தேடுதல்

கிறித்தவ ஒன்றிப்பு ஆர்த்தடாக்ஸ் சபையின் பிரதிநிதிகள் குழுவை திருப்பீடத்தில் சந்திக்கும் திருத்தந்தை கிறித்தவ ஒன்றிப்பு ஆர்த்தடாக்ஸ் சபையின் பிரதிநிதிகள் குழுவை திருப்பீடத்தில் சந்திக்கும் திருத்தந்தை  

இறைத்தந்தை போன்று எல்லாருக்கும் நன்மை செய்வோம் : திருத்தந்தை

மனத்தாழ்மை, இறைவேண்டல், மனவலிமை ஆகியவற்றைக் கொண்டு ஒரு புதிய வாழ்வை நோக்கி நம் பயணத்தைத் தொடங்குவோம் : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

கிறித்தவ ஒன்றிப்பு ஆர்த்தடாக்ஸ் சபையின் பிரதிநிதிகள் குழுவை ஜூன் 30, இவ்வியாழனன்று திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வன்முறையை வெறுத்து அமைதியை விதைத்த இயேசுவின் வழியில் நாமும் அமைதிக்காக உழைக்க வேண்டும் என்று அழைப்புவிடுத்துள்ளார்.

கிறித்தவ ஒன்றிப்பு ஆர்த்தடாக்ஸ் சபையின் மறைந்த முதுபெரும் தந்தை Athenagoras அவர்களின் அறிவுக்கூர்மையையும் மன வலிமையையும் எடுத்துக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவர் கூறிய “சகோதரி கிறிஸ்தவ சபைகள், சகோதரர் மக்கள்” என்பதை விளக்கிப் பேசினார்.

தனது உரையின் தொடக்கத்தில் உக்ரைன் போரை நினைவு கூர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தற்போது போரைப் பற்றி விவாதிப்பதைவிட முதலில்  போரினால் துன்புறுவோருடன் இணைந்து துன்புறவும் அவர்களுக்கு உதவவும், நமக்கான மனமாற்றத்தை நாமே உணர்ந்துகொள்ளவும் முக்கியத்துவம் அளிக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

போரினால் பாதிக்கப்பட்டோர் எத்தனை பெரிய துயரங்களுக்கும் இன்னல்களுக்கும் ஆளாகியிருப்பார்கள் என்பதையெல்லாம் எண்ணிப்பார்க்க வேண்டும் என்று எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புலம்பெயர்ந்தோருக்கும், ஏழைகளுக்கும், மனதளவில் காயமுற்றோருக்கும் இயேசு காட்டிய பரிவன்பை நாமும் இத்தகையோருக்கு காட்டிடவேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

“உனது வாளை அதன் உறையில் திரும்பப் போடு. ஏனெனில், வாளை எடுப்போர் அனைவரும் வாளால் அழிந்து போவர்" (மத் 26:52) என்ற இயேசுவின் வார்த்தையை சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ், கெத்சமனித் தோட்டத்தில் வன்முறையை விரும்பாத இயேசு, தான் உயிர்த்த பிறகும் அமைதியை மட்டுமே விரும்பினார் என்பதையும் அவர்களுக்கு விளக்கியுள்ளார்.  

“சகோதரி கிறிஸ்தவ சபைகள், சகோதரர் மக்கள்” என்பது ஒரு உண்மையான உலகளாவிய உடன்பிறந்த உணர்வு நிலையை உணர்ந்துகொள்வதற்கான இன்றியமையாத நிபந்தனையாகும் என்றும், இது அனைவருக்கும் நீதியை வழங்குவதிலும், அனைவரையும் ஒரே திருஅவையாக ஒன்றுபடுத்துவதிலும் வெளிப்படுகிறது என்பதையும் திருத்தந்தை பிரான்சிஸ் எடுத்துரைத்தார்.

கிறிஸ்துவே நமது அமைதி என்றும், அவரது மனுவுரு எடுத்தல், இறப்பு மற்றும் உயிர்ப்பின் வழியாக மக்களிடையே நிலவிய பகைமை மற்றும் பிரிவினையின் சுவர்களைத் தகர்த்தெறிந்தார் என்றும் கூறிய திருத்தந்தை, மனத்தாழ்மை, அதிகமான இறைவேண்டல், மனவலிமை ஆகியவற்றைக் கொண்டு ஒரு புதிய வாழ்வை நோக்கி நம் பயணத்தைத் தொடங்குவோம் என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 June 2022, 14:05