தேடுதல்

மங்கோலிய புத்த மதப் பிரதிநிதிகள் குழு மங்கோலிய புத்த மதப் பிரதிநிதிகள் குழு  

மனித சமுதாயம் வன்முறையின் அனைத்து முறைகளையும் புறக்கணிக்க...

போர்கள் மற்றும், கலவரங்களால் கடுமையாய்ப் பாதிக்கப்பட்டுள்ள ஓர் உலகில், மதத் தலைவர்கள், அமைதிக் கலாச்சாரத்தைக் கட்டியெழுப்ப உதவ வேண்டும் - திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான்

மனித வாழ்வின் அனைத்துக் கூறுகளிலும், வன்முறையற்ற நிலையை மனித சமுதாயம் ஏற்றுக்கொள்வதற்கு, பல்சமய உரையாடல் உதவவேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மங்கோலிய புத்தமதப் பிரதிநிதிகளிடம் இச்சனிக்கிழமையன்று கூறியுள்ளார்.

திருப்பீடத்திற்கும், கிழக்கு ஆசிய நாடான மங்கோலியாவிற்கும் இடையே தூதரக உறவுகள் உருவாக்கப்பட்டதன் முப்பதாம் ஆண்டை சிறப்பிக்கும்விதமாக, ஐந்து பேர் கொண்ட மங்கோலிய புத்த மதப் பிரதிநிதிகள் குழு ஒன்று மே 27, இவ்வெள்ளி, 28, இச்சனி ஆகிய இரு நாள்களாக வத்திக்கானை முதன்முறையாகப் பார்வையிட்டுள்ளது.

இந்நிகழ்வின் ஒரு கட்டமாக, மே 28, இச்சனிக்கிழமை காலையில் திருப்பீடத்தில் தன்னைச் சந்திக்க வந்திருந்த, அக்குழுவிடம் தன் எண்ணங்களை எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கத்தோலிக்கத் திருஅவையோடு இணைந்து, அமைதியான சமுதாயத்தைக் கட்டியெழுப்ப ஆவல்கொண்டிருக்கும் அக்குழுவினரைப் பாராட்டினார்.

அமைதியே, இக்கால மனித சமுதாயத்தின் உள்ளார்ந்த ஏக்கமாக இருக்கின்றது, இதனால், அமைதி மற்றும், வன்முறையற்ற கலாச்சாரத்தை, எல்லா நிலைகளிலும் உரையாடல் வழியாக ஊக்குவிப்பது உடனடித் தேவையாக இருக்கின்றது என்று திருத்தந்தை கூறியுள்ளார்.

சுற்றுச்சூழலுக்கு இழைக்கப்படும் வன்முறை உட்பட, அதன் அனைத்து வடிவங்களும் புறக்கணிக்கப்பட, எல்லா மக்களுக்கும் அழைப்புவிடுப்பதாக இந்த உரையாடல் அமையவேண்டும் என்று கூறியுள்ள திருத்தந்தை, சிலர் இன்னும், வன்முறையை நியாயப்படுத்த மதத்தைப் பயன்படுத்தும் வழிகளைத் தேடுகின்றனர் என்பதை கவலையோடு குறிப்பிட்டார்.

மங்கோலிய புத்த மதப் பிரதிநிதிகள் குழு
மங்கோலிய புத்த மதப் பிரதிநிதிகள் குழு

இயேசுவும், புத்தரும்: அமைதியின் மனிதர்கள்

இயேசு, புத்தர் ஆகிய இருவரின் போதனைகள் குறித்து குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்விருவருமே, அமைதியை உருவாக்குபவர்கள், மற்றும், அகிம்சையை ஊக்குவிப்பவர்கள் எனவும், பகைவர்களை அன்புகூருங்கள் என, தம் சீடர்களுக்குக் கூறிய இயேசு, சிலுவை மரணம் வரை வன்முறையற்ற வழிகளைக் கையாண்டார், அவ்வாறு அவர் நம் அமைதியாக மாறினார் மற்றும், பகைமைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் எனவும் கூறியுள்ளார்.

கி.மு. முதல் ஆயிரமாம் ஆண்டில் வாழ்ந்த, பழங்கால இந்தியாவின் ஆன்மீகப் போதகரான கௌதம புத்தர், தன் போதனைகளின் மையமாக அகிம்சை மற்றும், அமைதி ஆகிய இரு அம்சங்களைக் கொண்டிருந்தார் என்றுரைத்த திருத்தந்தை, மனிதர், மற்றவர்மீது வெற்றிகொள்ளும் வழிகளைத் தேடாமல், தன்னுணர்வில் வாழும் ஆசையைக் கொண்டிருக்குமாறு ஊக்கப்படுத்தினார் என்று குறிப்பிட்டார்.

போர்கள் மற்றும், கலவரங்களால் கடுமையாய்ப் பாதிக்கப்பட்டுள்ள ஓர் உலகில், அவரவர் மதங்களின் போதனைகளில் ஆழமாக வேரூன்றியுள்ள மதத் தலைவர்கள், மனித சமுதாயம் வன்முறையைப் புறக்கணிக்கவும், அமைதிக் கலாச்சாரத்தைக் கட்டியெழுப்பவும் தூண்டவேண்டிய கடமையைக் கொண்டிருக்கின்றனர் என்று கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

சமய சுதந்திரம், நட்பு

மங்கோலிய புத்த மதத்தினரும், கத்தோலிக்கரும் அனைவரின் நலனுக்காக, தங்களுக்கு இடையே நட்புணர்வை வலுப்படுத்துமாறு கேட்டுக்கொண்ட திருத்தந்தை, மங்கோலியாவின் அமைதியான பல்சமய நல்லிணக்க வாழ்வின் நீண்ட கால மரபு, சமய சுதந்திரத்தை உறுதியுடன் நடைமுறைப்படுத்தவும், பொது நலனுக்காக ஒன்றிணைந்து உழைக்கவும் உதவும் என்ற நம்பிக்கையையும் தெரிவித்துள்ளார்.

மங்கோலியாவின் Ulaanbaatar திருப்பீடப் பிரதிநிதி ஆயர் Giorgio Marengo அவர்களும் இக்குழுவினரோடு திருத்தந்தையைச் சந்தித்துள்ளார். புத்த மதத்தினரைப் பெரும்பான்மையாகக் கொண்ட மங்கோலியாவில் 6 ஆலயங்கள் உள்ளன. மேலும் அந்நாட்டிலுள்ள ஏறத்தாழ 1,200 கத்தோலிக்கருக்கு 33 அருள்பணியாளர்கள் மற்றும், 44 அருள்சகோதரிகள் மறைப்பணியாற்றுகின்றனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 May 2022, 16:05