திருத்தந்தை: உக்ரைன் மக்களுக்காக என்ன செய்கின்றீர்கள்?
கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்
ஜூன் 19, இஞ்ஞாயிறு நண்பகலில் வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு, மூவேளை செப உரையாற்றியபின்னர், உக்ரைனில், போரினால் துன்புறும் மக்களுக்கு, வெளிப்படையான செயல்களால் ஒருமைப்பாட்டுணர்வு காட்டப்படுமாறு, நன்மனம் கொண்ட அனைவருக்கும் அழைப்புவிடுப்பதாகக் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.
இரஷ்யா, உக்ரைனை ஆக்ரமித்து போரைத் தொடங்கியதிலிருந்து, கொலைகள், காயமடைதல், அழிவுகள், புலம்பெயர்வுகள் போன்றவை தொடர்ந்து இடம்பெறுகின்றன, இதனால் உக்ரைன் மக்களில் உருவாகியுள்ள மனச்சோர்வு, வாழ்வதற்குள்ள அவர்களின் ஆர்வத்தை இழக்கச்செய்யக்கூடும் என்று கவலை தெரிவித்த திருத்தந்தை, இந்நேரத்தில் துயருறும் இம்மக்களை மறக்காதிருப்போம் என்று கேட்டுக்கொண்டார்.
ஏறத்தாழ நான்கு மாதங்களாக தொடர்ந்து போர் இடம்பெற்றுவரும் உக்ரைன் நாட்டில் துயருறும் மக்கள் மீது தோழமையுணர்வை இன்று நான் எவ்வாறு வெளிப்படுத்துகிறேன்? என, ஒவ்வொருவரும் நம்மை நாமே கேட்டுக்கொள்வோம் என்றும் திருத்தந்தை கூறினார்.
உக்ரைன் மக்களுக்காக இறைவேண்டல் செய்கிறேனா? அம்மக்களின் நிலையைப் புரிந்துகொள்கிறேனா? அவர்களுக்காக நான் என்ன செய்கிறேன்? இக்கேள்விகளை அனைவரும் நம் இதயங்களில் எழுப்புவோம் எனவும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருப்பயணிகளிடம் கூறினார்.
பத்தாவது உலக குடும்பங்கள் மாநாடு
மேலும், ஜூன் 22 வருகிற புதன் முதல், 26 ஞாயிறு வரை உரோம் நகரில் நடைபெறும் பத்தாவது உலக குடும்பங்கள் மாநாடு (#WMOF22) பற்றியும், இஞ்ஞாயிறு மூவேளை செப உரைக்குப்பின்னர் திருப்பயணிகளுக்கு நினைவுபடுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், குடும்ப அன்பு, ஓர் அழைப்பு மற்றும், புனிதத்துவத்திற்குப் பாதை என்று கூறினார்.
1994ம் ஆண்டில் திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்கள் உலக குடும்பங்கள் மாநாட்டை உருவாக்கினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்