‘சுவிஸ் கார்ட்ஸ்’ ஆற்றும் பணிகள், ஆன்மீகத்தை வளர்க்க உதவுகின்றன
மேரி தெரேசா: வத்திக்கான்
திருத்தந்தையரின் மெய்க்காப்பாளர்களாகப் பணியாற்றும், ‘சுவிஸ் கார்ட்ஸ்’ அமைப்பினர், திருத்தந்தையைப் பாதுகாப்பதற்கு ஆற்றுகின்ற பணியில், குழுமத்தைக் கட்டியெழுப்பவும், தங்கள் வாழ்வில் இறையழைப்பைக் கண்டுணரவும் முயற்சிக்கவேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வெள்ளியன்று கேட்டுக்கொண்டார்.
மே 06, இவ்வெள்ளியன்று, ‘சுவிஸ் கார்ட்ஸ்’ அமைப்பில் புதிதாக இணைந்திருக்கும் 36 இளையோர், அவர்களின் குடும்பத்தினர் மற்றும், பாப்பிறை சுவிஸ் கார்ட்ஸ் அமைப்பின் பிரதிநிதிகள் ஆகியோரை, வத்திக்கானின் கிளமெந்தினா அறையில் சந்தித்து தன் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.
‘சுவிஸ் கார்ட்ஸ்’ படைவீரர்களோடு சேர்ந்து விழாவில் பங்கெடுப்பது ஓர் அழகான தருணம் என்றுரைத்த திருத்தந்தை, வத்திக்கானில் சில ஆண்டுகள் பணியாற்ற தங்கள் வாழ்வை அர்ப்பணித்திருப்பது, உலகளாவியத் திருஅவையின் இதயத்தில் முழு பொறுப்புடன் செயல்படுவதாக உள்ளது என்று கூறியுள்ளார்.
சுவிஸ் கார்ட்ஸ், தனியாள்களாக இல்லாமல் குழுமமாகப் பணியாற்றுவது ஒரு சவாலாகும், ஏனெனில் பல்வேறு ஆளுமைகள், மனநிலைகள், உணர்வுகள் போன்றவற்றைக் கொண்டிருப்பவர்களோடு ஒரே பாதையில் சேர்ந்து பயணிக்கவேண்டியுள்ளது என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாளின் ஒவ்வொரு நேரமும் குழும வாழ்வைத் தழுவிக்கொள்ளுங்கள் என்று, அவர்களிடம் கூறினார்.
இவர்கள் உரோம் பெருநகரில் தங்கியிருக்கும் நாள்கள், கிறிஸ்தவர்களாக ஆன்மீகத்தில் வளர்வதற்கு உதவுவதாக மதிக்கப்படவேண்டும் மற்றும், நம் ஒவ்வொருவருக்கும் கடவுள் வைத்துள்ள திட்டத்தைக் கண்டுணரவும், அந்நாள்கள் உதவுகின்றன எனவும் திருத்தந்தை எடுத்துரைத்தார்.
அண்மையில் விபத்தில் இறந்த இளம் சுவிஸ் கார்ட்ஸ் Silvan Wolf அவர்களுக்காகச் செபிப்போம் என்று கூறிய திருத்தந்தை, சுவிஸ் கார்ட்ஸ் அனைவரும் ஆற்றிவரும் பணிகளை நினைத்து, திருப்பீடமும் வத்திக்கான் நகரமும் பெருமையடைகிறது என்றுரைத்து, அன்னை மரியா, மற்றும், அவர்களின் பாதுகாவலர்களான புனிதர்கள் செபஸ்தியான், மார்ட்டின் ஆகியோரின் பரிந்துரையை வேண்டி தன் உரையை நிறைவு செய்தார்.
சுவிஸ் கார்ட்ஸ்
திருத்தந்தையரின் மெய்க்காப்பாளர்களாகப் பணியாற்றும் ‘சுவிஸ் கார்ட்ஸ்’ என்ற அமைப்பில், மே 06, இவ்வெள்ளி மாலையில் 36 இளைஞர்கள் புதிதாக இணைகின்றனர். 1527ம் ஆண்டில் உரோம் நகர் சூறையாடப்பட்டபோது, திருத்தந்தை 7ம் கிளமெண்ட் அவர்கள், பாப்பிறை மாளிகையைவிட்டுத் தப்பித்துச் செல்வதற்காகப் போராடிய 189 சுவிட்சர்லாந்து படைவீரர்களில் 147 பேர் உயிரிழந்தனர். இந்தப் படைவீரர்கள் உயிரிழந்த மே 6ம் நாளன்று, ஒவ்வோர் ஆண்டும், வத்திக்கானில், புதிய சுவிஸ் காவல் வீரர்கள் உறுதிமொழி எடுத்து, பணியில் சேருவது வழக்கம். இவ்வாண்டு இந்நிகழ்வு, மே 6, வருகிற வியாழனன்று நடைபெறும்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்