தேடுதல்

மறைக்கல்வியுரை: முதியோர் பராமரிக்கப்படுவதற்கு அக்கறை அவசியம்

வயதுமுதிர்ந்தோர், நீதியும், மனிதாபிமானமும் நிறைந்த ஒரு சமுதாயத்தைக் கட்டியெழுப்புவதற்குத் தூண்டுதலாக விளஹ்க முடியும் – திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான்

ஜூன் 01, இப்புதன் காலையில், வத்திக்கானின் தூய பேதுரு வளாகத்தில் பெருமளவான மாணவர்கள் உட்பட ஆயிரக்கணக்கான திருப்பயணிகள் அமர்ந்திருந்தனர். அவர்களுக்கு வழங்கிய முதுமை பற்றிய தன் 12வது மறைக்கல்விப் பகுதியில், கடவுளே, என் ஆற்றல் குன்றும் நாளில் என்னைக் கைவிடாதேயும் (தி.பா.71,9) என்ற திருப்பாடல் ஆசிரியரின் வேண்டுதலை மையப்படுத்தி தன் சிந்தனைகளை எடுத்தியம்பினார், திருத்தந்தை. இந்நிகழ்வில் திருப்பாடல் 71லிருந்து நான்கு வசனங்கள் முதலில் வாசிக்கப்பட்டன. அதன்பின்னர், அன்புச் சகோதரர், சகோதரிகளே, உங்கள் அனைவருக்கும் காலை வணக்கம். திருப்பாடல் 71ல், நாம் காணும் வயதுமுதிர்ந்த மனிதரின் அழகான இறைவேண்டல், முதுமையில் நிலவும் பலமான பதட்டநிலைபற்றிச் சிந்திப்பதற்கு நம்மை ஊக்கப்படுத்துகிறது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் மறைக்கல்வியுரையை இத்தாலியத்தில் ஆரம்பித்தார். 

என் தலைவரே, நீரே என் நம்பிக்கை; ஆண்டவரே, இளமைமுதல் நீரே என் நம்பிக்கை. பிறப்பிலிருந்து நான் உம்மைச் சார்ந்துள்ளேன்; தாய் வயிற்றிலிருந்து நீர் என்னைப் பிரித்தெடுத்தீர்; உம்மையே நான் எப்போதும் புகழ்ந்து போற்றுவேன்.... இன்னல்கள் பலவற்றையும் தீங்குகளையும் நான் காணுமாறு செய்த நீரே, எனக்கு மீண்டும் உயிரளிப்பீர்; பாதாளத்தினின்று என்னைத் தூக்கி விடுவீர். என் மேன்மையைப் பெருகச் செய்து மீண்டும் என்னைத் தேற்றுவீர். (தி.பா.71,5-6.20-21).

புதன் மறைக்கல்வியுரை

இறை வார்த்தையின் ஒளியில், முதுமையின் அர்த்தம், மற்றும், மதிப்பு குறித்த நம் மறைக்கல்வியுரையில், திருப்பாடல் 71ன் முதல் வசனங்களில், “என் தலைவரே, நீரே என் நம்பிக்கை; ஆண்டவரே, இளமைமுதல் நீரே என் நம்பிக்கை” (வ.5) என நாம் காண்கின்ற இதயப்பூர்வமான இறைவேண்டல் பற்றி இன்று சிந்திப்போம். திருப்பாடல் ஆசிரியர் தன் வாழ்க்கையில் ஆண்டுகள் கடந்துசெல்கையில், பலவீனமும், நோய்தொற்றும் வளர்ந்துவருவதை உணர்கின்றார். அச்சமயத்தில் அவர், கடவுளின் பாதுகாப்பும் பராமரிப்பும் தொடர்ந்து தனக்கு இருக்குமாறு வேண்டுகிறார். வயதுமுதிர்ந்தோரின் எண்ணிக்கை அதிகரித்துவரும் இந்த நம் காலத்தில் பல வயதுமுதிர்ந்தோர், திருப்பாடல் ஆசிரியரின் அதே கவலையைக் கொண்டிருக்கின்றனர். இவர்கள், பராமரிப்பின்றி கைவிடப்படல், ஏமாற்றப்படல், குற்றம் சுமத்தப்படல், மக்கள் என்றே உச்சரிக்கப்படாமல் இருத்தல் போன்ற பல்வேறு கோழைத்தனமான மற்றும், கொடூரமான செயல்களை எதிர்கொள்கின்றனர். வயதுமுதிர்ந்தோருக்கு எதிரான இச்செயல்கள், குடும்பங்களிலும்கூட இடம்பெறுகின்றன. இவர்கள், இத்தகைய புறக்கணிப்புக் கலாச்சாரத்தால் தங்களின் மாண்பும், உரிமைகளும்கூட அச்சுறுத்தப்படுவதைக் காண்கின்றனர். இந்தக் கலாச்சாரம், அவர்களை, சமுதாயத்திற்குப் பயனற்றவர்களாகவும், உண்மையிலேயே ஒரு சுமையாகவும் நோக்க வைக்கின்றது. நாம் எல்லாரும், நம் முதுமை, நோய், பலவீனம் போன்றவற்றை மறைப்பதற்குச் சோதிக்கப்படுகிறோம், ஏனெனில் அவை, நம் மாண்பை இழக்கச்செய்கின்ற ஒரு நிலை என்று அஞ்சுகிறோம். இவ்வளவு முன்னேறிய மற்றும், சக்திபடைத்த நவீன கலாச்சாரம், நோய் மற்றும், முதுமை குறித்து இவ்வளவு அக்கறையின்றி இருப்பது ஏன்? புறக்கணிப்புக் கலாச்சாரம் நாம் வாழ்கின்ற உலகை நஞ்சடையச் செய்கிறது. திருப்பாடல் ஆசிரியர், பலவீனம் மற்றும், எளிதில் நோயால் பாதிக்கப்படுவதை உணர்கையில்,  அவர், கடவுளின் வாக்குமாறா பிரமாணிக்கம் மற்றும், பராமரிப்பில் தன் நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்துகிறார். இறைவேண்டலில் இத்தகைய பற்றுறுதி மற்றும், ஆண்டவரிடம் நம்பிக்கை நிறைந்த உள்ளத்தோடு சரணடைவது ஆகிய பண்புகளுக்கு முன்மாதிரிகையாய் விளங்குபவர்கள் எல்லாத் தலைமுறைகளுக்கும் அதிகம் தேவைப்படுகின்றனர். இத்தகைய முன்மாதிரியான வாழ்வை வயதுமுதிர்ந்தோர் வழங்கமுடியும். வயதுமுதிர்ந்தோர் தங்களின் இருப்பு மற்றும், எடுத்துக்காட்டான வாழ்வால், இதயங்களையும் மனங்களையும் திறக்கமுடியும். அவர்கள், வாழ்க்கையின் அனைத்து நிலைகளையும் மதிக்கக்கூடிய, மற்றும், பொது நலனுக்கு அதன் உறுப்பினர்கள் வழங்கக்கூடியவற்றை மதிக்கின்ற, நீதி மற்றும், மனிதம் நிறைந்த சமுதாயத்தைக் கட்டியெழுப்பத் தூண்டமுடியும்.

இவ்வாறு, இப்புதன் மறைக்கல்வியுரையை நிறைவுசெய்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உக்ரைன் நாட்டில் கோதுமை ஏற்றுமதி தடைசெய்யப்படுவது நிறுத்தப்படவும், உணவை, போரின் ஆயுதமாகப் பயன்படுத்தவேண்டாம் எனவும் அழைப்புவிடுத்தார்.   பின்னர், இந்நிகழ்வில் பெருமளவில் மாணவர்கள் கலந்துகொண்டதைக் குறிப்பிட்டு, அவர்களுக்கு தன் சிறப்பு ஆசிரை வழங்குவதாகவும் திருத்தந்தை தெரிவித்தார். பெந்தக்கோஸ்து பெருவிழாவுக்கு நாம் தயாரித்துவரும் இவ்வேளையில், வளாகத்தில் அமர்ந்திருந்த அனைவர் மீதும், அவர்களின் குடும்பங்கள் மீதும், தூய ஆவியாரின் கொடைகள் அபரிவிதமாய்ப் பொழியப்படட்டும் என செபிப்பதாகத் தெரிவித்து, அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசிரையும் அளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 June 2022, 11:25

அண்மைய மறைக்கல்வியுரைகள்

அனைத்தையும் படிக்கவும் >