தேடுதல்

ஏழையை அரவணைக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் ஏழையை அரவணைக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் 

திருத்தந்தையின் 6வது வறியோர் உலக நாள் செய்தி

திருஅவையில் 6வது வறியோர் உலக நாள், இவ்வாண்டு நவம்பர் 13ம் தேதி ஞாயிறன்று சிறப்பிக்கப்படுகின்றது

மேரி தெரேசா: வத்திக்கான்

சமுதாயத்தில் ஏழைகள் மீது நமக்குள்ள மிகப்பெரும் கடமைகள், மற்றும், ஒருமைப்பாட்டுணர்வு ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும், மதிப்பையும் உணர்ந்து செயல்படுமாறு, ஜூன் 14, இச்செவ்வாயன்று கிறிஸ்தவர்களைக் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இவ்வாண்டு நவம்பர் 13ம் தேதி சிறப்பிக்கப்படும் 6வது வறியோர் உலக நாளுக்கென்று  வெளியிடப்பட்டுள்ள தனது செய்தியில், கிறிஸ்தவர்கள், தங்களின் நம்பிக்கையை செயலில் வெளிப்படுத்தவேண்டியதன் அவசியத்தையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

கொரிந்து நகர் கிறிஸ்தவர்கள், தேவையில் இருக்கும் சகோதரர் சகோதரிகளோடு ஒருமைப்பாட்டுணர்வை வெளிப்படுத்துவதற்கு அவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளை ஊக்கப்படுத்தும்வண்ணம், “இயேசு கிறிஸ்து உங்களுக்காக ஏழையானார்” (காண்க. 2 கொரி.8:9) என்று, புனித பவுல் அவர்களுக்கு எழுதியதை மையப்படுத்தி திருத்தந்தை இச்செய்தியை தயாரித்துள்ளார்.

நம்மைச் சுற்றியுள்ள பல்வேறு ஏழ்மையின் வடிவங்கள் மற்றும், நம் வாழ்வுமுறை குறித்து சிந்திப்பதற்கு உதவும் சவால் நிறைந்த சூழலில் இவ்வாண்டு இவ்வுலக நாள் இடம்பெறுகின்றது என்று கூறியுள்ள திருத்தந்தை, தற்போதைய உலகின் நிலவரங்கள் குறித்தும் எடுத்துரைத்துள்ளார்.

உக்ரைன் போர்

கோவிட்-19 பெருந்தொற்றின் எதிர்விளைவு உருவாக்கிய பொருளாதாரச் சரிவிலிருந்து உலகம் மீண்டுவரத் தொடங்கியுள்ள இவ்வேளையில், இவ்வுலகை உக்ரைன் போர் என்ற மற்றொரு பெருந்துயர் பாதித்துள்ளது என்றும், இதில் மக்களின் சுயதீர்மானத்தின் கொள்கைகளை மதிக்காமல் தன் சொந்த விருப்பத்தை திணிக்கும் நோக்கத்தில் வல்லரசு நேரிடையாக ஈடுபட்டுள்ளதால், இது மிகவும் சிக்கலானதாக உள்ளது என்றும் திருத்தந்தை கூறியுள்ளார்.

போரின் அறிவற்றதன்மை ஏழ்மையை அதிக அளவில் உற்பத்திசெய்துள்ளது எனவும், வன்முறை, பாதுகாப்பற்ற மக்களைத் தாக்குகின்றது எனவும் கூறியத் திருத்தந்தை, இந்நிலை, தம் ஏழ்மையால் நாம் செல்வராகும்படி செல்வராயிருந்தும், நமக்காக ஏழையான கிறிஸ்துவின் மீது கண்களைப் பதித்து, ஏழைகளின் தேவைகளுக்கு உதவவேண்டியதை வலியுறுத்துகிறது என அச்செய்தியில் கூறியுள்ளார்.

திருஅவையில் 6வது வறியோர் உலக நாள், இவ்வாண்டு நவம்பர் 13ம் தேதி ஞாயிறன்று சிறப்பிக்கப்படுகின்றது. 2017ம் ஆண்டிலிருந்து, வறியோர் உலக நாள், கிறிஸ்து அரசர் பெருவிழாவுக்கு முந்தையை ஞாயிறன்று சிறப்பிக்கப்படுகின்றது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 June 2022, 14:54