தேடுதல்

மங்கோலியாவில் புத்தமத குரு ஒருவருடன் அருள்பணி Giorgio Marengo மங்கோலியாவில் புத்தமத குரு ஒருவருடன் அருள்பணி Giorgio Marengo 

இருப்பதை இல்லாதவரோடு பகிர்ந்துகொள்வதே உண்மையான செல்வம்

திருப்பீடத்திற்கும், மங்கோலியாவிற்கும் இடையே தூதரக உறவுகள் உருவாக்கப்பட்டதன் 30ம் ஆண்டை சிறப்பிக்கும்விதமாக, அந்நாட்டின் புத்தமதப் பிரதிநிதிகள் குழு ஒன்று, வத்திக்கானைப் பார்வையிட்டு வருகின்றது

மேரி தெரேசா: வத்திக்கான்

வாழ்க்கையில் உண்மையான செல்வம், இருப்பதை இல்லாதவரோடு பகிர்ந்துகொள்வதாகும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மே 27, இவ்வெள்ளியன்று தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட குறுஞ்செய்தியில் கூறியுள்ளார்.

உலகப்போக்கு அதிகரித்துவரும் இன்றைய உலகில், உண்மையான செல்வம் என்ன என்பது குறித்து தன் டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, உண்மையான செல்வம், வெறுமனே பொருள்களைக் குவித்துவைப்பது அல்ல, மாறாக, அவற்றை நியாயமான முறையில், நம்மைச் சுற்றித் தேவையில் இருப்பவர்களோடு பகிர்ந்துகொள்வதாகும் என்று தெரிவித்துள்ளார்.

மங்கோலிய புத்தமத குழு

மேலும், ஆசிய நாடான மங்கோலியாவில் கத்தோலிக்கத் திருஅவையின் பிரசன்னம் மற்றும், திருப்பீடத்திற்கும், மங்கோலியாவிற்கும் இடையே தூதரக உறவுகள் உருவாக்கப்பட்டது ஆகிய இரு நிகழ்வுகளின் முப்பதாம் ஆண்டை சிறப்பிக்கும்விதமாக, அந்நாட்டின் புத்தமதப் பிரதிநிதிகள் குழு ஒன்று, மே 27, இவ்வெள்ளி, 28, சனி ஆகிய இரு நாள்கள், வத்திக்கானைப் பார்வையிட்டு வருகின்றது.

முதன்முறையாக வத்திக்கானைப் பார்வையிட்டுவரும் இக்குழு, இவ்வெள்ளி காலையில், பல்சமய உரையாடல் திருப்பீட அவையையும், இவ்வெள்ளி மாலையில், வத்திக்கானின் அருங்காட்சியகத்தையும் பார்வையிட்டது.

மங்கோலியாவில் 2010ம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, அந்நாட்டு மக்கள் தொகையில் 53 விழுக்காட்டினர் புத்த மதத்தினர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 May 2022, 13:21