தேடுதல்

புதன் மறைக்கல்வியுரை 2022.06.22 புதன் மறைக்கல்வியுரை 2022.06.22  

திருத்தந்தை: வன்முறை, ஒருபோதும் பிரச்சனைக்குத் தீர்வாக அமையாது

வன்முறை, ஒருபோதும் பிரச்சனைக்குத் தீர்வாக அமையாது, மாறாக, அது தேவையற்ற துன்பங்களையே அதிகரிக்கும் என்பதை மீண்டும் கூறுகிறேன் - திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான்

மெக்சிகோ நாட்டில், இரு இயேசு சபை அருள்பணியாளர்கள் மற்றும், பொதுநிலையினர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளது குறித்து தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ள அதேவேளை, அந்நாட்டில் பரவலாக இடம்பெற்றுவரும் வன்முறைக்கு எதிரான தன் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஜூன் 22, இப்புதன் காலையில், வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில், முதுமை குறித்த பொது மறைக்கல்வியுரையை வழங்கியபின்னர் இவ்வாறு கூறிய திருத்தந்தை, ஜூன் 20, இத்திங்களன்று மெக்சிகோ நாட்டில், தனது இயேசு சபையின் இரு சகோதரர்களும், பொதுநிலையினர் ஒருவரும் கொலைசெய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார். மெக்சிகோ நாட்டின் Chihuahua மாநிலத்தின் Cerocahui நகரில் ஆலயத்திற்குள் 79 வயது நிரம்பிய அருள்பணி Javier Campos Morales அவர்களும், 80 வயது நிரம்பிய அருள்பணி Joaquín César Mora Salazar அவர்களும், பொதுநிலையினர் ஒருவரும் ஆயுதம் தாங்கிய மனிதர்களால் கொல்லப்பட்டுள்ளனர்.

இப்பெருந்துயரால் பாதிக்கப்பட்டுள்ள கத்தோலிக்க சமுதாயத்தோடு, பாசம் மற்றும், இறைவேண்டலோடு தான் ஒன்றித்திருப்பதாகத் தெரிவித்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வன்முறை, பிரச்சனைக்கு ஒருபோதும் தீர்வாக அமையாது, மாறாக, அது தேவையற்ற துன்பங்களையே அதிகரிக்கும் என்பதை மீண்டும் கூறுகிறேன் என்று கூறியுள்ளார்.

மெக்சிகோவில் கொல்லப்பட்டுள்ள இரு இயேசு சபை அருள்பணியாளர்கள்
மெக்சிகோவில் கொல்லப்பட்டுள்ள இரு இயேசு சபை அருள்பணியாளர்கள்

உலகில், அண்மை ஆண்டுகளில் கத்தோலிக்க மறைப்பணியாளர்களுக்கு மிக ஆபத்தான இடங்களில் ஒன்றாக மெக்சிகோ மாறி வருகிறது என்று, 2018ம் ஆண்டில் வெளியான ஊடகச் செய்திகள் கூறுகின்றன. 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 June 2022, 15:03