்புற்று, குறைந்தது 46 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், நான்கு சிறார் உட்பட 16 பேர் மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளனர் என்று தீயணைப்புப்படை அதிகாரிகள் கூறியுள்ளனர். 

Melillaல் புலம்பெயர்ந்தோர் உயிரிழப்பு

இன்னும், கடுமையான எல்லைக் கட்டுப்பாடு இருக்கின்ற இஸ்பெயின் மற்றும், மொரோக்கோ நாடுகளுக்கு இடையேயுள்ள Melilla எல்லைப் பகுதியில் இருந்த ஏறத்தாழ இரண்டாயிரம் புலம்பெயர்ந்தோர் மோசமாக நடத்தப்பட்ட காரணத்தால் குறைந்தது 23 பேர் கடந்த வெள்ளியன்று உயிரிழந்துள்ளனர்.

2வது டுவிட்டர் செய்தி

மேலும், ஜூன் 28, இச்செவ்வாயன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள, மற்றொரு குறுஞ்செய்தியில், “கிறிஸ்தவ நம்பிக்கை, அடிப்படையிலே இயேசு கிறிஸ்துவோடு மேற்கொள்ளும் ஒரு சந்திப்பாகும். இயேசுவில் உண்மையிலேயே நாம் நம்பிக்கை வைத்தால், அவரைப்போலவே நாமும் செயல்படுவோம் அதாவது, நற்செய்தியின் மீட்பளிக்கும் உண்மையைப் பகிர்ந்துகொள்ளும்வண்ணம், மற்றவர்களையும், அயலவர்களையும் சந்திப்போம்” என்ற சொற்கள் இடம்பெற்றிருந்தன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 June 2022, 15:30