தேடுதல்

திருத்தந்தை: திருஅவையில் அனைவருக்கும் இடமிருக்கிறது

திருத்தூதர்கள் பேதுரு, பவுல் ஆகிய இரு புனிதர்களின் சான்றுகள், மனிதம் நிறைந்த ஓர் உலகை உருவாக்குவதற்கு விரைவாகச் செயல்பட அழைப்புவிடுக்கின்றன - திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான்

ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 29ம் தேதி சிறப்பிக்கப்படும் திருத்தூதர்கள் பேதுரு மற்றும் பவுல் பெருவிழாவன்று, வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவிலில் திருத்தந்தையர் திருப்பலி நிறைவேற்றி, பேராயர்கள் முக்கிய திருவழிபாடுகளில் அணியும் கழுத்துப்பட்டை எனப்படும் பால்யங்களை ஆசிர்வதித்து அவற்றை புதிய பேராயர்களுக்கு அணிவிக்கின்றனர். வத்திக்கானில் நடைபெறும் இப்பெருவிழாத் திருப்பலியில் பங்குகொள்ள இயலாத பேராயர்களுக்கு, அவை அவர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. ஜூன் 29, இப்புதன் உள்ளூர் நேரம் காலை 9.30 மணிக்கு வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவிலில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பிரசன்னத்தில், உரோம் புனித பவுல் பெருங்கோவில் தலைமைக்குருவான கர்தினால் James Michael Harvey அவர்கள் இப்பெருவிழா திருப்பலியை நிறைவேற்றினார் இத்திருப்பலியில் முதலில் கர்தினால் ஹார்வி அவர்கள், புதிய பேராயர்கள் பற்றி திருத்தந்தையிடம் எடுத்துரைத்தார். அதற்குப்பின் ஒவ்வொரு பேராயரும் உறுதிமொழி எடுத்தனர். பின்னர் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பால்யங்களை ஆசீர்வதித்து 32 புதிய பேராயர்களுக்கு வழங்கினார். இந்தியாவின் பாண்டிச்சேரி-கடலூர் பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட், போபால் பேராயர் அலங்காரம் ஆரோக்ய செபஸ்டின் துரைராஜ் (இறைவார்த்தை சபை), திருவனந்தபுரம் இலத்தீன் வழிபாட்டுமுறை பேராயர் தாமஸ் ஜேசயன் நெட்டோ ஆகிய மூவரும் திருத்தந்தையிடம் பால்யங்களைப் பெற்றனர். கடந்த ஆண்டில் உலகில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால், 44 புதிய பேராயர்கள்  நியமிக்கப்பட்டனர். வெண்மைநிற கம்பளியால் ஆன பால்யங்களில் கருப்புநிற சிலுவைகள் பொறிக்கப்பட்டுள்ளன. இவை, பேராயர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள மேய்ப்புப்பணியின் அடையாளங்களாக உள்ளன. இத்திருப்பலியில், கான்ஸ்தாந்திநோபிள் கிறிஸ்தவ ஒன்றிப்பு சபையின் பேராயர் Telmissos Job அவர்கள் தலைமையில் பிரதிநிதிகள் குழு ஒன்றும் இத்திருப்பலியில் பங்குபெற்றது.

பேராயர்கள் பால்யம் பெறுகின்றனர்
பேராயர்கள் பால்யம் பெறுகின்றனர்

திருத்தந்தையின் மறையுரை

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்திருப்பலியின் வாசகங்களை (தி.பணிகள் 12,1-11);(2திமொ.4:6-8,17-18); (மத்.16:13-19) மையப்படுத்தி ஆற்றிய மறையுரையின் சுருக்கம் இதோ...

ஏரோது அரசனால் திருத்தூதர் பேதுரு, சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது, ஆண்டவரின் தூதர் அங்குச் சென்று, பேதுருவைத் தட்டியெழுப்பி, “உடனே எழுந்திடும்” (தி.பணிகள்.12:7) என்று கூறினார். அதேநேரம், திருத்தூதர் பவுல் தன் வாழ்க்கை முழுவதையும் நோக்கியபோது, “நான் நல்லதொரு போராட்டத்தில் ஈடுபட்டேன்”  என்று சொல்லியுள்ளார். “உடனே எழுந்திடும்”, “நல்லதொரு போராட்டத்தில் ஈடுபட்டேன்” என்ற இவ்விரு கூற்றுகளும், ஒருங்கிணைந்து பயணம் என்ற திருஅவையின் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள இன்றைய கிறிஸ்தவ சமுதாயத்திற்குக் கூறுவது என்ன? என்ற கேள்வியோடு மறையுரையைத் தொடங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தூதர்கள் பேதுரு, பவுலின் அனுபவங்கள் நமக்குக் கூறுவது என்ன?

“உடனே எழுந்திடும்”, “நல்லதொரு போராட்டத்தில் ஈடுபட்டேன்” ஆகிய இரண்டும், “உடனே எழுந்திருக்கவும்”, “நல்லதொரு போராட்டத்தில் ஈடுபடவும், திருஅவைக்கு அழைப்புவிடுக்கின்றன.

“உடனே எழுந்திடும்”

ஆண்டவரின் தூதர் பேதுருவிடம், “உடனே எழுந்திடும்” என்று சொல்கிறார். விழித்தெழு, எழுந்திடு ஆகிய இரு வினைச்சொற்களும், உயிர்ப்பு ஞாயிறு பற்றிய நினைவுகளை   நமக்குக் கொணர்கின்றன. “உடனே எழுந்திடும்” என்பது, பேதுரு ஏரோதின் சிறையிலிருந்து தப்பிவருவதற்குத் தொடக்கமாக இருந்தது. அதேநேரம், அது, திருஅவைக்கு, உயிர்ப்பின் பேருண்மையில் நுழைவதற்கு விடுக்கப்படும் ஓர் அழைப்பாகவும், ஆண்டவர் நமக்குச் சுட்டிக்காட்ட விரும்பும் பாதைகள் வழியாக, அவர் நம்மை வழிநடத்த நம்மை அனுமதிப்பதாகவும்  இருக்கின்றது. ஆயினும், பல நேரங்களில், சோம்பல், மாற்றம்பெற அச்சம் உட்பட சில எதிர்ப்புணர்வுகள், அப்பாதைகளில் செல்வதற்கு நம்மைத் தடைசெய்கின்றன. தற்போது திருஅவையில் இடம்பெறும் ஒருங்கிணைந்த பயணம் என்ற நடவடிக்கை, நம் சொந்தச் சிறைகளைப் பின்னுக்குத் தள்ளி, உலகைச் சந்திப்பதற்கு நாம் எழுந்து நடக்கும் திருஅவையாக மாறுமாறு அழைப்புவிடுக்கின்றது.

திருத்தூதர்கள் பேதுரு  பவுல் பெருவிழா திருப்பலி
திருத்தூதர்கள் பேதுரு பவுல் பெருவிழா திருப்பலி

“நல்லதொரு போராட்டத்தில் ஈடுபட்டேன்”

திமொத்தேயுவுக்கு எழுதிய திருமடலில், “நல்லதொரு போராட்டத்தில் ஈடுபட்டேன்” என புனித பவுல் கூறியிருப்பதில், அவர், வரலாறு முழுவதும் தொடரும் போராட்டத்தை நோக்குகிறார். ஏனென்றால், பலர் இயேசுவை ஏற்பதற்குத் தயாராக இல்லை. மாறாக, தங்களின் சொந்த விருப்பங்கள்படி நடக்கவும், மற்ற போதகர்களைப் பின்பற்றவும் விரும்புகிறார்கள். புனித பவுல், தன் சொந்தப் போராட்டங்களில் ஈடுபட்டதன்வழியாக, திமொத்தேயு மற்றும், கிறிஸ்தவர்களை, தன் பணிகள், போதனைகள் ஆகியவற்றை மிகுந்த கவனத்தோடு மேற்கொள்ள அழைப்புவிடுக்கிறார். புனித பவுலின் வார்த்தைகள், நமக்கும் வாழ்வின் வார்த்தைகளாக உள்ளன. அவை, நாம் ஒவ்வொருவரும் தங்களுக்குரிய பங்கை வழங்கி, மறைப்பணி சீடர்களாகச் செயல்படுவதற்கு அழைக்கப்பட்டுள்ளனர் என்பதை உணர்வதற்கு உதவுகின்றன. இவ்வாறு மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நவீன கிறிஸ்தவர்களுக்கு இரு கேள்விகளை முன்வைத்தார்.    

இரு கேள்விகள்

திருஅவைக்காக நான் என்ன செய்கிறேன்? என முதலில் நம்மையே நாம் கேள்வி கேட்கவேண்டும். திருஅவைக்கு எதிராக குறைகூறுவதை நிறுத்தவேண்டும். பேரார்வம், மற்றும், தாழ்ச்சியோடு திருஅவையின் பணிகளில் கிறிஸ்தவர்கள் ஈடுபடவேண்டும். திருஅவையில் எந்த ஒரு தனிமனிதரும் மற்றவர் இடத்திலோ அல்லது, அவருக்கு மேலாகவோ இல்லை. ஒவ்வொருவரும் ஒரு பங்கைக் கொண்டிருக்கின்றனர். இதுவே திருஅவையில் நடைபெறும் ஒருங்கிணைந்த பயணம் என்ற நடவடிக்கையாகும்.

அடுத்து, மனிதம், நீதி, தோழமை, கடவுளுக்குத் திறந்தமனம், மனிதர் மத்தியில் உடன்பிறந்த உணர்வு ஆகியவை நிறைந்த ஓர் உலகை அமைக்க திருஅவையாக நாம் ஒன்றிணைந்து என்ன செய்யலாம்? என்பது இரண்டாவது கேள்வியாகும். இவ்வாறு சொல்வது, திருஅவை வட்டத்துக்குள் முடங்கி, பயனற்ற விவாதங்களில் சிக்கிக்கொள்வது என்ற அர்த்தம் அல்ல, மாறாக, உலகின் பிசைந்தமாவில் புளிக்காரமாக ஒருவர் மற்றவருக்கு உதவுபவர்களாக இருக்கவேண்டும் என்பதாகும். இதனை இரத்தின சுருக்கமாகச் சொல்லப்போனால், நாம் பராமரிப்புக் கலாச்சாரத்தை ஊக்குவிப்பவர்களாகவும், பலவீனர்கள்மீது பரிவன்பைக் காட்டுபவர்களாகவும் இருக்கவேண்டும் என்பதாகும். ஊழலின் அனைத்து வடிவங்களுக்கு எதிராய்ப் போராட திருஅவை அழைக்கப்பட்டுள்ளது. அதன் வழியாக, அனைவரின் வாழ்வில் நற்செய்தியின் மகிழ்வு சுடர்விடும்.

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா திருப்பலி
புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா திருப்பலி

இறுதியில் இத்திருப்பலியில் பால்யங்களைப் பெற்ற புதிய பேராயர்களிடம், விழிப்புடன் மந்தையின் வாசனையை அறிந்து, உடனடியாக எழுந்து பணியாற்றவும், தனியாக இல்லாமல், இறைமக்களோடு சேர்ந்து நல்லதொரு போராட்டத்தில் ஈடுபடவும் அவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ். பேராயர்கள், திருத்தந்தையோடு ஒன்றித்திருப்பதன் அடையாளமாக பால்யம் இருக்கின்றது என்பதை நினைவுபடுத்தி, ஒன்றிணைந்து பயணம் மேற்கொள்ள அழைப்புவிடுத்தார். அதனால் நாம் நற்செய்தியின் விதையாகவும், உடன்பிறந்த உணர்வுக்குச் சான்றுகளாகவும் இருக்கமுடியும் எனவும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மறையுரையில் கூறியுள்ளார். இத்திருப்பலியின் இறுதியில், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 June 2022, 15:07