மருந்துக்கடைக்காரர்கள் நலமான வாழ்வுமுறையை ஊக்குவிக்கவேண்டும்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்
கோவிட்-19 பெருந்தொற்று நெருக்கடி, கத்தோலிக்க விழுமியத்தை வெளிப்படுத்துவதற்கு கத்தோலிக்க மருந்துக் கழகங்களுக்கு நல்வாய்ப்பை வழங்கியுள்ளவேளை, இப்பெருந்தொற்று நெருக்கடியில் கத்தோலிக்க மரபின்படி பணியாற்றிய அக்கழகங்களைப் பாராட்டுவதாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.
மே 02, இத்திங்களன்று, கத்தோலிக்க மருந்துக் கழகங்களின் உலகளாவிய கூட்டமைப்பின் 15 பிரதிநிதிகளை திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அம்மருந்துக் கழகங்கள், சமுதாயத்தில் வகிக்கவேண்டிய முக்கிய பங்கு பற்றியும் விளக்கிக் கூறினார்.
மருந்துக்கடைக்காரர்கள், குடிமக்களுக்கும், நலவாழ்வு அமைப்புக்கும் இடையே பாலம் போன்று உள்ளனர் என்றும், அவர்கள், நலவாழ்வு அமைப்பின் சுமையை எளிதாக்குகின்றனர், மற்றும், சமுதாயப் பதட்டநிலைகளைக் குறைக்கின்றனர் என்றும் கூறியத் திருத்தந்தை, இப்பணி மிகவும் விவேகத்தோடும், தொழில் தர்மத்தோடும் ஆற்றவேண்டியுள்ளது என்று கூறினார்.
ஒருங்கிணைந்த சூழலியலுக்கு....
உடல்நலப் பராமரிப்புப் பணியில், மக்களோடு நட்போடு உரையாடவேண்டியது மிக முக்கியம் என்பதை வலியுறுத்திக் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மருந்துக்கடைக்காரர்கள், கடவுள் நம்மிடம் ஒப்படைத்துள்ள பொதுவான இல்லத்தைப் பராமரிக்கும் பணியில், ஒருங்கிணைந்த சூழலியலுக்கு மக்களை அழைத்துச்செல்ல முடியும் என்றும் குறிப்பிட்டார்.
சுற்றுச்சூழலை மிகவும் மதிக்கின்ற ஒரு வாழ்வுமுறையைக் கற்றுக்கொள்ள நாம் எல்லாரும் அழைக்கப்பட்டுள்ளோம், பொதுவாக, உடலுக்கு நலம்தரும் உணவை உட்கொள்வது, நம் வாழ்வுமுறையின் ஒரு பகுதியாக உள்ளது, எனவே இம்முறையை மருந்துக்கடைக்காரர்கள் மக்களுக்கு கற்றுக்கொடுக்கவேண்டும் என்று திருத்தந்தை பரிந்துரைத்தார்.
இச்சந்திப்பின் இறுதியில், கத்தோலிக்க மருந்துக்கழகங்களின் பாதுகாவலராகிய புனித ஜான் லெயோநார்து மற்றும், அன்னை மரியாவிடம் அவர்களை அர்ப்பணித்து ஆசிர்வதித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனக்காகச் செபிக்க மறக்கவேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்