அர்ஜென்டீனா மறைப்பணியாளரின் நடைப்பயணத்திற்கு நல்வாழ்த்து
மேரி தெரேசா: வத்திக்கான்
அர்ஜென்டீனாவில் லுஹான் அன்னை மரியாவை கவுரவிக்கும்வண்ணம் அந்நாட்டுக் கத்தோலிக்கர் தொடங்கியுள்ள “Negro Manuel" கலாச்சார வரலாற்று நடைபயணத்திற்குத் தன் நல்வாழ்த்துக்களையும் ஆசீரையும் தெரிவித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
பிரான்சிஸ் மறைப்பணி இயக்கம் தொடங்கியுள்ள இந்த நடைபயணத்தை (Paseo Histórico Cultural 'Negro Manuel' de la Virgen de Luján) வாழ்த்தி இஸ்பானிய மொழியில் காணொளிச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த நடைப்பயணம், 'Negro Manuel அதாவது ஆப்ரிக்க கறுப்பு இன அடிமையான மனுவேலின் வரலாறு மற்றும் வாழ்வைத் தொடர்வதாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
லுஹான் அன்னை மரியாவின் நினைவு மற்றும், அவர் மீதுள்ள பக்தியோடு மேற்கொள்ளப்படும் இப்பயணத்தில் ஆன்மீக முறையில் தானும் இணைவதாகக் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, 'Negro Manuel' உங்களுக்காக லுஹான் அன்னை மரியாவிடம் பரிந்துபேசுவாராக என்று கூறியுள்ளார்.
பெற்றோரிடமிருந்து நாம் பெற்றுள்ள எளிமையான கிறிஸ்தவ நம்பிக்கையோடு வாழ்வில் தொடர்ந்து முன்னோக்கிப் பயணம் மேற்கொள்ளுங்கள், இது நம் மக்களின் நம்பிக்கை மற்றும், வரலாற்றை மாற்றுகின்ற நம்பிக்கை என்று குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கறுப்பின மனுவேல் உங்களுக்கு வழிகாட்டும்வேளை, லுஹான் அன்னை மரியா உங்களைப் பராமரிப்பாராக என, தன் காணொளிச் செய்தியை நிறைவுசெய்துள்ளார்.
“Negro Manuel”
மனுவேல் அவர்கள், 1604ம் ஆண்டில் ஆப்ரிக்காவின் தற்போதைய கினியா நிலப்பகுதியாகிய கோஸ்டா டி லாஸ் ரியோசில் பிறந்தார். 23 வயது வரை தனது பழங்குடி இன மக்களோடு வாழ்ந்துவந்த இவர், பின்னர் ஐரோப்பியர்களால் தென் அமெரிக்காவுக்கு அடிமையாகக் கொண்டுவரப்பட்டவர். இவர், அர்ஜென்டீனாவில் லுஹான் அன்னை மரியா பக்தி வளரக் காரணமானவர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்