திருத்தந்தை: உலகின் அமைதிக்காக செபமாலை செபிப்போம்
மேரி தெரேசா: வத்திக்கான்
மனித வரலாற்றில் கடவுளின் இரக்கம்நிறை தலையீடு, தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறது, மற்றும், வலியோரைத் தாழ்த்துகிறது என்பதைச் சுட்டிக்காட்டும் இறைவாக்கினராக மரியா இருக்கின்றார் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இச்செவ்வாயன்று கூறியுள்ளார்.
அன்னை மரியா, எலிசபெத்தம்மாளைச் சந்தித்த விழாவான மே 31, இச்செவ்வாயன்று தன் டுவிட்டர் பக்கத்தில், சந்திப்பு (#Visitation) என்ற ஹாஷ்டாக்குடன் வெளியிட்டுள்ள குறுஞ்செய்தியில் இவ்வாறு கூறியுள்ள திருத்தந்தை, மரியாவின் நம்பிக்கை, இறைவாக்குப் பண்பைக்கொண்டது என்று பதிவுசெய்துள்ளார்.
மனித வரலாற்றில், கடவுளின் பிரசன்னத்தையும், உலகின்போக்கிற்கு முரண்படும் வகையில் தாழ்நிலையில் இருப்போரை உயர்த்தி, மற்றும், வலியோரைத் தாழ்த்துகின்ற (லூக்.1:52) கடவுளின் இரக்கம்நிறை தலையீட்டையும் சுட்டிக்காட்டுகின்ற இறைவாக்குப் பண்பின் அடையாளமாக மரியா, தன் வாழ்வால் விளங்குகிறார் என்று திருத்தந்தை அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அமைதிக்காக செபமாலை
மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இச்செவ்வாயன்று வெளியிட்டுள்ள மற்றொரு குறுஞ்செய்தியில், இன்று மாலை 6 மணிக்கு, மேரி மேஜர் பெருங்கோவிலில் அமைதிக்காகச் செபமாலை செபிப்போம். இந்த உலகம் காத்திருக்கும் அமைதி எனும் கொடையை அமைதியின் அரசியின் பரிந்துரையால் கடவுளிடமிருந்து பெற ஒன்றுசேர்ந்து செபிப்போம் என்ற சொற்கள் இடம்பெற்றிருந்தன.
https://www.youtube.com/watch?v=-EEoigsFfFM
இந்திய-இலங்கை நேரம் இச்செவ்வாய் இரவு 9.30 மணிக்குத் தொடங்கும் இவ்வழிபாட்டில், உலகின் அனைத்து அன்னை மரியா திருத்தலங்களும், அனைத்துக் குடும்பங்கள், குழுமங்கள், விசுவாசிகள் என எல்லாரும் தன்னோடு இணைந்து, அமைதியின் அரசியிடம், அமைதி எனும் கொடைக்காக மன்றாடுமாறு, இஞ்ஞாயிறு அல்லேலூயா வாழ்த்தொலி உரைக்குப்பின் திருத்தந்தை கேட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்