தேடுதல்

திருத்தந்தை: தூய ஆவியார், இடைவெளிகளை இணைப்பதில் வல்லுநர்

தூய ஆவியார் இயேசுவின் வார்த்தைகளை நமக்கு நினைவுபடுத்தி, அவரது எண்ணங்கள் நமது எண்ணங்களாக மாறச்செய்கிறார். வாழ்வின் முக்கிய நேரங்களில் தூய ஆவியாரின் உதவியை நாடுவோம் - திருத்தந்தை பிரான்சிஸ்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்

இயேசுவின் நற்செய்தியை, நம் இதயங்களில் நுழையச் செய்பவரும், இடைவெளிகளை அகற்றும் முறைகளைக் கற்றுக்கொடுப்பவருமாகிய தூய ஆவியாரின் செயல்களில் நாம் கருத்தூன்றி இருக்கவேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறன்று தன் அல்லேலூயா வாழ்த்தொலி உரையில் கூறியுள்ளார்.

ஜூன் 05, இஞ்ஞாயிறு நண்பகலில் வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு அல்லேலூயா வாழ்த்தொலி உரை வழங்கிய திருத்தந்தை, இயேசு உயிர்த்த ஐம்பதாம் நாளில், தூய ஆவியார் திருத்தூதர்கள் மீது இறங்கிவந்த நிகழ்வை   பெந்தக்கோஸ்து பெருவிழாவாக நாம் சிறப்பிக்கிறோம் என்று கூறினார்.

“என் பெயரால் தந்தை அனுப்பப்போகிற தூய ஆவியாராம் துணையாளர் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத்தருவார்; நான் கூறிய அனைத்தையும் உங்களுக்கு நினைவூட்டுவார்” (யோவா.14:26) என்று இயேசு திருத்தூதர்களுக்கு கூறியதை தூய ஆவியார் நமக்கு நினைவுபடுத்துகிறார் என திருத்தந்தை கூறினார்.

தூய ஆவியார் கற்றுக்கொடுப்பவர்

கற்றுக்கொடுத்தல், நினைவுபடுத்தல் ஆகிய இரு செயல்கள் வழியாக, தூய ஆவியார், இயேசுவின் நற்செய்தியை நம் இதயங்களில் நுழையச் செய்கிறார் என்றுரைத்த திருத்தந்தை, கடவுளை நம்புவதற்கு ஏற்படும் தடைகளைக் களைய, தூய ஆவியார் உதவி செய்கிறார் என்று கூறியுள்ளார்.

2000 ஆண்டுகளுக்குமுன் இயேசு போதித்த நற்செய்தி, இக்காலத்தின் தேவைகள் மற்றும் பிரச்சனைகள் பற்றி பேச முடியுமா என்பதில் சந்தேகம் எழலாம் என்று கூறியத் திருத்தந்தை, இணையதளம் மற்றும், உலகமயமாக்கலின் காலக்கட்டத்தில் இயேசுவின் நற்செய்தி கூறுவது என்ன, அந்நற்செய்தி ஏற்படுத்தும் நல்தாக்கம் என்ன என்ற கேள்வியையும் எழுப்பினார்.

இயேசுவின் போதனைகள், எக்காலத்திலும் எல்லா மனிதரையும் எவ்வாறு இணைக்கின்றன என்பதை எடுத்துரைத்த திருத்தந்தை, இந்த இணைப்பை உருவாக்குவதில் வல்லவரான தூய ஆவியார், நம் இதயங்களில் நற்செய்தி பேணிப் பாதுகாக்கப்பட உதவுகிறார் என்று கூறியுள்ளார்.

இயேசுவின் போதனைகளை பலமுறை கேட்ட திருத்தூதர்கள் அவற்றைச் சிறிதளவே புரிந்துகொண்டனர், ஆயினும் தூய ஆவியாரைப் பெற்றுக்கொண்டதற்குப்பின் அவர்கள், அவற்றை நினைவில் வைத்திருந்தனர் மற்றும், புரிந்துகொண்டனர் என்று விளக்கினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

தூய ஆவியார் நம் வாழ்வை மாற்றுகிறார், இயேசுவின் வார்த்தைகளை நமக்கு நினைவுபடுத்தி, அவரது எண்ணங்கள் நமது எண்ணங்களாக மாறச்செய்கிறார் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வாழ்வின் முக்கிய நேரங்களில் தூய ஆவியாரின் உதவியை நாடுவோம் என்று கூறியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 June 2022, 12:21