தேடுதல்

“Scholas Occurrentes” உலகளாவிய கல்வி அமைப்பு “Scholas Occurrentes” உலகளாவிய கல்வி அமைப்பு  (AFP or licensors)

திருத்தந்தை: சிறுமிகளுக்கு தரமான கல்வி வழங்கப்படவேண்டும்

இப்பூமியை தந்தை என அழைப்பதில்லை, அன்னை என்றுதானே நாம் அழைக்கின்றோம். எனவே இப்பூமிக்கோளத்தைப் பாதுகாப்பதில் பெண்கள் மிகவும் சக்திவாய்ந்தவர்கள் - திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான்

மே 19, இவ்வியாழன் மாலையில், உரோம் உர்பான் பாப்பிறை பல்கலைக்கழகத்தில், “Scholas Occurrentes” உலகளாவிய கல்வி அமைப்பை, "Scholas Occurrentes" பாப்பிறை அமைப்பாக உருவாக்கி, அதனைக் கொண்டாடிய விழாவில் கலந்துகொண்டு, உலக அளவில் சிறுமிகளுக்கு தரமான கல்வி வழங்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்திக் கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

அயர்லாந்து நாட்டின் தலைநகர் டப்ளினை மையமாகக்கொண்டு இயங்கும் யூ2 (U2) இசைக்குழுவின் புகழ்பெற்ற பாடகர் Bono Vox அவர்கள் முக்கிய விருந்தினராக கலந்துகொண்ட இவ்விழாவில் இஸ்பானிய மொழியில் தன் சிந்தனைகளைத் தெரிவித்த  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

யூ2 குழுவின் இசை நிகழ்ச்சியோடு சிறப்பிக்கப்பட்ட இவ்விழாவில், போனோ அவர்களும், சிறுமிகளுக்கு கல்வி வழங்குவது, கடும் ஏழ்மையை ஒழிக்க மிகவும் வல்லமைமிக்க சக்தி என்று கூறியுள்ளார்.

சிறுமிகளுக்கு கல்வி

இவ்வுலகிலும் காலநிலையிலும் மாற்றத்தைக் கொணர்வதற்கு பெண்களும், சிறுமிகளும் ஒரே மாதிரியான முக்கிய பங்கைக் கொண்டிருக்கின்றனர் என்று திருத்தந்தையே, தாங்கள் கருதுகின்றீர்களா என போனோ அவர்கள் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த திருத்தந்தை, நாம் இப்பூமியை தந்தை என அழைப்பதில்லை, மாறாக அன்னை என்றுதானே அதை அழைக்கின்றோம் என புன்னகையோடு கூறியுள்ளார்.

Laudato si' உண்மையான சக்தி

ஸ்கோலாஸ் அமைப்பினர், இவ்வுலகில் Laudato si' திருமடலை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்று இளைஞர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த  திருத்தந்தை, படைப்பில் நல்லிணக்கத்தைக் கொணர இளையோர் தொடர்ந்து பணியாற்றவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

நம் பொதுவான இல்லமாகிய இப்பூமிக் கோளத்தைப் பாதுகாப்பதில் பெண்களும், ஸ்கோலாஸ் அமைப்பினரும் மிகவும் சக்திவாய்ந்தவர்களாக உள்ளனர் என்றும், இயற்கையைப் பாதுகாப்பது, படைப்பின் கவிதையைப் பாதுகாப்பதாகும் என்றும் திருத்தந்தை கூறியுள்ளார்.

அமைதிக்காக விளையாட்டு

“Scholas Occurrentes” உலகளாவிய கல்வி அமைப்பு
“Scholas Occurrentes” உலகளாவிய கல்வி அமைப்பு

உலகப் புகழ்பெற்ற கால்பந்தாட்ட வீரர் தியெகோ மாரதோனா அவர்கள் நினைவாக, வருகிற அக்டோபர் மாதம் 10ம் தேதி, உரோம் ஒலிம்பிக் விளையாட்டு அரங்கத்தில், அமைதிக்காக கால்பந்து விளையாட்டுப் போட்டி நடைபெறும் என்றும் இந்நிகழ்வில் அறிவிக்கப்பட்டது.

“Scholas Occurrentes”

Jorge Mario Bergoglio என்ற இயற்பெயரைக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அர்ஜென்டீனா நாட்டின் புவனோஸ் அய்ரஸ் உயர்மறைமாவட்ட பேராயராகப் பணியாற்றியபோது, அந்நகரில் சேரிப் பகுதிகளில் வாழ்ந்த சிறாருக்கு கல்வி வழங்குவதற்கென்று, “Scholas Occurrentes” என்ற கல்வித் திட்டத்தைத் தொடங்கினார். அத்திட்டம் உலகளாவிய ஓர் அமைப்பாக உருவெடுத்து, தற்போது பாப்பிறை அமைப்பாகவும் மாறியுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 May 2022, 16:36