தேடுதல்

மறைக்கல்வியுரை: வயதானவர்கள் நீதியின்மீது தாகம் கொண்டிருக்க...

வயதுமுதிர்ந்தோர், தங்களது அறிவை எதற்கும் பயன்படுத்தாமல் சேமித்துவைப்பதற்கு எதிர்கொள்ளும் சோதனையை விலக்கி, நீதியின்மீது கொண்டிருக்கும் ஆர்வத்தை உறுதியாகப் பற்றிக்கொள்ளவேண்டும் – திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான்

மே 25, இப்புதன் காலையில், உரோம் நகரில் பளிச்சென வீசிய கதிரவனின் வெண்கதிர்கள், கோடை காலம் தொடங்கிவிட்டது என்பதை உணர்த்தின.  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இப்புதன் காலையில் ஆற்றவிருந்த மறைக்கல்வியுரையைக் கேட்டு ஆசிர்பெறுவதற்காக, இந்தக் கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல் வத்திக்கானின் தூய பேதுரு வளாகத்தில் ஆயிரக்கணக்கான திருப்பயணிகள் அமர்ந்திருந்தனர். வயதுமுதிர்ந்த திருவிவிலிய மாமனிதர்கள் ஒவ்வொருவர் பற்றியும், கடந்த பத்து புதன் பொது மறைக்கல்வியுரைகளில் தன் கருத்துக்களை எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதனன்று சபை உரையாளர் நூலை மையப்படுத்தி, முதுமை குறித்த தன் சிந்தனைகளை வழங்கினார். இந்நிகழ்வில், வீண், முற்றிலும் வீண், எல்லாமே வீண் என்று துவங்கும் சபை உரையாளர் நூலிலிருந்து ஒரு பகுதி, முதலில் அராபியம் உள்ளிட்ட சில ஐரோப்பிய மொழிகளில் வாசிக்கப்பட்டது. அதற்குப்பின்னர், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் மறைக்கல்வியை இத்தாலியத்தில் ஆரம்பித்தார்.  

நான் வாழ்க்கையில் வெறுப்புக் கொண்டேன். மேலும், உலகில் செய்யப்படுபவை யாவும் எனக்குத் தொல்லையையே கொடுத்தன. எல்லாம் வீண்; யாவும் காற்றைப் பிடிக்க முயல்வதற்கு ஒப்பாகும். நான் இவ்வுலகில் எவற்றையெல்லாம் செய்துமுடிக்க உழைத்தேனோ அவற்றின் மீதெல்லாம் வெறுப்புக் கொண்டேன். ஏனெனில், அவற்றை எனக்குப்பின் வருகிறவர்களுக்கு விட்டுச் செல்ல வேண்டுமென்பது எனக்குத் தெரியும்…. இவையனைத்திற்கும் முடிவுரையாக ஒன்று கூறுகிறேன்; கடவுளுக்கு அஞ்சி நட; அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படி. இதற்காகவே மனிதர் படைக்கப்பட்டனர். நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும், மறைவான செயலுக்குங்கூட, அது நல்லதோ தீயதோ எதுவாயினும், அனைத்திற்கும் கடவுளே தீர்ப்பு வழங்குவார்.(ச.உ.2,17-18; 12,13-14).

புதன் மறைக்கல்வியுரை

அன்புச் சகோதரர், சகோதரிகளே, உங்கள் அனைவருக்கும் காலை வணக்கம். முதுமை குறித்த சிந்தனையில், திருவிவிலியத்தில் மற்றுமொரு அணிகலனாக விளங்கும் சபை உரையாளர் நூல் பக்கம் நம் எண்ணங்களைத் திருப்புவோம். இந்த சிறிய நூலின் துவக்கமே நம்மை திகைக்க வைக்கின்றது. “வீண், முற்றிலும் வீண், எல்லாமே வீண், எல்லாமே “குழப்பம்”, எல்லாமே “புகை”, எல்லாமே “வெறுமை” என்று, அந்நூல் நம்மை சிந்திக்க வைக்கின்றது. நாம் வாழ்வதன் அர்த்தம் பற்றிய கேள்வியை எழுப்புகின்ற இச்சொல்லாடல்களை திருவிவிலியத்தில் காண்பது வியப்பாக இருக்கிறது. எல்லாமே வீண் என்ற மிகப்பெரும் எதார்த்தத்தோடு பேசுகின்ற இந்நூலின் வயதுமுதிர்ந்த ஆசிரியர், ஏமாற்றமான வாழ்வில் வளர்வதும், நம் உலகை சிறந்த இடமாக அமைப்பதற்கு முயற்சிகளைக் கைவிடுவதும் எவ்வளவு எளிது என்பது பற்றிப் பேசுகிறார். இவ்வாறு வாழ்வதற்கு ஏற்படும் சோதனை, நிச்சயமாக நிலைத்திருப்பதுவே. இக்காலத்திலும்கூட மாபெரும் அறிவியல் மற்றும், தொழில்நுட்ப முன்னேற்றம் ஆகியவை, பல நேரங்களில் ஏமாற்ற உணர்வோடு சேர்ந்திருக்கிறது. நீதியும் அமைதியும் அடையமுடியாத இலக்குகள் என்று நாம் அஞ்சுகிறோம். கிறிஸ்தவ ஆன்மீக மரபு, சோம்பல் என்ற பாவத்தைப் பற்றிப் பேசுகின்றது. இது, தீமையை எதிர்க்கவும், புனிதத்தில் வளர முயற்சி செய்யவும் கடவுளின் வார்த்தைக்கும், அவர் நம் உலகிற்கு அளித்துள்ள வாக்குறுதிகளுக்கும் பிரமாணிக்கமாக இருப்பதற்கும் நமக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பின் மீதுள்ள அக்கறையை இழப்பதால் உருவாகிறது. சபை உரையாளர், இத்தகைய அனைத்து பாவங்களையும் புறக்கணிக்கின்றார். மாறாக, அவர், கடவுளின் கட்டளைகளுக்கு கீழ்ப்படியவும், மீட்புத் திட்டத்தில் நம்பிக்கை வைக்கவும், நம்மை வலியுறுத்துகிறார். சபை உரையாளரின் ஞானமும், அனுபவமும், வயதுமுதிர்ந்த அனைத்து மனிதரிலும் பிரதிபலிப்பதாக. இதனால், நம் வாழ்வைப் புதுப்பிப்பதற்கும், நம் உலகை மாற்றுவதற்கும், அவர்கள், தங்களின் நம்பிக்கையை, கடவுளின் வார்த்தையிலும், அதன் வல்லமையிலும் தொடர்ந்து வைப்பார்கள். இவ்வாறு, சபை உரையாளர் நூல் பற்றிய தன் சிந்தனைகளை இப்புதன் மறைக்கல்வியுரையில் வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வயதுமுதிர்ந்தோர், தங்களது அறிவை காரியங்களைச் செய்வதற்குப் பயன்படுத்தாமல், அதனை சேமித்துவைப்பதற்கு ஏற்படும் சோதனையை விலக்கி, நீதியின் மீது கொண்டிருக்கும் ஆர்வத்தை உறுதியாகப் பற்றிக்கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும், மே 24, இச்செவ்வாயன்று Texas நகரில் இடம்பெற்ற படுகொலைகள் பற்றிக் குறிப்பிட்டு, பாகுபாடற்று நடைபெறும் ஆயுத வர்த்தகம் ஒழிக்கப்படவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ். அதற்குப்பின்னர், இம்மறைக்கல்வியுரையில் பங்குகொண்ட அனைவர் மீதும், அவர்களின் குடும்பங்கள் மீதும் நம் இறைத்தந்தையின் இரக்கம்நிறை அன்பு பொழியப்படச் செபித்து, தன் அப்போஸ்தலிக்க ஆசிரையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 May 2022, 15:57