திருத்தந்தை: மற்றவரின் வலுவற்றநிலையை ஏற்றுக்கொள்ளுங்கள்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்
அருள்சகோதரிகள், தங்களின் தனிப்பட்ட, மற்றும், மற்றவரின் வலுவற்றநிலையை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மே 05, இவ்வியாழனன்று பெண் துறவு சபைகளின் தலைவர்களிடம் கூறியுள்ளார்.
UISG எனப்படும் உலகளாவிய பெண் துறவு சபைகளின் தலைவர்கள் அமைப்பு, மே 2, இத்திங்களன்று உரோம் நகரில் துவக்கிய 22வது ஆண்டு நிறையமர்வு மாநாட்டில் பங்குபெற்ற ஏறத்தாழ 900 பெண் துறவு சபைகளின் தலைவர்கள், அம்மாநாட்டின் நிறைவாக, மே 5, இவ்வியாழனன்று, வத்திக்கானின் திருத்தந்தை புனித 6ம் பவுல் அரங்கத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்தனர்.
தனது வலது முழங்காலில் ஏற்பட்டுள்ள வலி காரணமாக, இச்சந்திப்பிற்கு சக்கர நாற்காலியில் வந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தலைவர்களுக்கென்று ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த உரையை வழங்காமல், அந்நேரத்தில் தன் எண்ணத்தில் எழுந்த சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்டார். மேலும், திருத்தந்தை ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த உரை, அத்தலைவர்களுக்கு விநியோகிக்கப்பட்டது.
இசந்திப்பில், இறுதி இரவுணவில் இயேசு, திருத்தூதர் பேதுருவின் காலடிகளைக் கழுவியது, இயேசுவைச் சந்தித்தபின்னர், மிகப்பெரும் விடுதலையை அனுபவித்த மகதலா மரியா ஆகிய இருவர் பற்றி நற்செய்தியில் கூறப்பட்டிருப்பதை மையப்படுத்திப் பேசினார்.
வலுவற்றநிலை, பணிவிடை
இந்த இருவர் பற்றித் தியானிக்கையில், பேதுரு, தான் பணிவிடை பெறுவதற்காக, தனது மனநிலை மாற்றப்படுவதற்கு தன்னை அனுமதித்தார், இறைமகன் இயேசுவும் பணியாள் என்ற நிலையில், தம்மை வலுவற்றநிலைக்கு உட்படுத்தினார், இது, இயேசுவின் வாழ்வு பணிவிடை வழியாக மட்டுமே புரிந்துகொள்ள முடியும் என்பதைக் காட்டுகிறது என்று திருத்தந்தை கூறினார்.
நாமும் பணிவிடைபுரியும்போது, நமது மற்றும், மற்றவரின் வலுவற்றநிலையை ஏற்கவேண்டும் என்று திருஅவை அழைப்புவிடுக்கின்றது என்றுரைத்த திருத்தந்தை, திருஅவையின் இப்பாதையில் நுழைவதற்கும், தங்களின் அதிகாரத்தை சேவையாக வாழ்வதற்கும், துறவு சபைத் தலைவர்கள் தங்கள் சபைகளை, காலடிகளைக் கழுவும் இந்த நிகழ்வில் நுழைவதற்கு வழிநடத்தவேண்டும் என்று கூறினார்.
துறவு வாழ்வில் சிலநேரங்களில் வலுவற்றநிலையை ஏற்க கடினமாக இருந்தாலும்கூட, துறவியர் அதனை ஏற்கவேண்டும் என்று திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.
மகதலா மரியாவின் கடந்தகால வரலாற்றையும் தவிர்த்து அவர் திருத்தூதராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்றுரைத்த திருத்தந்தை, திருஅவையின் முழு ஒன்றிப்புக்காக, சேவை மற்றும், செவிமடுக்கும் மனநிலையில் வாழவேண்டிய அவசியம் இக்காலத்திற்குத் தேவைப்படுகின்றது என்பதை, பேதுருவும், மரியாவும் உணர்த்துகின்றனர் என்று கூறினார். திருஅவையில் ஒருங்கிணைந்த பயணம் பற்றியும் இச்சந்திப்பில் தன் சிந்தனைகளை திருத்தந்தை பகிர்ந்துகொண்டார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்