சீன கத்தோலிக்கருக்காக சகாய அன்னையிடம் திருத்தந்தை செபம்
மேரி தெரேசா: வத்திக்கான்
சகாய அன்னையே, சீனாவிலுள்ள கத்தோலிக்கரின் வாழ்வுப் பயணத்தை உம்மிடம் அர்ப்பணிக்கின்றோம் என்று, இவ்வன்னையின் விழாவை இச்செவ்வாயன்று சிறப்பித்த சீனக் கத்தோலிக்கருக்காக வேண்டியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
சகாய அன்னை விழாவான மே 24 இச்செவ்வாயன்று ஒன்றிணைந்து செபிப்போம், (#PrayTogether) கிறிஸ்தவர்களின் சகாய அன்னை (#MaryHelpOfChristians) என்ற ஹாஷ்டாக்குகளுடன் வெளியிட்டுள்ள தன் டுவிட்டர் செய்தியில், திருத்தந்தை, சீனக் கத்தோலிக்கருக்காகச் செபித்துள்ளார்.
மரியே, கிறிஸ்தவர்களின் சகாயமே, விண்ணக அரசியே, உம்மிடம் இறைஞ்சும் மக்கள் அனைவரின் சோதனைகள், வேதனைகள், மன்றாட்டுகள், நம்பிக்கைகள் ஆகிய அனைத்தையும், வரலாற்றின் ஆண்டவரிடம் சமர்ப்பித்தருளும் என்று, திருத்தந்தை அச்செய்தியில் மேலும் இறையன்னையிடம் செபித்துள்ளார்.
சீனாவின் ஷங்காய் நகரில் அமைந்துள்ள ஷேஷன் திருத்தலத்தில், அன்னை மரியா, கிறிஸ்தவர்களுக்கு உதவிபுரியும் அன்னையாக வணங்கப்பட்டு வருகிறார். இவ்வன்னையின் விழாவை, சீனக் கத்தோலிக்கர், மே 24, இச்செவ்வாயன்று சிறப்பித்தனர்.
இதற்கிடையே, மே 22, இஞ்ஞாயிறு அல்லேலூயா வாழ்த்தொலி உரைக்குப் பின்னும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சகாய அன்னையை தங்களின் பாதுகாவலராகப் போற்றி வருகின்ற சீனக் கத்தோலிக்கருக்காகச் செபித்தார், அம்மக்களோடு தனது ஆன்மீக நெருக்கத்தைத் தெரிவிப்பதாகக் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Laudato Si' வாரம்
மேலும், இவ்வாரத்தில் சிறப்பிக்கப்பட்டுவரும் Laudato Si' வாரத்தை மையப்படுத்தி இச்செவ்வாயன்று மற்றொரு குறுஞ்செய்தியை தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவுசெய்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பொருளாதாரத்தைச் சீரமைப்புசெய்வது குறித்து சிந்திக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
இவ்வாறு செய்வதால், நீதிநிறைந்த. நீடித்த, நிலைத்த மற்றும், நம் பொதுவான இல்லமாகிய பூமிக்கோளத்தை மதிக்கின்ற ஓர் உலகு உருவாகும், மற்றும், நம் கண்களை இயேசுவின்மீது பதித்து, சிறந்ததோர் வருங்காலத்தை நோக்கி பயணம் மேற்கொள்ள முடியும் என்று திருத்தந்தை கூறியுள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்