ஆப்ரிக்கப் பயணம் தள்ளிவைக்கப்பட்டுள்ளதற்கு திருத்தந்தை மன்னிப்பு
கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்
காங்கோ சனநாயக குடியரசு, மற்றும், தென் சூடான் நாடுகளுக்கு, வருகிற ஜூலை மாதத் துவக்கத்தில் மேற்கொள்வதாய் திட்டமிடப்பட்டிருந்த திருத்தூதுப் பயணம் தள்ளிவைக்கப்பட்டுள்ளதற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நாடுகளின் அதிகாரிகளிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார்.
ஜூன் 12, இஞ்ஞாயிறு நண்பகலில் வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு மூவேளை செப உரை வழங்கியபின்னர் இவ்வாறு அவ்விரு நாடுகளின் அதிகாரிகளிடம் மன்னிப்புக் கேட்பதாகத் தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்திருத்தூதுப் பயணம் வெகு விரைவில் நடைபெறுவதற்கு திட்டமிட்டுவருவதாகவும், இதில் தான் நம்பிக்கையோடு இருப்பதாகவும் கூறியுள்ளார்.
இத்திருத்தூதுப் பயணம், கூடிய விரைவில் நடைபெறுவதற்காக இறைவேண்டல் செய்யுமாறும், திருத்தந்தை திருப்பயணிகளைக் கேட்டுக்கொண்டார்.
வருகிற ஜூலை மாதம் 2ம் தேதி முதல் 7ம் தேதி வரை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், காங்கோ சனநாயக குடியரசு, மற்றும், தென் சூடான் நாடுகளுக்கு திருத்தூதுப் பயணம் மேற்கொள்வதாய் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆயினும், இப்பயணம் தள்ளிவைக்கப்பட்டிருப்பதற்கு, திருத்தந்தை தொடர்ந்து துன்புறும் முழங்கால் மூட்டுவலியே காரணமாகும்.
மேலும், இத்திருத்தூதுப் பயணம் தள்ளிவைக்கப்பட்டிருப்பது குறித்து ஜூன் 10, இவ்வெள்ளியன்று அறிவித்த, திருப்பீட செய்தித் தொடர்பகத்தின் இயக்குனர் மத்தேயோ புரூனி அவர்கள், திருத்தந்தையின் மருத்துவர்களின் ஆலோசனைப்படி இப்பயணம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது என்றும், இப்பயணம் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்