தேடுதல்

கப்புச்சின் துறவு சபை ஆயர் பவுலோ மார்த்திநெல்லி கப்புச்சின் துறவு சபை ஆயர் பவுலோ மார்த்திநெல்லி 

தெற்கு அரேபியாவின் அப்போஸ்தலிக்க ஆட்சிப்பீடத்திற்கு புதிய தலைவர்

அன்னை மரியாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த மே மாதத்தில், கிறிஸ்தவ வாழ்வின் சிறந்த ஆயுதம், இறைவேண்டல் – திருத்தந்தை பிரான்சிஸ்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்

அன்னை மரியாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த மே மாதத்தில், கிறிஸ்தவ வாழ்வின் சிறந்த ஆயுதம், இறைவேண்டல் என்பதை, அந்த அன்னையிடமிருந்து கற்றுக்கொள்வோம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மே 2, இத்திங்களன்று வெளியிட்ட டுவிட்டர் செய்தியில் கேட்டுக்கொண்டுள்ளார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்திங்களன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் குறுஞ்செய்தியில் “அன்னை மரியாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த மே மாதத்தில், கிறிஸ்தவ வாழ்வின் சிறந்த ஆயுதம் இறைவேண்டல் என்பதை, அந்த அன்னையிடமிருந்து கற்றுக்கொள்வோம், இடைவிடாத செபத்தினாலன்றி தீமைக்கு எதிரான வெற்றி கிடையாது” என்ற சொற்கள் இடம்பெற்றிருந்தன.

மேலும், ஒன்றிணைந்து இறைவேண்டல் செய்வோம் #PrayTogether என்ற ஹாஷ்டாக்குடன், மே 01, இஞ்ஞாயிறன்று திருத்தந்தை வெளியிட்டுள்ள ஆறு டுவிட்டர் குறுஞ்செய்திகளில், உலக அமைதிக்காக அன்னை மரியாவிடம் மன்றாடுவோம் என்று கேட்டுக்கொண்டுள்ளார். “மே மாதத்தில், அமைதிக்காகச் செபமாலை செபிப்போம். மரியாவின் நகரம் எனப்படும் உக்ரைனின் மாரியுப்போல் நகரம் மீது என் எண்ணங்கள் செல்கின்றன, அந்நகரில் சிக்குண்டுள்ள மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் கிடைப்பதற்கு வழிசெய்யப்படவேண்டும்” என, டுவிட்டர் செய்தி ஒன்றில் திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார். 

தெற்கு அரேபியாவின் புதிய அப்போஸ்தலிக்கத் தலைவர்

மேலும், மிலான் உயர்மறைமாவட்டத்தில் துணை ஆயராகப் பணியாற்றிவந்த, 64 வயது நிரம்பிய கப்புச்சின் துறவு சபை ஆயர் பவுலோ மார்த்திநெல்லி அவர்கள், தெற்கு அரேபிய அப்போஸ்தலிக்க ஆட்சிப்பீடத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், ஏமன் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய தெற்கு அரேபிய அப்போஸ்தலிக்க ஆட்சிப்பீடத்தில், 4 கோடியே 30 இலட்சம் மக்கள் உள்ளனர். இப்பகுதியில் ஆசிய நாடுகளிலிருந்து வேலைசெய்யும் மக்களே அதிகம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 May 2022, 15:21