தேடுதல்

ஆப்கானிஸ்தானில் குழந்தை தொழில் ஆப்கானிஸ்தானில் குழந்தை தொழில்  (AFP or licensors)

திருத்தந்தை: பல பிஞ்சுக் கரங்களின் மாண்பு மறுக்கப்படுகின்றது

சிறார் தொழில்முறை ஒழிக்கப்படுவதற்கு, முதலில் வறுமையை ஒழிக்கும் நடவடிக்கைகளில் கவனம் செலுத்தப்படவேண்டும் – திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான்

பல பிஞ்சுக் கரங்கள், அடிப்படை உரிமைகளையும் மாண்பையும் இழந்து கடுமையாய் உழைக்கின்றன என்று, தென்னாப்ரிக்காவின் டர்பன் நகரில் நடைபெற்றுவரும், சிறார் தொழில்முறை ஒழிப்பு குறித்த ஐந்தாவது உலகளாவிய கருத்தரங்கிற்கு அனுப்பியுள்ள செய்தியில் கவலையோடு குறிப்பிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

வயல்கள் மற்றும், கனிமச் சுரங்கங்களில் கடுமையாய் வேலைசெய்வது, தண்ணீர் எடுக்க நீண்ட தூரம் பயணம் செய்வது, வேலை செய்வதால் பள்ளிக்குச் செல்லமுடியாமல் இருப்பது, பாலியலுக்குப் பயன்படுத்தப்படுவது போன்றவற்றால், பல சிறார் மற்றும், வளர்இளம் பருவத்தினரின் அடிப்படை உரிமைகளும், மனித மாண்பும் மறுக்கப்பட்டுள்ளன என்று திருத்தந்தை கூறியுள்ளார்.

ILO எனப்படும் உலக தொழில் நிறுவனத்தின் தலைவர் Guy Ryder அவர்களுக்கு இச்செய்தியை அனுப்பியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சிறார் தொழில்முறைக்கு வறுமையே முக்கிய காரணம் எனவும், இதனை ஒழிப்பதற்கு இக்கருத்தரங்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என தான் நம்புவதாகவும் கூறியுள்ளார்.

உலக அளவில் சிறார் தொழில்முறை ஒழிப்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்பட்டாலும், உலக அளவில் நிலவும் நலவாழ்வு நெருக்கடியின் தாக்கம் மற்றும், உலகின் பல பகுதிகளில் கடுமையான வறுமை அதிகரிப்பு ஆகியவை, சிறார் தொழில்முறை ஒழிப்பு நடவடிக்கையை மோசமாக்கியுள்ளன என்றும் திருத்தந்தை கவலை தெரிவித்துள்ளார்.

கத்தோலிக்கத் திருஅவை, சிறார் தொழில்முறை குறித்து மிகுந்த கவலை கொண்டுள்ளது எனவும், நாம் சிறாரோடு எம்முறையில் தொடர்பு வைத்திருக்கின்றோமோ அந்த முறையிலேதான் அவர்களின் மனித மாண்பையும், அடிப்படை உரிமைகளையும் மதிக்கின்றோம் எனக் கூற முடியும் எனவும் திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே, இவ்வுலகில் ஏறத்தாழ 16 கோடிச் சிறார் தொழில்முறையால் பாதிக்கப்பட்டுள்ளவேளை, சிறார் தொழில்முறையை முற்றிலும் ஒழிக்காமல் நாம் ஓய்வெடுக்க முடியாது என்று, Guy Ryder அவர்கள் கூறியுள்ளார்.

மே 15, இஞ்ஞாயிறன்று தொடங்கியுள்ள இக்கருத்தரங்கிற்கு, ILO நிறுவனத்தின் தலைவர் Guy Ryder அவர்களுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பியுள்ள இச்செய்தியை, தென்னாப்ரிக்காவின் திருப்பீடத் தூதர் பேராயர் Peter Bryan Wells அவர்கள், இத்திங்களன்று அக்கருத்தரங்கில் வாசித்தார். இக்கருத்தரங்கு, மே 20, வருகிற வெள்ளியன்று நிறைவடையும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 May 2022, 15:50