தேடுதல்

அலுவலகப் பணியில் கர்தினால் மார்செல்லோ செமெராரோ அலுவலகப் பணியில் கர்தினால் மார்செல்லோ செமெராரோ  

இறைஊழியர் Maria de la Concepción அருளாளராக அறிவிக்கப்பட அனுமதி

இஸ்பானியரான இறைஊழியர் Maria de la Concepción (1905-1927) அவர்கள், தனது 22வது வயதில், காசநோயால் இறைபதம் சேர்ந்தார். இவரிடம் செபித்ததால், 2014ம் ஆண்டில், 2 வயது இஸ்பானியச் சிறுமி ஒருவர் அற்புதமாய் குணமடைந்துள்ளார்

மேரி தெரேசா: வத்திக்கான்

இஸ்பானிய இறைஊழியர் Maria de la Concepción Barrecheguren y García அவர்களின் பரிந்துரையால் நடைபெற்ற புதுமை ஒன்றை. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அங்கீகரித்துள்ளதன்பேரில், அவர் அருளாளராக உயர்த்தப்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மே 21, இச்சனிக்கிழமையன்று, புனிதர், மற்றும், அருளாளர் நிலைகளுக்கு உயர்த்தப்படும் வழிமுறைகளை ஒருங்கிணைக்கும் பேராயத்தின் தலைவர், கர்தினால் மார்செல்லோ செமெராரோ அவர்கள், திருத்தந்தையை திருப்பீடத்தில் சந்தித்து, இஸ்பானிய இறைஊழியர் Maria de la Concepción, மற்றும், ஏழு இறைஊழியர்களின் புண்ணிய வாழ்வு குறித்த சிறப்பு விவரங்களைச் சமர்ப்பித்தார்.

இஸ்பானிய பொதுநிலையாளர்

1905ம் ஆண்டில் பிறந்த இஸ்பானியரான இறை ஊழியர் Maria de la Concepción Barrecheguren y García (1905-1927) அவர்கள், 1927ம் ஆண்டில், தனது 22வது வயதில், காசநோயால் இறைபதம் சேர்ந்தார். இவர் தனது உடல்நலக்குறைவால் அவர் விரும்பிய துறவு உடையை அணியமுடியாமல் இருந்தார். இவரிடம் செபித்ததால், 2014ம் ஆண்டில், 2 வயது இஸ்பானியச் சிறுமி ஒருவர் அற்புதமாய் குணமடைந்தார்.

புதிய வணக்கத்துக்குரியவர்கள்

இச்சனிக்கிழமையன்று அங்கீகரிக்கப்பட்டுள்ள இறைஊழியர்கள் ஏழுபேரில் போலந்து நாட்டு பொதுநிலையாளர் Giovanna Woynarowska (1923-1979) அவர்கள் உட்பட 5 பேர் ஆண்கள், மற்றும் 2 பேர் பெண்கள். போலந்து பொதுநிலையாளர், உடல் உறுப்புகள் குறைபாட்டால் கடுமையாகத் துன்புற்றபோதிலும், கிறிஸ்தவ நம்பிக்கையில் உறுதியாயிருந்து, பல்வேறு விதமான நோய்களால் துன்புற்ற பலருக்கு உதவிபுரிந்துள்ளார். அப்போதைய பேராயர் Karol Wojtyla (திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல்) அவர்களால் திருமடச் சார்பற்ற சபையில் இவர் தன்னை அர்ப்பணித்துக்கொண்டார்.

  • மேலும், புனித தெரேசா சபையை ஆரம்பித்த பிலிப்பீன்ஸ் பேராயர் Teofilo Bastida Camomot (1914-1988);  
  • இத்தாலியின் Telese-Cerreto Sannita ஆயர் Luigi Sodo (1811-1895);
  • திருச்சிலுவை உடன்பணியாளர்கள் அருள்சகோதரிகள் சபையை ஆரம்பிக்க உதவிய இஸ்பானிய மறைமாவட்ட அருள்பணி Giuseppe Torres Padilla (1811-1878);
  • இத்தாலிய அருள்பணியாளர் Giampietro di Sesto San Giovanni, Brasiliaவில் அசிசியின் புனித பிரான்சிஸ் கப்புச்சின் மறைப்பணியாளர் அருள்சகோதரிகள் சபையைத் தொடங்கிய  Jôao Pedro di Sesto San Giovanni (1868-1913);  
  • பிரான்சிஸ்கன் சபையின் அருள்பணி Alfredo Morganti (1886-1969);
  • மத்ரித் நகரத்தில் மூவொரு அருள்சகோதரிகள் சபையை ஆரம்பிக்க உதவிய Marianna Allsopp González-Manrique, (1854-1933) ஆகியோரின் நற்பண்புகளுக்கு திருத்தந்தை இசைவு தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 May 2022, 17:04