வரலாறு பற்றிய கல்வி, அமைதியை வளர்க்க சிறந்த வழியை வழங்கமுடியும்
மேரி தெரேசா: வத்திக்கான்
வரலாறு பற்றிய கல்வி, அமைதியைப் பேணி வளர்க்க, மதிப்புமிக்க வழியை வழங்கமுடியும் என்று, வரலாற்று அறிவியல் பாப்பிறை ஆணைய உறுப்பினர்களிடம் மே 28, இச்சனிக்கிழமையன்று கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
வரலாற்று அறிவியல் பாப்பிறை ஆணையத்தின் ஆண்டு நிறையமர்வுக் கூட்டத்தில் பங்குகொண்ட அதன் உறுப்பினர்களை திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிப திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மக்கள் மற்றும், நாடுகளின் உண்மையான வரலாறு பற்றி ஆய்வுகள், மற்றும் உரையாடல் ஆகியவற்றை மேற்கொள்வதற்கு, வரலாற்று ஆசிரியர்கள், துணிச்சலான முன்னெடுப்புக்களை வழங்குவார்கள் என்ற நம்பிக்கையையும் தெரிவித்தார்.
வரலாறு குறித்த, குறிப்பாக திருஅவையின் வரலாறு குறித்த ஆய்வை ஊக்குவிக்கும் நோக்கத்தில், 1954ம் ஆண்டில் திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள் வரலாற்று அறிவியல் பாப்பிறை ஆணையத்தை உருவாக்கினார். இது, திருத்தந்தைக்கும், திருப்பீடத்திற்கும், தலத்திருஅவைகளுக்கும் பணியாற்றுவதாக அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாணையத்தில் மூன்று கண்டங்களின் 14 நாடுகளைச் சேர்ந்த பல கலாச்சார. மற்றும், பன்னாட்டு அம்சங்களைக்கொண்டவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
டுவிட்டர் செய்தி
நம் பொதுவான இல்லமாகிய இப்பூமிக்கோளம் பாதுகாக்கப்படவேண்டும் என்று இறைவனை வேண்டுவோம் என, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மே 28, இச்சனிக்கிழமையன்று கேட்டுக்கொண்டுள்ளார்.
Laudato Si திருமடல் வெளியிடப்பட்டதன் ஏழாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, திருஅவையில் Laudato Si வாரம் கடைப்பிடிக்கப்பட்டுவரும்வேளை, LaudatoSi7, LaudatoSi வாரம் என்ற ஹாஷ்டாக்குகளுடன் இச்சனிக்கிழமையன்று வெளியிட்டுள்ள தன் டுவிட்டர் செய்தியில் திருத்தந்தை இவ்வாறு அழைப்புவிடுத்துள்ளார்.
நம் துறவுக் குழுமங்கள், நம் பொதுவான இல்லத்தையும், நம் மத்தியில் வாழ்கின்ற புறக்கணிக்கப்பட்டோரையும் பாரமரிப்பதில் இறைவாக்குரைக்கும் பணியாளர்களாகச் செயல்படும்வண்ணம் அவர்களுக்காக ஒன்றிணைந்து இறைவேண்டல் செய்வதற்கு உங்கள் அனைவருக்கும் அழைப்புவிடுக்கிறேன் என்ற சொற்கள் திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்