தேடுதல்

திருத்தந்தை: மூவொரு கடவுள், நம் வாழ்வில் புரட்சி செய்கின்றார்

ஒருவர், மற்றவரின்றி ஒருபோதும் இருக்க முடியாது என்பதை மூவொரு கடவுள் நமக்குக் கற்பிக்கின்றார். இவ்வுலகில் நாம் மற்றவரின் தேவைகளுக்குத் திறந்தமனதாய் இருந்து, அவர்களுக்கு உதவுபவர்களாய் வாழவேண்டியவர்கள் - திருத்தந்தை பிரான்சிஸ்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்

மூவொரு கடவுள் பெருவிழாவைக் கொண்டாடுவது, இறையியல் பயிற்சியாக இல்லாமல், நம் வாழ்வுமுறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்துவதாக இருக்கவேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மூவொரு கடவுள் பெருவிழாவாகிய இஞ்ஞாயிறன்று தன் மூவேளை செப உரையில் கூறினார்.

ஜூன் 12, இஞ்ஞாயிறு நண்பகலில் வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளிடம், இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகத்தில் (யோவா.16,12-15) இறைத்தந்தை மற்றும், தூய ஆவியார் பற்றி, இயேசு பேசுகிறார் என்று, தன் மூவேளை செப உரையை திருத்தந்தை துவக்கினார்.

ஆவியானவர், தமது சொந்த அதிகாரத்தால் பேசுவதில்லை, ஆனால் அவர் தாம் கேட்பதையே பேசுகிறார்; வரப்போகிறவற்றை அவர் உங்களுக்கு அறிவிப்பார் என இயேசு அவர் பற்றி விளக்குகிறார் என்றும், தூய ஆவியார் தம்மைப் பற்றி அல்ல, மாறாக, இயேசுவைப் பற்றிப் பேசுகிறார் மற்றும், இறைத்தந்தையை வெளிப்படுத்துகிறார் என்றும் உரைத்த திருத்தந்தை, எல்லாவற்றிற்கும் தொடக்கமும், எல்லாவற்றையும் கொண்டிருப்பவருமான இறைத்தந்தை, தமக்கென எதையும் கொண்டிராமல், எல்லாவற்றையும் தம் மகனிடம் கொடுக்கிறார் என்று கூறினார்.

நாம் எப்படி இருக்கிறோம்?

நாம் அறிவிப்பது மற்றும் கொண்டிருப்பது பற்றிச் சிந்தித்துப் பார்க்குமாறு, திருப்பயணிகளைக் கேட்டுக்கொண்ட திருத்தந்தை, வழக்கமாக நாம் பேசும்போது நம்மைப் பற்றியும், நாம் ஆற்றும் செயல்கள் பற்றியும் பேசுவதற்குத் தூண்டப்படுகிறோம், இது தூய ஆவியாரின் செயலிலிருந்து எவ்வளவு வேறுபடுகின்றது என்பதைச் சுட்டிக்காட்டினார்.    

நாம் கொண்டிருப்பவைகளை மற்றவரோடு, குறிப்பாக, அடிப்படை வசதிகளின்றி இருப்பவர்களோடு பகிர்ந்துகொள்ளாமல், நமக்கே வைத்துக்கொள்ளும் போக்கை இறுகப் பற்றிக்கொள்கிறோம் என்று கவலையோடு குறிப்பிட்ட திருத்தந்தை, நம் சொற்கள், செயல்களில் வெளிப்படவேண்டும் என்பதை வலியுறுத்திக் கூறினார்.

மற்றவருக்காக வாழ்தல்

மூவொரு கடவுள் பெருவிழாவைக் கொண்டாடுவது, அவ்வளவாக இறையியல் பயிற்சியாக இல்லாமல், நம் வாழ்வுமுறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்துவதாக இருக்கவேண்டும் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒருவர் மற்றவருக்காக வாழ்கின்ற கடவுள், மற்றவரோடும், மற்றவருக்காகவும் வாழுமாறு நம்மைத் தூண்டுகிறார் என்று எடுத்துரைத்தார்.

கடவுள், தம்மை நூல்கள் வழியாக அவ்வளவாக அறிவிப்பதில்லை, ஆனால், வாழ்வின் சான்று வழியாக அறிவிக்கிறார் என்று கூறியத் திருத்தந்தை, நாம் நம்புகின்ற கடவுளை நம் வாழ்வு பிரதிபலிக்கின்றதா? என சிந்தித்துப் பார்க்குமாறு அழைப்புவிடுத்தார்.

நாம் தீவுகள் அல்ல

ஒருவர், மற்றவரின்றி ஒருபோதும் இருக்க முடியாது என்பதை மூவொரு கடவுள் நமக்குக் கற்பிக்கின்றார் எனவும், நாம் தீவுகள் அல்ல எனவும், இவ்வுலகில் மற்றவரின் தேவைகளுக்குத் திறந்தமனதாய் இருந்து, அவர்களுக்கு உதவுபவர்களாய் கடவுளின் சாயலில் நாம் வாழவேண்டியவர்கள் எனவும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 June 2022, 12:30