தேடுதல்

புனிதர்பட்ட திருப்பலி நிறைவேற்றும் திருத்தந்தை புனிதர்பட்ட திருப்பலி நிறைவேற்றும் திருத்தந்தை  

புனிதர்பட்ட திருப்பலி - திருத்தந்தையின் மறையுரை

“நாம் கடவுள்மீது அன்பு கொண்டுள்ளோம் என்பதில் அல்ல, மாறாக அவர் நம்மீது அன்புகொண்டுள்ளார்” என்ற செய்தி, நம் நம்பிக்கையின் மையமாக இருப்பதாக.

மேரி தெரேசா - வத்திக்கான்  

“நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்” (யோவா.13:34). இவ்வாறு இயேசு, இவ்வுலகைவிட்டு தம் தந்தையிடம் திரும்பிச் செல்வதற்குமுன் திருத்தூதர்களிடம் கூறியதை நாம் இப்போது வாசிக்க கேட்டோம். இதில் இயேசு, கிறிஸ்தவராக இருப்பதன் அர்த்தம் என்ன என்பது பற்றி நமக்குக் கூறினார். இதுவே, கிறிஸ்து, உண்மையிலேயே நாம், அவரின் சீடர்களா இல்லையா என்பதைத் தெளிந்துதேர்வுசெய்யும் இறுதி அளவுகோலாக, அவரது உயிலாக விட்டுச்சென்ற மரபுரிமையாகும். இது அன்புக் கட்டளை. இந்தக் கட்டளையின் இரு முக்கிய கூறுகள் குறித்து சிந்திப்போம். ஒன்று, “நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல”. இது இயேசு நம்மீது வைத்துள்ள அன்பு பற்றிச் சொல்கிறது, மற்றொன்று எனவே நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்” என்பதாகும்.

“நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல” என்ற வார்த்தைகள் பற்றி முதலில் சிந்திப்போம். இயேசு நம்மை எவ்வாறு அன்புகூர்ந்தார்? அவர் தன் வாழ்வின் இறுதிவரை, தன்னையே முழுமையான கொடையாகக் கையளித்தன் வழியாக அன்பு கூர்ந்தார்.. திருத்தூதர்கள் எருசலேம் மாடி அறையில் மிகுந்த கவலை கலந்த உணர்வோடு இருந்த அந்த இருளின் இரவில், அவர் பேசிய இச்சொற்கள் நம்மைச் சிந்திக்க வைக்கின்றன. ஏனென்றால், தங்களில் ஒருவர் மறுதலிப்பார் என்று இயேசு கூறியது பற்றி, மனப்பதட்டத்தோடு அவர்கள் இருந்தனர். இயேசுவின் இதயத்தில் நிறைந்திருந்த ஆழ்ந்த கவலையை, திருத்தூதர்களின் இதயங்களில் நிறைந்திருந்த இருளான மேகங்களை, போதகர் அப்பத்துண்டை நனைத்துக்கொடுத்தபின் அவரைக் காட்டிக்கொடுப்பதற்காக அந்த அறையிலிருந்து வெளியே சென்ற யூதாசைப் பார்த்தபோது சீடர்களுக்கு ஏற்பட்ட மனக்கசப்பை... இவற்றை நாம் கற்பனை செய்து பார்க்கலாம். ஆயினும், இயேசு காட்டிக்கொடுக்கப்பட்ட அந்த மணி நேரத்திலும் தம்முடையவர்கள் மீது வைத்துள்ள அன்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறார். வாழ்க்கையின் இருள் மற்றும், சோதனைகளுக்கு மத்தியில், கடவுள் நம்மை அன்புகூர்கிறார் என்பது மிக முக்கியமான ஒன்றாகும்.   

திருப்பலியில் கலந்துகொண்ட அருள்பணியாளர்கள்
திருப்பலியில் கலந்துகொண்ட அருள்பணியாளர்கள்

நம் நம்பிக்கையின் மையம் எது?

சகோதரர் சகோதரிகளே, “நாம் கடவுள்மீது அன்பு கொண்டுள்ளோம் என்பதில் அல்ல, மாறாக அவர் நம்மீது அன்புகொண்டுள்ளார்” (1யோவா.4:10) என்ற செய்தி நம் நம்பிக்கையின் மையமாக இருப்பதாக. அனைத்து வழிகளிலும் இச்செய்தியை நாம் வெளிப்படுத்துவோமாக. இதை நாம் ஒருபோதும் மறக்கக் கூடாது. நம் திறமைகளும் நம் சிறப்புகளும் அல்ல, மாறாக, கடவுளின் எல்லையற்ற, மற்றும், எதிர்பார்ப்பின்றி வழங்கப்படும் விலைமதிப்பில்லாத அன்பு, நம் வாழ்க்கையின் மையமாக இருக்கவேண்டும். நம் கிறிஸ்தவ வாழ்வு, கோட்பாடுகளுடன், நற்பணிகளுடன் அமைந்திருப்பது அல்ல, ஆனால் நம்மிடமிருந்து எந்தப் பதிலும் கிடைப்பதற்கு முன்னமே நாம் அன்புகூரப்படுகிறோம் என்பதை உணர்வதிலிருந்து பிறக்கின்ற வியப்பால் அமைவதாகும். நாம் எதை உற்பத்தி செய்கிறோமோ, எதைச் சமுதாயத்திற்கு வழங்குகிறோமோ அதை வைத்தே மதிப்பிடப்படுகின்றோம் என்பதை உலகம் பல நேரங்களில் நம்மில் பதியவைக்க முயற்சிக்கின்றது, அதேநேரம், நாம் அன்புகூரப்படுகிறோம் என்ற வாழ்வின் எதார்த்தமான உண்மையை நற்செய்தி நமக்கு நினைவுபடுத்துகின்றது. “எந்த ஒரு மனிதரும் நம்மைப் பார்ப்பதற்கு வெகு காலத்திற்கு முன்னரே, கடவுளின் அன்புகூரும் கண்களால் நாம் பார்க்கப்பட்டோம், நாம் அழுவதை அல்லது சிரிப்பதை யாரும் கேட்பதற்கு நீண்ட காலத்திற்கு முன்னரே, நமக்காக அனைத்துக் காதுகளையும் வைத்திருக்கும் நம் கடவுளால் நாம் கேட்கப்பட்டோம். இந்த உலகில் எந்த ஒரு மனிதரும் நம்மிடம் பேசுவதற்கு முன்னரே நித்திய அன்பின் குரலால் நாம் பேசப்பட்டோம். இவ்வாறு சமகாலத்து ஆன்மீக எழுத்தாளர் ஒருவர் பதிவுசெய்திருக்கிறார்”. (H.NOUWEN, Life of the Beloved).

இந்த உண்மையை ஏற்பதற்கு, பலநேரங்களில் புனிதத்துவம் பற்றி நாம் நினைக்கும் வழியில் ஒரு மனமாற்றம் தேவைப்படுகிறது. சில நேரங்களில் நற்பணிகள் ஆற்றுவதற்கு நாம் அதிகமாக முயற்சிகளை எடுக்கவேண்டும் என வலியுறுத்தப்படுவதால், நமது தனிப்பட்ட வீரச்செயல்களை, எதையும் துறப்பதற்கு உள்ள நம் சக்தியை, வெகுமதியைப் பெறும் நோக்கத்தில், சுய-தியாகத்திற்குத் தயாராக இருப்பதை அடிப்படையாகக் கொண்டது புனிதத்துவம் என்ற ஒரு கருத்தியலை உருவாக்கியுள்ளோம். இந்த வழியில் சிந்திப்பதால் புனிதத்துவம் என்பது, அடையமுடியாத இலக்காக மாறிவிடுகிறது. அதற்கு மாறாக, எதார்த்தமான வாழ்வின் சோதனைகளில், தெருக்களின் புழுதிகளில், நம் தினசரி வாழ்வை ஏற்றுக்கொள்வதில் புனிதத்துவத்தைத் தேடுவதை விட்டுவிட்டு, அதனை நம் அன்றாட வாழ்விலிருந்து பிரித்துவிடுகிறோம். புனித அவிலா தெரேசா தன் சகோதரிகளிடம், புனிதத்துவத்தைத் தேடுவது குறித்துச் சொல்லும்போது, “பானைகள் மற்றும் பானைகளுக்கு மத்தியில்” என்று உருவகமாகக் கூறியிருக்கிறார். இயேசுவின் சீடர்களாக இருப்பது, மற்றும், புனிதத்துவத்தின் பாதையில் முன்னேறுவது என்பது, கடவுளன்பின் வல்லமையால் தோற்றமாற்றம் பெறுவதற்கு நம்மையே அர்ப்பணிப்பதே, முதலும் முக்கியமானதுமாக இருக்கவேண்டும். சுயத்தைவிட கடவுளுக்கு, உடலைவிட தூய ஆவியாருக்கு, பணிகளைவிட அருளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும் என்பதை நாம் ஒருபோதும் மறக்கக்கூடாது.

நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்”

புனிதர்பட்ட திருப்பலி நிறைவேற்றும் திருத்தந்தை
புனிதர்பட்ட திருப்பலி நிறைவேற்றும் திருத்தந்தை

ஆண்டவரிடமிருந்து நாம் பெறுகின்ற அன்பு, நம் வாழ்வை மாற்றவல்ல சக்தியாகும். அது, நம் இதயங்களைத் திறக்கின்றது, மற்றும், அன்புகூர நமக்கு உதவுகின்றது. இதனாலே இயேசு, “நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்” என்று சொல்கிறார். இதுவே இரண்டாவது அம்சமாகும். “போல” என்ற சொல், இயேசுவின் அன்பை வெறுமனே பின்பற்றுவது பற்றியது அல்ல, மாறாக, அவர் நம்மிடம் அன்பு செலுத்தியதால், மற்றும், புனிதத்துவத்தின் தம் சொந்த ஆவியை நம் இதயங்களில் பொழிந்துள்ளதால் மட்டுமே நம்மால் அன்புகூர இயலுகின்றது என்பதைப் பற்றியதாகும். அந்த அன்பு குணப்படுத்துகிறது மற்றும், உருமாற்றுகின்றது. இதன் பயனாக, எல்லாச் சூழல்களிலும், நாம் சந்திக்கும் அனைத்து சகோதரர் சகோதரிகளுக்கும் நம்மால் அன்புப் பணிகளை ஆற்ற முடிகின்றது,    

நடைமுறையில் இந்த அன்பை எவ்வாறு வாழ்வது? இயேசு இந்தக் கட்டளையைக் கொடுப்பதற்கு முன்னர், தம் சீடர்களின் காலடிகளைக் கழுவினார். அதற்குப் பிறகு சிலுவை மரத்தில் தன்னையே வழங்கியதன் வழியாக அன்புகூரும் முறையைக் கற்றுக்கொடுத்தார். அன்பு என்பது, பணிவிடை புரிவது மற்றும், ஒருவர் தன் வாழ்வை வழங்குவதாகும். பணிவிடை புரிதல் என்பது, முதலில் நம் விருப்பங்களை வைப்பது அல்ல, மாறாக, பேராசை மற்றும், போட்டிமனப்பான்மை ஆகிய நம் நஞ்சு அமைப்பிலிருந்து விடுபடுவதாகும். புறக்கணிப்பு என்ற புற்றுநோய் மற்றும், தன்னுரிமை என்ற கிருமிக்கு எதிராகப் போராடுவதாகும். கடவுள் நமக்கு அளித்துள்ள தனிவரங்களையும் கொடைகளையும் பகிர்ந்துகொள்வதாகும். சிறப்பாக, நான் மற்றவருக்கு என்ன செய்யவேண்டும் என்று நம்மையே கேட்டுக்கொள்வதாகும். எந்தக் கைம்மாறும் கருதாமல், பணி உணர்வில் அன்றாட வாழ்வை வாழ்வதாகும்.

திருப்பலிக்குப் பிறகு இறைமக்களைச் சந்திக்கும் திருத்தந்தை
திருப்பலிக்குப் பிறகு இறைமக்களைச் சந்திக்கும் திருத்தந்தை

வாழ்வையே வழங்குதல்

அடுத்து, ஒருவர் மற்றவரிடம் அன்புகூருங்கள் என்பது, ஒருவர் தன் வாழ்வையே வழங்குவதாகும். இது, நம்மிடமுள்ள ஏதாவது ஒன்றைக் கொடுப்பது அல்ல, மாறாக, நம்மையே கொடுப்பது பற்றியதாகும். நம் அருகில் இருப்பவர்களின் தேவைகளைத் தேடி, அவர்களுக்கு உதவ முயற்சி எடுப்பதாகும். அல்லது, அவர்களோடு நேரம் செலவழித்து பொறுமையுடன் அவர்களுக்குச் செவிமடுப்பதாகும். அவர்களை தொலைபேசியில் அழைத்து உரையாடுவதாகும். புனிதத்துவம் என்பது, சில வீரதீர அடையாளங்களை உள்ளடக்கியது அல்ல, மாறாக, தினமும் ஆற்றும் பல சிறிய அன்புச்செயல்களைக் கொண்டதாகும். அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வுக்கு அழைக்கப்பட்டு இருக்கிறீர்களா? உங்களது அர்ப்பணத்தை மகிழ்ச்சியோடு வாழ்வதால் புனிதராக இருங்கள். திருமணமானவரா நீங்கள்? கிறிஸ்து திருஅவைக்கு ஆற்றுவதுபோல நீங்கள் உங்கள் கணவர் அல்லது மனைவியை அன்புகூர்வதாலும், அவர்மீது அக்கறை காட்டுவதாலும் புனிதராக இருங்கள். வாழ்வதற்கு வேலை செய்கின்றவரா நீங்கள்? உங்கள் சகோதரர்கள், சகோதரிகளுக்குச் சேவைசெய்வதில் ஒருங்கமைவு மற்றும் திறமையோடு வேலை செய்வதால் புனிதராக இருங்கள். பெற்றோர் அல்லது தாத்தாக்கள், பாட்டிகளா நீங்கள்? சிறாருக்கு இயேசுவை எவ்வாறு பின்செல்வது என்பதைப் பொறுமையோடு கற்றுக்கொடுப்பதன் வழியாக புனிதராக இருங்கள். பதவியில் இருப்பவராக நீங்கள்?  தனிப்பட்ட ஆதாயத்தைப் புறக்கணித்து பொது நலனுக்காகப் பணியாற்றுவதால் புனிதராக இருங்கள்  (Gaudete et Exsultate, 14).

நற்செய்திக்கும், நம் சகோதரர்கள், சகோதரிகளுக்கும் பணியாற்றுவது என்பது, உலக மகிமையைத் தேடாமலும், கைம்மாறு கருதாமலும் நம் வாழ்வை அர்ப்பணிப்பதாகும். இதுவே நமது அழைப்பு. இந்த வழியிலே, இன்று நாம் புனிதர்களாக அறிவித்தவர்கள் பயணம் மேற்கொண்டு தங்களின் புனிதத்துவத்தை வாழ்ந்தார்கள். ஓர் அருள்பணியாளராக, அர்ப்பணிக்கப்பட்ட பெண்களாக, பொதுநிலையினராக, அவர்கள் தங்கள் வாழ்வை நற்செய்திக்கு அர்ப்பணித்திருந்தார்கள், அவர்கள் ஒப்பிடப்படமுடியாத மகிழ்வைக் கண்டுகொண்டவர்கள், ஆண்டவரின் வரலாற்றில் சுடர்விடுபவர்களாக மாறியவர்கள். நாமும் இவ்வாறு வாழ முயற்சிப்போம். ஏனெனில் நாம் ஒவ்வொருவரும் புனிதத்துவத்திற்கு அழைக்கப்பட்டுள்ளோம். நம் சொந்த புனிதத்துவத்தை வடிவமைப்போம். ஆம். ஆண்டவர் நம் ஒவ்வொருவருக்கும் ஒரு திட்டம் வைத்திருக்கிறார். உங்கள் வாழ்க்கைக்கு ஒரு கனவை அவர் வைத்திருக்கிரார். அந்தக் கனவை வரவேற்போம். அதனை மகிழ்வோடு தொடருவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 May 2022, 13:24